For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றம் வர மருத்துவனுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்... அன்புமணி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: திமுக, அதிமுக என மாறி மாறி தமிழ்நாட்டை 50 ஆண்டுகாலம் ஆட்சி செய்து விட்டனர். யார் யாரோ தமிழ்நாட்டை ஆண்டுவிட்டார்கள். அறிஞர், கலைஞர், நடிகர், நடிகை ஆண்டுவிட்டனர். மருத்துவனுக்கு ஐந்தாண்டு காலம் தமிழ்நாட்டை ஆளுவதற்கு வாய்ப்பு கொடுங்கள், என்று கோவை கொங்கு மண்டல மாநாட்டில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2016 சட்டமன்ற தேர்தலை சந்திக்க முழுமூச்சோடு தயாராகி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையோடு, சேலம், கங்கை கொண்ட சோழபுரத்திலும் மாநாடு நடத்தியது பாமக.

We will give priority for free education says Anbumani Ramadoss

வடக்கில் மட்டுமல்ல தொற்கிலும், மேற்கிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பங்காளிகள் இருக்கிறார்கள் என்று வெளிச்சம் போட்டு காட்டுவதற்காகவே கோவையில் கொங்கு மண்டல மாநாடு நடத்தியது பாமக. மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாய் வாருங்கள் என்று டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்ததைக் கேட்ட பாட்டாளி சொந்தங்கள் ஆண்களும், பெண்களுமாய் அணிதிரண்டது என்னவோ உண்மைதான்.

பாமக தலைவர் ஜி.கே. மணி பேசிய உடன் மைக் பிடித்தார் டாக்டர் அன்புமணி, ஆரம்பமே அமர்களம்தான். கோவையில் பாட்டாளி கடல் என்று கூறி கிளாப்ஸ் அள்ளிய அன்புமணி, அதே வேகத்தோடு தொடர்ந்தார்.

புறக்கணியுங்கள்

தமிழ்நாட்டின் 50 ஆண்டுகாலம், திமுக, அதிமுக என்று மாறி மாறி ஆண்டு விட்டார்கள். கலைஞர் மீது கோபம் என்றார் அம்மையாருக்கு வாக்களிக்கிறீர்கள். அம்மையார் மீது கோபம் என்றால் கலைஞருக்கு வாக்களிக்கிறீர்கள். மக்கள் திமுக, அதிமுகவை புறக்கணிக்கும் காலம் வந்துவிட்டது.

எனக்கும் ஒரு வாய்ப்பு

எங்களுக்கு ஒரு 5 ஆண்டுகாலம் வாய்ப்பு கொடுங்கள். யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்தீர்கள். காமராஜருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், அறிஞருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், கலைஞருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், நடிகனுக்கும், நடிகைக்கும் வாய்ப்பு கொடுத்தீர்கள், மருத்துவனுக்கு வாய்ப்பு கொடுங்கள்.

முதல்வர் கடவுளா?

காமராஜர் ஆட்சிதான் வேண்டும் என்று கேட்கின்றனர். காமராஜர் அவர்கள் 12000 பள்ளிக்கூடங்கள் திறந்தார். ஆனால் திமுகவும், அதிமுகவும் இணைந்து 7000 டாஸ்மாக் கடைகளை திறந்திருக்கின்றனர்.

நல்லதொரு மாற்றம்

தமிழ்நாட்டில் மாற்றம் என்ற புரட்சி நடக்க இருக்கிறது. முதல்வர் பதவியை கடவுளுக்குக் சமமாக பார்க்கின்றனர். பொதுமக்களின் வேலைக்காரன்தான் முதல்வர். ஆனால் இங்கே பொதுமக்கள்தான் வேலைக்காரர்கள் போல இருக்கிறார்கள்.

அகற்றும் நேரம் வந்து விட்டது

தமிழ்நாட்டில் முதல்வரை கடவுளாகப் பார்க்கின்றனர். மன்னர் ஆட்சியிலே குடியையும், கூத்தையும் கொடுப்பார்கள். மக்கள் மறந்து விடுவார்கள். இன்றைக்கும் அதே நிலைதான் உள்ளது. போதையிலே அடிமைகளாக ஆக்குகின்றன அதை அகற்றுகின்ற நேரம் வந்து விட்டது.

படிக்கவா? குடிக்கவா?

தமிழ்நாட்டில் பெண்களும், சிறுவர்களும் மது அருந்துவதாக கூறி வேதனைப்பட்ட அன்புமணி, இங்கு 4024 நூலகங்கள் இருக்கிறது. 6800 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. மக்கள் படிக்கவா? குடிக்கவா என்று கேட்டார்.

