For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு நூற்றாண்டு அரசியல் சகாப்தத்தை ஒரே நொடியில் கவர்ந்து சென்றாயே காலா..!

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி அரசியல் பயணம்- வீடியோ

    - ராஜாளி

    சென்னை: ஒரு நூற்றாண்டு அரசியல் சகாப்தத்தை ஒரே நொடியில் காலன் கவர்ந்து சென்றுவிட்டான். சமூகப் பொருளாதார அடுக்கில் ஒடுக்கப்பட்ட மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை அனைவருக்கும் காவலானாய் இருந்த பெரும் சுவர் சாய்ந்து விட்டது. சாதியாலும், மொழியாலும், இனத்தாலும் அழுத்தப்பட்டுக் கொண்டிருந்த தமிழனத்தின் காவல் இன்று காணாமல் போய்விட்டது. பதின்ம வயதுகளில் அரசியல் பயணத்தை தொடங்கி அடித்தட்டு மக்களுக்காக அயராது உழைத்த தமிழ் குடும்பங்களின் தலைமகன் இன்று தவறிய தினம்.

    ஒரு இனத்தை இருந்த இடம் தெரியாமல் ஒழிக்க மொழியை ஒழித்தால் போதுமென்ற சதியை சரியாக புரிந்துகொண்ட அந்த மக்களின் கலைஞன் முதலில் போராடியது மொழிக்காகவே. வேற்று மொழிக்காக தமிழ் அடையாளம் அழித்து டால்மியாபுரம் என்று ஒன்று தோன்றியதை ஒழிக்க பெரும்படை கொண்டு புறப்பட்ட புறநானூற்று வீரன் அவர். அப்போதே அந்தப் போராட்டத்தை எப்படி வழிநடத்துவது என்று விவாதிப்பதற்காக கூடிய மாநாட்டில் அண்ணா கல்லக்குடி போராட்டத்தை ஒப்படைத்து போய் வா தம்பி போய் வா என்று உரையை நிறைவு செய்கிறார் அண்ணா. அடுத்ததாக பேசத்துவங்கிய போய் வருகிறேன் அண்ணா போய் வருகிறேன் என்று துவங்கி வீர உரை நிகழ்த்துகிறார். அப்போதே தனது உயிரை துச்சமென கருதி நாளை நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து படுக்கிறேன் அப்போது ரயில் எனது மேல் ஏறினால் எனது இரத்தத்தை எடுத்து கல்லக்குடி என்று எழுதுங்கள் என்று மாநாட்டில் சூளுரைத்து சென்ற வீரத் தமிழ் இன்று விடைபெற்றுவிட்டது.

    Tribute to Kalaignar Karunanidhi

    அழகிரி ஆற்றிய உரையில் ஆசைகொண்டு சமூகப்பணி மீது தீராத தாகம் கொண்டு அண்ணாவின் அடியொற்றி அரசியல் செய்த அந்த ஆலமரம் இன்று சாய்ந்து விட்டது யுகம் யுகமாய் ஆண்டான் அடிமையாக ஒரு இனமே ஆண்ட சாதிகளிடம் கட்டுண்டு கிடந்ததை கோபக்கனல் கொண்டு, சமூக நீதியை சாமரமாய் வீசிய அந்த சமூக நீதி காவலன் சந்தனப் பேழைக்குள் உறங்கச் சென்று விட்டது.

    ஈழத் தமிழனுக்காய் இதயம் நொறுங்கியவர் உலகம் ஆயிரமாயிரம் வசைகளை வாரி தூற்றியபோதும் ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை, அரசாங்க முக்கியத்துவம் வாய்ந்த சேதிகளை வெளிவிடாமல் தன மீது எத்தனை பழிகள் வந்தாலும் இன்முகத்தோடு வரவேற்ற அந்த வற்றாத ஜீவநதி இன்று வற்றிப் போய்விட்டது. ஒரு போராளியாக வாழ்க்கையை தொடங்கி, எழுத்தாளானாக, கதாசிரியனாக, கவிஞனாக, தலைவராக என்று பன்முகம் கொண்ட அந்த பாடசாலை இந்திய அரசியலில் பலருக்கு பிரதமர் பதவிகளையும் சிலருக்கு குடியரசு தலைவர் பதவிகளையும் கொடுத்துவிட்டு இன்று ஓய்வெடுக்க சென்றுவிட்டது அந்த ஓய்வறியா சூரியன்.

