For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லை பெரியாறு என்பதை பேரியாறு என அழைக்க இலக்கியங்களை முன்வைத்து வேடசந்தூர் எம்.எல்.ஏ. கோரிக்கை

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: முல்லை பெரியாறு என்பதை பேரியாறு என அழைக்க இலக்கியங்களை முன்வைத்து வேடசந்தூர் எம்.எல்.ஏ. வி.பி.பி.பரமசிவம் சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.பி.பரமசிவம் சட்டப்பேரவையில் பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய "விஷன் 2023" ஐ செயல்படுத்த அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவர் வகுத்து தந்த வழியிலே தொடர்ந்து பீடு நடை போடுகின்ற இந்த அரசு தமிழக மக்களின் வாழ்வாதரத்தையும், வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவதற்காக செயல்படுத்துகின்ற அத்துணை வளர்ச்சி திட்டங்களுக்கும், வருங்கால கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கும், இவ்வாணத்தை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதைத்தான் இந்த ஆளுநர் உரை நமக்குச் உரத்துச் சொல்லியிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

Vedasandur mla paramasivam speech at Assembly

1. நிதிப் பற்றாகுறை குறித்து ஆளுநர் உரையில் சொல்லியிருப்பதைப் பார்த்தோமேயானால் 14வது நிதிக்குழுவுக்கு மத்திய வரிகளில் மாநிலங்களுக்கான பங்கு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்ந்திருந்த போதிலும், தமிழ்நாட்டிற்கு முன்பு கொடுத்த நிதிப்பகிர்வைவிட 19.04 சதவீதம் குறைவாக கொடுத்துள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த நிதிக்குழு காலத்தின் முதலாம் ஆண்டான 2015-2016ஆம் ஆண்டில் 2.98 சதவீதம் மட்டுமே மத்திய வரி வருவாயில் தமிழ்நாடு கூடுதலாக பெற்றுள்ளது.

ஆனால் மற்ற மாநிலங்கள் இதே ஆண்டில் குறைந்தபட்சம் 30 சதவீதம் அளவிற்கு கூடுதல் நிதி பெற்று பயனடைந்துள்ளது. 14 மானியக்குழுவின் பரிந்துரை மூலம் கூடுதல் நிதி ஆதாரம் ஏதும் தமிழ்நாட்டிற்கு கிடைக்காத சூழ்நிலையில் மத்திய அரசின் உதவி பெறும் திட்டங்களில் மாநில அரசின் பங்கும் உயர்த்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் நிதிநிலமையை மேலும் பாதித்துள்ளது.

மத்திய வரி பகிர்வில் ஏற்பட்ட இந்த பாதிப்பினை சரி செய்ய ரூபாய் 2ஆயிரம்கோடி அளவிலான நிதி உதவியை இந்த நிதிக்குழு காலத்தில் ஆண்டுதோறும் நமக்கு வழங்க வேண்டும் என்றும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் உதவி பெறும் திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்கினை 60 சதவீதத்திலிருந்து 90சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் இவ்வாளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

2. தொடர்ச்சியான இயற்கை சீற்றங்கள், இயற்கை பேரிடர்கள் அதிலும் குறிப்பாக டிசம்பர் பெருமழை மற்றும் வார்தா புயலால் பாதித்த தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரணநிதியிலிருந்து ரூ1,972.89 கோடியும், நிரந்தர கட்டுமானப் பணிகளுக்காக ரூ20,600.37 கோடியும் வேண்டி மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கையை உடடினயாக ஏற்று நிதியினை ஒதுக்கிட வேண்டுமென்று மத்திய அரசை ஆளுநர் உரை நிர்பந்தித்திருப்பது வரவேற்கதக்கது.