மது விற்பனைக்கு இலக்கு

பெட்ரோல் விற்க தீர்மானம் போட்டால் அது அரபு நாடு, வாகனங்கள் விற்க தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு. ஆண்டுக்கு இவ்வளவு மது விற்பனை செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டால் அது தமிழ்நாடு.

யாருக்கு லாபம்

குடிச்சா அரசுக்கு லாபம் குடித்து வாகனம் ஓட்டினால் போலீசுக்கு லாபம், குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் மருத்துவமனைக்கு லாபம். தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் முழக்கம். இதன் மூலம் பெண்களின் தலையெழுத்து மாறிவிடும்.

முதல் கையெழுத்து

மதுவை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது திமுக, அதனை டாஸ்மாக் கடைகளாக்கியது அதிமுக. மதுக்கடைகளை பாமகதான் மூட முடியும். 2016ல் நாம் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு. இது பாமகவினால் மட்டுமே முடியும்

முதலிரவுக்கு ஜமக்காளம்

இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்து வைத்திருக்கிறார்கள். எல்லாம் கொடுத்தாகிவிட்டது. தாலிக்கு தங்கம், ஓடாத மிக்சி, காற்று வராத ஃபேன் என்று கொடுத்தவர்கள் இனி முதலிரவுக்கு ஜமுக்களாத்தை கொடுப்போம், அதுவும் பவானி ஜமுக்காளத்தை கொடுப்போம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

இலவசங்கள் ரத்து

4 ஆடுகள் கொடுத்தவர்கள் இனி 6 ஆடுகள் கொடுத்து கூடவே குச்சியையும் கொடுப்போம் ஆடு மேய்ப்பதற்கு என்று சொல்வார்கள். நாங்கள் இலவசங்களை கொடுக்கமாட்டோம் ஆனால் இலவச கல்வி கொடுப்போம், சுகாதாரமான தமிழகமாக மாற்றுவோம்.

பாமகவின் பார்முலா

ஆளும் கட்சி, ஆண்டகட்சி, தேசிய கட்சிகளை எதிர்த்து தர்மபுரியில் 80000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் இதுதான் உண்மையான வெற்றி. ரூ.1000 கொடுத்தால் அது திருமங்கலம் ஃபார்முலா. ஓட்டுக்கு. 5000 ரூபாய் கொடுத்தால் அது ஸ்ரீரங்கம் ஃபார்முலா... அதே நேரத்தில் ஓட்டுக்கு ரூ.10000 கொடுத்தால் அது ஆர்.கே.நகர் ஃபார்முலா. நம்முடைய பார்முலா, நல்ல நேர்மையான, மது இல்லாத ஊழல் இல்லாத ஒரு ஆட்சி என்பதுதான்.

தலை நிமிரவேண்டும்

ஓட்டுக்காக அரசியல் நடத்தவில்லை. உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற ஆட்சிக்கு வருவோம். அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்போம். கல்வியை கொடுத்து வேலை வாய்ப்பை உருவாக்குவோம். தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறானா? போதையில் தலை குனிந்து வாழ்கிறான். இலவசங்களுக்காக பிச்சை எடுக்கிறான். நம்முடைய ஆட்சியில் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ வைப்போம்

கல்விமுறையில் மாற்றம்

கல்விமுறையை மாற்றுவோம். சுமையற்ற கல்வியை கொடுப்போம். தென் கொரியாவில் தமிழ்நாட்டை விட அதிக பள்ளிகள் இருக்கின்றன. தமிழக அரசு சாராயத்தில் முதலீடு செய்கிறது. இந்த நிலை மாறவேண்டும் எனில் ஆட்சியில் மாற்றம் வரவேண்டும். அரசியல் மாற்றம் வரவேண்டும்.

அமைச்சரவைக்கூட்டம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சரவைக்கூட்டம் நடத்துவோம். அமைச்சர்கள் அந்த மாவட்டத்தில் 2 நாட்கள் தங்குவார்கள். தமிழ்நாட்டில் நிச்சயமாக ஒரு மாற்றம் வரும். அது புரட்சியாக வரும். இந்த மாற்றம் இளைஞர்களால், பெண்கள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், மாணவர்களால் வர இருக்கிறது.

அன்புமணிக்கு வாய்ப்பு தாருங்கள்

தருமபுரி மக்கள் அன்புமணிக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் அதேபோல தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க அன்புமணிக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒரு இளைஞனாக படித்தவனாக பாருங்கள். ஜாதி மத பேதமில்லாம ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் என்று கூறி அமர்ந்தார் அன்புமணி.

English summary
Anbumani Ramadoss, the PMK's chief ministerial nominee, said, the PMK was not against the freebies culture of the Dravidian rule per se, but certainly would abolish all unwanted freebies.“We will give priority for free education and free medical care.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X