For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கும் முடிவை கைவிடுக - வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் காரணமாக டீசல் விலையில் ரூ.3.37 காசுகள் குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 2014 ஜூன் மாதம் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 115 டாலராக இருந்தது. தற்போது, 83 டாலராக விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது.

Vaiko urges centre to keep tab on Diesel price

ஆனால், டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை முற்றிலும் விலக்கிக்கொண்டு அவ்வப்போது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்களே டீசல் விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்கக்கூடியது அல்ல. ஏனெனில், 2013 ஜனவரியில் இருந்து கடந்த 20 மாதங்களில், மாதந்தோறும் 50 காசுகள் டீசல் விலை 19 முறை உயர்த்தப்பட்டு, டீசல் விலை ரூபாய் 11.81 காசுகள் என்ற அளவுக்கு அதிகரித்தது. ஆனால், தற்போது டீசல் விலையில் ரூபாய் 3.37 காசுகள் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது.

டீசல் விலை அதிகரிக்கும்போது, அதன் தொடர் விளைவாக பண வீக்க விகிதம் உயர்வதும், விலை வாசி ஏறுவதும் மக்கள் மீது சுமையை ஏற்றுகிறது. எனவே மத்திய அரசு, மக்கள் நலன் கருதி டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்கும் முடிவை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடைமுறைப்படுத்திய ‘உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தை, பாரதிய ஜனதா அரசு வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது. முந்தைய அரசு சமையல் எரிவாயு உருளைகள் வழங்குவதற்கு ஆதார் அடையாள அட்டையும், வங்கிக் கணக்கும் அவசியம் என்று அறிவித்தது.

சமையல் எரிவாயு உருளைகளை மானியம் இல்லாமல் விலை கொடுத்து வாங்கிக் கொண்டால், வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் மத்திய அரசே மானியத் தொகையை செலுத்திவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், இத்திட்டம் நடைமுறையில் தோல்வி கண்டது. மேலும், சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகையை படிப்படியாக இரத்து செய்யவே காங்கிரஸ் கூட்டணி அரசு இத்திட்டத்தைக் கொண்டு வந்தது. தற்போது மோடி அரசும் ஆதார் அட்டைக்குப் பதில், வங்கிக் கணக்கு இருந்தாலே போதும், மத்திய அரசு மானியத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்திவிடும் என்று கூறுகிறது.

உலக வர்த்தக நிறுவனமும், உலக வங்கியும் இதுபோன்ற மானியங்களை இரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால், எதிர்காலத்தில் சமையல் எரிவாயு மட்டுமல்லாமல், பொது விநியோக முறையில் வழங்கப்பட்டு வரும் மண்ணென்ணெய், அரிசி, கோதுமை போன்ற பொருள்களுக்கும், உர மானியத்திற்கும் மத்திய அரசின் நேரடி பணப் பட்டுவாடா திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். இதனால், அரசின் மானியங்கள் முழுமையாக விலக்கப்பட்டுவிடும் நிலைமை ஏற்படும்.

எனவே, சமையல் எரிவாயு உருளைக்கான மானியத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, தற்போதுள்ள முறையில் மானிய உதவியுடன் சமையல் எரிவாயு உருளைகள் மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

English summary
MDMK chief Vaiko has urged the centre not to abandon the deregularisation of diesel price.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X