3. சென்னையில் வார்தா புயலின் காரணமாக அரசு மற்றும் தனியார் நிலங்களிலிருந்த பல லட்சம் மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பாதிப்பினை சரி செய்யும் விதமாக தமிழகத்தின் பசுமை பரப்பினை அதிகரிக்க தன்னுடைய ஆட்சி காலத்தில் பல லட்சம் மரங்களை நட்டு வானுக்கும் மழை பெய்ய வாய்ப்பளித்த வள்ளலாக திகழ்கின்ற மறைந்த முன்னாள் முதல்வர் வழியைப் பின்பற்றி நம்முடைய அரசு ஒரு மாபெரும் மரம் நடும் பெருந்திட்டத்தினை 24.02.2017 அன்று துவங்கப்படும் என்ற அறிவிப்பினை ஆளுநர் உரை வாயிலாக அறிந்து சமூக ஆர்வலர்களும், சென்னையிலுள்ள பொதுமக்களும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வார்தா புயலில் அதிகம் விழுந்தவை அழகிற்காக வளர்க்கப்பட்ட வெளிநாட்டு மரங்கள் ஆகும். வெளிநாட்டு மரங்கள் பூமியில் செங்குத்தாக ஒரே வேரை செலுத்தக்கூடியவை. எனவே பூமியில் அதிக பிடிப்பில்லாமல் இருக்கும். மேலும் பக்கவாட்டில் அதிக கிளைகளை விடாதவையாகும். எனவே இவ்வகை மரங்களில் எந்தவகை பறவையினமும் கூடு கூட கட்டுவதில்லை. ஆனால் நமது நாட்டு மரங்கள் பக்கவாட்டில் அதிக வேர்களைவிடக் கூடியவை. எனவே மண்ணில் அதிக பிடிமானத்துடன் வளரும்.

மேலும் பக்கவாட்டில் அதிக கிளைகளைவிடக்கூடியவை. எனவே மரம் நடும் திட்டத்தில் நமது நாட்டு மரங்களான ஆலமரம், புளியமரம், அரசமரம், புங்க மரம்,கொன்றை,வேம்பு, வாகை, பனை, மகிழம், பூவரசு, புன்னை, இலுப்பை, மருது, நாவல், உள்ளிட்ட நாட்டு மரங்களைத்தான் நட வேண்டும் என்ற கருத்தினை இம்மாமன்றத்தில் பதிவு செய்கிறேன். ''மரம் வளர்ப்பதில் இரண்டு லாபம் உண்டு. ஒன்று உலகில் வாழும் ஜீவராசிகளுக்கு உயிர்மூச்சு மற்றொன்று மழை ஈர்ப்பு மையமாக இம்மரங்கள் செயல்படும் என்பதாலும். இத்திட்டம் வருங்கால தலைமுறைக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

4. இன்றைய தினம் தமிழகத்தில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை சராசரி அளவைக் காட்டிலும் 62 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. அதனால் கடுமையான வறட்சியை நம் மாநிலம் எதிர்கொண்டு வருகிறது. குடிநீருக்கும், கால்நடைகளுக்கான தீவனத்திற்கும் கூட கடுமையான தட்டுப்பாடுகள் ஏற்பட்டிருக்கிறது.

140 ஆண்டுகளுக்குப் பின் இது போன்றதொரு வறட்சியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. 140 வருடங்களுக்கு முன்பு 1876-1877ஆம் ஆண்டு தாது வருடத்தில் இத்தகைய பஞ்சம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. அதைத்தான் தாது வருடப் பஞ்சம் என்று நாட்டார் பாடல்களிலும், உள்ளூர் இலக்கியங்களிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

எறும்பு வலைகளை வெட்டி அதனில்
இருக்கும் தானியம் தான் எடுத்து
முறத்தால் கொழித்துக் குத்திச் சமைத்து
உண்ணுகிறார் சிலர் பாருங்கடி
குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் பணம்
கொண்டு திரிந்தாலும் கிட்டாமல்
இடிக்குப் பயந்த பாம்புகள் போலே
ஏங்குகிறார் சிலர் கேளுங்கடி

இவ் வறட்சியின் கோரப்பிடியில் தமிழ்நாட்டு மக்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு இதை கடும் வறட்சி என அறிவித்து பயிரிழப்பு மற்றும் இதர நிவாரணப் பணிகளுக்கு நிதி உதவி அளித்துள்ளது போற்றுதலுக்குரிய செயலாகும். மேலும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 39,565 கோடி ரூபாயை வழங்க மத்திய அரசை இவ்வுரையின் மூலம் கோரியிருப்பது வரவேற்கதக்கது.

