For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும்: வைகோ

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் தகுதி அடிப்படையை கடைபிடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முதுநிலை சிறப்பு மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மருத்துவர்களுக்கு பூர்வீக இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அக்டோபர் 28ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்து மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

Vaiko slams SC observes on Reservation

"தொழில் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிப்பதற்கு காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இட ஒதுக்கீட்டு சலுகையினால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது நாட்டின் பொதுநலன் கருதி சிறப்பு மருத்துவ பட்டப் படிப்புகளில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறையை மாற்ற மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய மருத்துவக் கழகமும் இது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க வேண்டும். நாடு விடுதலை பெற்ற 68 ஆண்டு காலத்தில் இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்குவதில் எந்த மாற்றமும செய்யப்படவில்லை. உயர்கல்வி நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் மட்டுமே இடங்களை பூர்த்தி செய்வதற்கு மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், எந்த விதத்திலும் இட ஒதுக்கீடு முறை தொடர அனுமதிக்கக் கூடாது" என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும், 2006 இல் உயர்கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தது.

2008 ஏப்ரல் 10 இல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள் அர்ஜித் பசாயத், சி.கே.தாகூர், ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் தன்வீர் பண்டாரி ஆகியோர் ஒருமனதாக அளித்த தீர்ப்பில், 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசு உத்தரவு செல்லும் என்றும், ஆனால் கிரிமிலேயர் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.

சமூக நீதிக் கொகையையே நீர்த்துப் போகச் செய்யக்கூடிய வகையில் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மத்திய-மாநில அரசுகளுக்கு பரிந்துரை அளித்திருப்பது வேதனை தருகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், ஒடுக்கப்பட்ட பழங்குடி இன மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் 63 விழுக்காடு இருக்கும் போது, பெரும்பான்மையான மாநிலங்களில் தற்போது வெறும் 49.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே அளிக்கப்படுகிறது. இதைக்கூட சகிக்க முடியாத நிலைமையை உச்ச நீதிமன்றமே உருவாக்குது ஏற்புடையதல்ல.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் சமூக நீதிக்கு எதிரான பரிந்துரையை மத்திய-மாநில அரசுகள் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK leader Vaiko condemned the Supreme Court against the reservation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X