For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன்னார் வளைகுடாவில் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை ரத்து செய்க: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி வழங்கினால், சுற்றுச் சூழல் நாசமடைவதோடு, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்துவிடும். இதனால் கடல் வளமும், மீன் வளமும் முற்றிலுமாக அழிந்துபோகும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அச்சம் தெரிவித்துள்ளார். எனவே இயற்கை எரிவாயு எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்துச் செய்யவேண்டும் என்று மத்திய அரசை அவர் வலியிறுத்தியுள்ளார்.

Vaiko plea to Centre on oil wells in Gulf of Mannar

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் கழகம் (ஓ.என்.ஜி.சி.) கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதன் அடுத்த கட்டமாக தற்போது மன்னார் வளைகுடா கடலில் 22 எரிவாயு கிணறுகள் அமைத்து, எரிவாயு எடுக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நேர் கிழக்கே அமைந்துள்ள மன்னார் வளைகுடா ‘யுனெஸ்கோ' அமைப்பினால் ‘கடல்சார் தேசிய பூங்கா'வாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பகுதியாகும். உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்தப் பகுதியில் அரியவகை பவளப்பாறைகள், கடல்புல் உள்ளிட்ட தாவரங்கள்; கடல் பசு, டால்பின், கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. இதோடு மட்டுமின்றி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பவளப்பாறைகளின் வளர்ச்சி 43 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மன்னார் உயிர்க்கோள காப்பகப் பகுதிக்கு 10 கிலோ மீட்டர் தூரத்திலும், தீர்த்தங்கரை பறவைகள் சரணாலயப் பகுதிக்கு 10 கிலோ மீட்டர் தூரத்திலும், சக்கரக்கோட்டை கம்மா பறவைகள் சரணாலயம் பகுதிக்கு 10 கிலோ மீட்டர் தொலைவிலும் 22 எரிவாயு கிணறுகள் அமைத்து இயற்கை எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

கடலில் 5000 மீட்டர் ஆழத்தில் மண்ணை அகழ்ந்தெடுத்து எரிவாயு கிணறுகள் அமைக்கப்படுமானால், சுற்றுச் சூழல் நாசமடைவதோடு, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்துவிடும். இதனால் கடல் வளமும், மீன் வளமும் முற்றிலுமாக அழிந்துபோகும் அபாயம் ஏற்படும்.

மன்னார் வளைகுடா கடலில் ஓ.என்.ஜி.ஓ. நிறுவனத்துக்கு எரிவாயு எடுக்க வழங்கப்பட்ட அனுமதியால், கடலையே நம்பி இருக்கும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மீனவ மக்கள் இந்த அனுமதியை எதிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், தமிழக அரசின் சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்ற கருத்துக் கேட்புக் கூட்டம், மே 14 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் நூறு பேரை மட்டும் அழைத்து வைத்துக்கொண்டு பெயரளவுக்கு இந்தக் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தி முடித்துவிட்டனர். ஆனால் மீனவ கிராம மக்கள், 'மக்களிடம் விரிவான விளம்பரம் செய்து முறையாக கருத்துக்கேட்புக் கூட்டம் கூட்டப்படவில்லை' என்று கருத்துத் தெரிவித்தனர்.

மன்னார் வளைகுடா கடலில் மீனவர்களின் வாழ்வாதரத்தைப் பறிக்கும் வகையிலும், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எரிவாயு கிணறுகள் தோண்ட 493 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்துச் செய்ய வேண்டும். மீனவர்கள் நலனை பாதுகாத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK Leader Vaiko today appealed to the Union Government to cancel the licence given to the ONGC to dig wells for natural gas in the eco-sensitive Gulf of Mannar Region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X