இந்த வேளையிலே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முற்போக்கு சிந்தனையில் உதித்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நினைவுகூற விரும்புகிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே வறட்சியை தவிர்ப்பதற்காக தீர்க்கதரிசனத்தோடு தந்த இத்திட்டத்திற்கு மக்களுடைய ஆத்மார்த்தமான பங்களிப்பு இருந்திருந்தால் நம்முடைய நிலத்தடி நீர்மட்டம் இத்தனை அதளபாதாளத்திற்கு சென்றிருக்காது.

இன்றைய தினம் அதே வழியிலே நடக்கின்ற இந்த அரசு நம்முடைய வருங்கால சந்ததிகளின் நலன் கருதி Massive Tree Plantation, Rain water harvesting, IAMWARM PHASE II திட்டங்களோடு,
குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தையும் செயல்படுத்த இருக்கிறது என்பதனை இவ்வுரை வாயிலாக அறிந்து மகிழ்கிறேன்.

கிழக்கிந்திய கம்பெனியினர் இந்தியாவில் காலூன்றுவதற்கு முன் வரை அனைத்து நீர்நிலைகளும் மக்களின் நிர்வாகத்தால் செம்மை பெற்று திகழ்ந்தன. ஆண்டுக்கு ஒரு முறை ஊர்கூடி புனரமைப்பு செய்யும் 'குடிமராமத்து' நடக்கும். ஆனால், ஆங்கிலேயர் வருகைக்கு பின் இது மறைந்துபோனது. இதனால், நீர்நிலைகளுக்கும் மக்களுக்கும் இருந்த தொப்புள் கொடி உறவு அறுந்துபோய் அதை பராமரிக்கும் பணி அரசிடம் சென்றுவிட்டது.

அந்த தொப்புள் கொடி உறவை மீண்டும் உயிர்ப்பிக்கும் விதமாக மக்கள் பங்களிப்புடன் நீர் ஆதார மேலாண்மையை மேற்கொள்ள 'குடிமராமத்து' என்கின்ற திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு தொடங்க உள்ளதை ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் எண்ணி, எண்ணி பெருமை கொள்கிறேன்.

5. மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட மறைந்து முதல்வர் ஜெயலலிதா அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை யாரும் மறக்கவோ, மறுக்கவோ இயலாது. முல்லைப் பெரியாறு என்றவுடன் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று பதிப்பு என் நினைவுக்கு வருகிறது. சிலப்பதிகாரத்தில் காட்சிக்காதையில் (17-22) சேரமன்னன் மலை வளம் காணச் செல்லும் போது. மலையின் அழகான தோற்றத்தைப் பற்றி இளங்கோவடிகள் கூறுகிறார்.

"நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விளங்கிய பேரியாறு" என்று திருமாலின் ஆரம் போன்று அம்மலையில் பேரிரைச்சலோடு பேரியாறு ஒடியது என்று இளங்கோவடிகள் கூறுகிறார். பேரியாறு என்பதை ஆங்கிலத்தில் Periyar என்றெழுதப்போக, ஆங்கிலம் வழியாக நாம் நம்மை அறியும் பழக்கம் உள்ளவர்கள் என்பதால் அதை அப்படியே பெரியார் என்று எடுத்துக்கொண்டோம்.

ஆகவே அப்பெயர் நமது 'பெரியாரையோ' அல்லது வயதில் பெரியவர்களையோ குறிப்பிடுவதில்லை. மாறாக பேரிரைச்சலோடு மலைகளுக்கு நடுவே பாய்கின்ற ஆறு என்ற பொருள் கொண்டு பேரியாறு என்று அழைக்கப்பட்டது. (முடிந்தால் இனி வரும் காலங்களில் முல்லைப் பெரியாரை தமிழ் அறிஞர்களோடு கலந்து முல்லைப் பேரியாறு என்றே பதிவு செய்திட வேண்டுகிறேன்)