    Tribute to Kalaignar Karunanidhi

    நெஞ்சுக்கு நீதி எழுத துவங்கிய காலத்திலும் தமிழகத்தை சீரும் சிறப்புமாக ஆண்ட காலத்திலும் ஓய்வெடுக்க பலரும் வற்புறுத்தியபோதும் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இன்று ஓய்வெடுக்கிறான் என்று என் கல்லறையின் மீதுதான் எழுதப்படும் என்று சூளுரைத்த அந்த சூரியன் இன்று தமிழக அரசியல் வானிலிருந்து மறைந்து ஒரு நீங்காத காரிருளில் நம்மை ஆழ்த்தி விட்டது.

    மனிதனை வைத்து மனிதனே இழுத்துச் சென்று தனது வாழ்க்கை பயணத்தை ஓட்டிக்கொண்டு இருந்தவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்து கை ரிக்ஷா என்பதையே ஒழித்து அந்த தொழிலாளத் தோழர்களுக்கு சைக்கிள் ரிக்ஸா கொடுத்து வாழ்வின் வசந்தத்தை காட்டிய அந்த வாடாமலர் இன்று வாடிக்கொண்டிருக்கிறது.

    Tribute to Kalaignar Karunanidhi

    தொழிலாளத் தோழர்களுக்கு என்று ஒரு தினம் அதுவும் விடுமுறையோடு கூடிய தினமாக இருக்கவேண்டும் என்று மே தினத்தை ஊதியத்தோடு வழங்கிய அந்த வள்ளல் பெருமான் இன்று வானமேறி மறைந்து விட்டார்.

    ஆனில் சரிபாதி பெண்கள் என்று வாய் வார்த்தையில் கூறிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பெண்களுக்கு சொத்தில் சரிபாதி என்று சட்டம் இயற்றிய அந்த சாதனை சரித்திரம் இன்று சரிந்துவிட்டது.

    மத்தியில் இருப்பவர்களுக்குத்தான் அதிக அதிகாரம் என்றிருந்த நிலையில் மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலித்த அந்த ஓங்கார கீதம் இன்று மவுனித்துவிட்டது
    சாதி வீதிகளில் சதிராடி மனித குலத்தை வேரறுத்துக் கொண்டிருந்தபோது ஊரெங்கும் சமத்துவபுரம் கொண்டு வந்த சாதனை இன்று சரிந்து விட்டது
    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறி பிறப்பால் அனைவரும் ஒன்றே என்று கூறிய வள்ளுவனுக்கு வள்ளுவர் கோட்டமும் தென் குமரியிலே உலகில் எங்கும இல்லாத அளவுக்கு 133 அடியில் வானளாவ சிலை கண்ட அந்த சீர்மிகு கோபுரம் இன்று சாய்ந்து விட்டது.

    Tribute to Kalaignar Karunanidhi

    உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு சமூக சீர் திருத்தத்திற்கு என்று ஒரு துறை கண்டு தமிழகத்தில் சீர்திருத்தத்தை சீர் தூக்கிய அந்த சீர்மிகு பெருமான் இல்லாத தினம் இன்று.

    சங்கத் தமிழாய் எங்கெங்கும் பொங்கி வந்த அந்த மங்காத கீதம் இன்று ஏனோ ஓய்வெடுக்க சென்று விட்டது.

    ஓய்வறியா சூரியன் இன்று ஓய்வெடுக்க சென்றிருந்தாலும் கலைஞனுக்கு என்றென்றும் மரணமில்லை என்பதை மெய்ப்பித்து அவர் நம்மோடு இருப்பார் என்பது மட்டும் திண்ணம்

    English summary
    A rich Tribute to the legendary leader late Dr Kalaignar Karunanidhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X