For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை: பெண்ணை கொன்றுவிட்டு மனைவி இறந்து போனதாக நாடகமாடிய வக்கீல் தலைமறைவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: கோயம்புத்தூரில் நிதி மோசடி வழக்கிலிருந்து, மனைவியை காப்பாற்ற திட்டமிட்ட வழக்கறிஞர் ஒருவர், சொத்து வழக்கு தொடர்பாக, தன்னை சந்திக்க வந்த பெண்ணை கொலை செய்து, மின் மயானத்தில் எரியூட்டியுள்ள சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த கொலையை போலீசார் கண்டுபிடித்துள்ளதால் வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞரும் அவரது மனைவியும் தலைமறைவாகிவிட்டனர்.

கோவை, சுந்தராபுரம் அடுத்த, குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜவேலு, 44. கோபாலபுரத்தில் இவரது அலுவலகம் உள்ளது. இவரை, சொத்து பிரச்னை தொடர்பாக வழக்கு தொடர, சிவானந்தா காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி அம்மாசை, 45, என்பவர் அடிக்கடி சந்தித்துள்ளார். கடந்த, 2011, டிச., 11ல் ராஜவேலுவை சந்திக்கச் செல்வதாக வீட்டாரிடம் கூறிச் சென்ற அம்மாசை, மர்மமான முறையில் காணாமல் போனார். மாநகர போலீசில் புகார் அளித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவர், நிலத் தகராறில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, மாநகர தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். இக்கொலையில், தேனியைச் சேர்ந்த முத்தமிழ் உட்பட, சிலர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், மணிவேலுக்கு சொந்தமான, 26 சென்ட் நிலத்தை, ராஜவேலு என்பவரது மனைவி, மோகனாவின் பெயருக்கு மாற்றி, பீளமேட்டைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு விற்க முயற்சித்தது அம்பலமானது. மோகனா யார் என, விசாரித்த போது தான், வழக்கறிஞர் ராஜவேலுவின் மனைவி என்பதும், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறி சான்றிதழ் பெற்றதும் தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், வழக்கறிஞர் ராஜவேலுவின் கார் டிரைவர் பழனிச்சாமியிடம் விசாரித்தனர். அப்போது, மேலும் ஒரு கொலை வெளிச்சத்துக்கு வந்தது. கொலை செய்யப்பட்டவர், அம்மாசை என்ற பெண். அவர் தான், சொத்து பிரச்னை தொடர்பாக, 2011ம் ஆண்டில், ராஜவேலுவைச் சந்திக்கச் சென்று, மர்மமான முறையில் காணாமல் போனவர்.

அம்மாசை கொலை தொடர்பாக, டிரைவர் பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின், குறிச்சி கிளை செயலர் பொன்னரசு ஆகியோரை, கைது செய்தனர். போலீசாரின் வலை, தன்னை நெருங்குவதை அறிந்த வழக்கறிஞர் ராஜவேலுவும், அவரது மனைவி மோகனாவும் தலைமறைவாகினர்.

நிதி மோசடி வழக்கு

வழக்கறிஞர் ராஜவேலுவின் மனைவி மோகனா, "ரைட் மேக்ஸ்' என்ற பெயரில், "மல்டி லெவல் மார்க்கெட்டிங்' நிறுவனம் நடத்தி வந்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில், கிளைகளும் இருந்துள்ளன. பொதுமக்களிடம், 12 கோடி ரூபாய் வரை டிபாசிட் பெற்று, திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக, ஒடிசாவில் மட்டுமே, மோகனா மீது, ஐந்து வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கில் இருந்து, மனைவி மோகனாவை தப்பவைக்கவே, அம்மாசையை கொலை செய்து எரித்துள்ளார்.

அம்மாசை கொலை

சம்பவ தினத்தன்று அம்மாசையை போனில் தொடர்பு கொண்ட வழக்கறிஞர், "மாலை, 6:00 மணிக்கு அலுவலகத்துக்கு வா; வழக்கு தொடர்பாக விவாதிக்கலாம்' என, அழைத்துள்ளார். அலுவலகத்துக்குள் நுழைந்த அம்மாசையை, நாற்காலியில் அமர வைத்தார், ராஜவேலு. உள் அறைக்குள் இருந்த கார் டிரைவர் பழனிச்சாமி, பொன்னரசுவுடன் சேர்ந்து, அம்மாசையின் வாயை பொத்தி, ஒயரால் கழுத்தை இறுக்கி, கொலை செய்துள்ளார். பின், சடலத்தை காரில் வைத்து, சுந்தராபுரம் அடுத்து ஹவுசிங் யூனிட்டில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு சென்ற ராஜவேலு. அங்கு, அம்மாசையின் முகத்தை துணியால் மூடி வைத்து, தன் மனைவி மோகனா இறந்து விட்டதாகக் கூறி, அருகிலிருப்போரை நம்பவைத்துள்ளார். அன்றைய தினமே ஆத்துப்பாலம் மின் மயானத்துக்கு எடுத்துச் சென்று, உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து எரியூட்டிவிட்டு வீடு திரும்பினார்.

மோகனா உடன் வாழ்க்கை

அம்மாசையை கொன்று எரித்துவிட்டு மோகனா இறந்துவிட்டதாக, இறப்புச் சான்றிதழ் பெற்ற ராஜவேலு, போலீசாரிடம் சமர்ப்பித்து, வழக்குகளை முடித்தார். அடுத்த சில நாட்களில், ஹவுசிங் யூனிட் வீட்டை காலி செய்து, நகருக்குள் குடியேறி, மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழத் துவங்கினார்.

மூன்றாண்டுகளுக்குப் பின்னர்

ஆனால், மணிவேல் கொலையில், ராஜவேலுவின் தொடர்பு அம்பலமாகி, அதன் மூலம், அம்மாசையின் கொலையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை அறிந்த ராஜவேலு, மனைவியுடன் தலைமறைவாகி விட்டார். கைது செய்யப்பட்ட பழனிச்சாமி, பொன்னரசு இருவரும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திங்களன்று சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவு வழக்கறிஞர் தம்பதியை பிடிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
The city police are on the lookout for a lawyer and his wife after arresting two of their accomplices in connection with the murder of a woman who was thought to have gone missing since 2011. Lawyer ET Rajavel (44) had strangulated M Ammasai, a 45-year-old woman who was his client, at his office in Gopalapuram in the city on December 11, 2011, with the help of accomplices. Rajavel had her death certificate issued in his wife Manoharan Mohana's name. Subsequently, Ammasai was cremated at a facility in Athupalam on December 12.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X