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உறுதியான சட்டப்போராட்டத்தின் காரணமாக முல்லை பேரியாறு அணையின் நீர்மட்டம் முதற்கட்டமாக 142 அடி அளவிற்கு உயர்த்தப்பட்டு, கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகளின் வயிற்றில் பால்வார்க்கப்பட்டது. அவர் காட்டிய சட்டப்பாதையினைப் பின்பற்றி வழிநடக்கின்ற முதல்வர் அவர்கள் இந்த அணையின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தி தென் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை தருவதற்கான அனைத்து முயற்சிகளையும்மேற்கொள்ள இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

6. சல்லிக்கட்டைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது நம் பாரம்பரியம். சங்க இலக்கியங்களில் பலவற்றில் சல்லிக்கட்டின் தரவுகளை காண முடிகிறது.

"கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்"
எனும் கலித்தொகைக் குறிப்பு ஆயர்மகள் தனது காதலன் ஏறு தழுவும் வீரியம் உடையவனாக இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மறுபிறப்பில் கூட அவனைக் காதலனாக கொள்ள மாட்டாள் என்று கூறுகிறது.

இத்தகைய தொன்மை மிக்க சல்லிக்கட்டின் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமூக ஊடகங்களில் வந்த விமர்சனங்களையெல்லாம் புறந்தள்ளி, உடனடியாக டெல்லிக்கு விரைந்து அவசரச்சட்டம் இயற்றி ஜனாதிபதி, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றார். அதை நிரந்தர சட்டமாக மாற்ற 6 மாத காலம் அவகாசம் இருந்தாலும் அடுத்த நாளே நிரந்தர சட்டமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி தமிழர்களின் உணர்விற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்பதை உணர்த்திக் காட்டியுள்ளார்.

7. சுகாதாரத்துறை பார்த்தோமேயானால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விரிவான காப்பீட்டுத் திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகளை பெற்றுத்தருவதில் சிறப்பான பங்காற்றிவருகிறது. குறிப்பாக உடல் உறுப்பு மாற்று அறுவைப் சிசிச்சை, மற்றும் இருதய அறுவைச் சிகிச்சைகள் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது. இறந்தவர்களின் உடல் உறுப்பை தானம் செய்யும் திட்டத்தில் நாட்டிலேயே முதன் மாநிலமாக திகழ்ந்து இரண்டாவது முறையாக மத்திய அரசின் தேசிய விருதைப் பெற்றுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சுகாதாரத்துறையின் தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரம், இதன் மூலம் உடலுறுப்பை தானம் செய்வதில் மக்களுக்கு உள்ள பல்வேறு மனத்தடங்கல்களும், மதத்தடங்கல்களும் தகர்த்தெறியப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். மேலும் இத்திட்டம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைகளிலே சிறப்பான முறையில் செயல்பட இருப்பது ஏழை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

அதோடு இன்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் அற்புதத் திட்டங்களாக திகழ்கின்ற குழந்தை நல பரிசு பெட்டகம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி, சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், அம்மா தாய்ப்பால் வங்கி போன்ற திட்டங்கள் தொடர்ந்து தடையின்றி செயல்படுத்தப்படும் என்ற நற்செய்தியும் இவ் உரையின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது.

1. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஸ்மார்ட்கார்டு வழங்கப்படுகிறது.
2. எண்ணற்ற இ சேவை மையங்கள் தொடங்கி பல்வேறு பொது சேவைகளை மக்கள் தங்குதடையின்றி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவாக 2016 டிசம்பர் மாதத்தில் சிறந்த மின்னனு முயற்சிக்காக டிஜிட்டல் இந்தியா விருதினை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

3. தாய்த் திட்டம் இரண்டின் மூலம் 8,875 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன, இத்திட்டத்தின் கீழ் வருங்காலங்களில் ஒரு கிலோமீட்டருக்கு குறைவாக உள்ள சாலைகளும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைக்கிறேன்.

4. நீட் நுழைவுத்தேர்வு மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதோடு மட்டுமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வெளிப்படையான சேர்க்கை முறையினை பின்பற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைப்பதாக உள்ளது. எனவே இந்த நீட் நுழைவுத் தேர்வை தவிர்த்து ஏற்கனவே பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறையினையே தொடர்ந்து பின்பற்ற இந்த அரசு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளும் என்று மாணவச் செல்வங்களுக்கு இவ்வுரையின் வாயிலாக உறுதி அளித்திருக்கிறது.

• எனது வேடசந்துர் தொகுதியின் கிழக்குப் பகுதி 22 கிலோமீட்டர் நிலத்திற்கு தொப்பையசாமி மலை அமைந்துள்ளது. இம்மலைக்கு மேற்கு பகுதியில்தான் எனது தொகுதியின் அனைத்து பரப்பளவும் அமைந்துள்ளது. அடிப்படையில் எனது தொகுதி விவசாயிகள் நிறைந்த தொகுதியாகும். இம்மலையிலிருந்து மழைக்காலங்களில் உற்பத்தியாகி வரும் காட்டு ஓடைகள், சிற்றாறுகளின் நீரை சேகரித்து வைப்பதற்கு 1980 ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு அந்த முயற்சிகள் யாவும் இது வரை செயல்வடிவம் பெறவில்லை என்பது வேதனைக்குரிய விசயமாகும்.

இதன் காரணமாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் எனது வேடசந்துர் தொகுதி வறட்சியால் பாதிக்கப்படும் முதல் தொகுதியாக உள்ளது. எனது தொகுதியில் நீர்மட்டம் என்பது 1000 அடிகளுக்கும் கீழே சென்றுவிட்டது. பருவமழை பொய்க்கும் காலங்களில் மக்கள் குடிநீருக்கும், விவசாயிகள் பாசனத்திற்கும் தண்ணீருக்காக போராடுவது என்பது எனது தொகுதிமக்கள் வாழ்வோடு இணைந்துவிட்ட, பழகிப்போன ஒன்றாகிவிட்டது.

எனவே எனது தொகுதியின் தொப்பையசாமி மலையின் மேற்குப்பகுதியில் ஒரு அணைக்கட்டு கட்ட வேண்டியது என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. மாண்புமிகு.அம்மா அவர்கள் தலைமையில் 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் போது இதை வாக்குறுதியாகவே வழங்கச் சொல்லி, நானும் எனது தொகுதி மக்களுக்கு எப்பாடுபட்டேனும் இம்மலையில் அடிவாரத்தில் அணைக்கட்டு கொண்டுவருவேன் என்று வாக்குறுதி அளித்து வந்துள்ளேன்.

எனவே தமிழகஅரசு உடனடியாக எனது தொகுதியில் அணைக்கட்டு கட்டுவதற்கு உரிய அதிகாரிகளை நியமனம் செய்து, சிறப்பான முறையில் ஆய்வுகள் மேற்கொண்டு, நிதி ஒதுக்கி, அணைக்கட்டு கட்டிடவும், அதன் விளைவாக எனது தொகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் குடிநீருக்கும், விவசாய தேவைகளுக்கும் எனது தொகுதி மக்கள் படும் இன்னல்களை போக்கவும் முதல்வர் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

• வடமதுரை பேரூராட்சி ரயில் நிலையம் அருகிலுள்ள லெவல்கிராசிங் எண்.301ன் மேல் மேம்பாலம் அமைத்திட ஆவண செய்திட வேண்டுமென்று வேண்டுகிறேன்.
• வறட்சியால் மிகவும் பாதித்துள்ள எனது தொகுதியிலுள்ள கிராமங்களில் நீராதரத்தினை பெருக்குவதற்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கி ஆவண செய்திட வேண்டுகிறேன்.
• குஜிலியம்பாறை ஒன்றியத்தில் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்குவதற்கு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
• வடமதுரை பேரூராட்சியிலே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கின்ற பேருந்து நிலையம் அமைந்திட விரைந்து நடவடிக்கை எடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
• வேடசந்துர் அரசு கலைக்கல்லுரி புதிய கட்டிடம் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது. அரசு அதை விரைந்து முடித்திட நிதியுதவி அளித்து மாணவ, மாணவியர்கள் எதிர்வரும் கல்வியாண்டிலேயே புதிய கட்டிடத்திற்கு சென்று பயில்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Vedasundar MLA paramasivam speech at Assembly by Demanding on change in the name of Mullai Periyar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X