For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதெல்லாம் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லையாம்.. வைகோவே சொல்லிட்டார்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக சட்ட விதிகளில், நாடாளுமன்ற மரபுகளில் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சபாநாயகரை அவர் பாராட்டியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் சபாநாயகர் தனபால் தமிழ்நாடு சட்டமன்ற விதிகளின் அடிப்படையில், தமிழக ஆளுநரின் ஆணைக்கு ஏற்ப நம்பிக்கை வாக்கெடுப்பை பாராட்டத்தக்க விதத்தில் நடத்தி இருக்கிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழக சட்ட விதிகளில், நாடாளுமன்ற மரபுகளில் ரகசிய வாக்கெடுப்புக்கு இடமே இல்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனக்கு 124 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை அந்த உறுப்பினர்களின் கையெழுத்தோடு கூடிய அத்தாட்சி கடிதத்தை தமிழக ஆளுநர் மேதகு வித்யாசாகர் ராவ் அவர்களிடம் வழங்கினார்.

Whole state slams Speaker, but Vaiko hails

இதன் பேரில், 2017 பிப்ரவரி 16ஆம் தேதி தமிழக ஆளுநர் அவர்கள் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை ஆட்சி அமைக்குமாறு அழைத்து, அவருக்கும் 30 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததோடு, சட்டப் பேரவையில் தனது பெரும்பான்மையை அவர் 15 நாட்களுக்குள் நிருபிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். உடனடியாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தி.மு.க.வின் செயல் தலைவர் 15 நாள் அவகாசம் ஏன்? இது குதிரை பேரத்துக்கு அல்லவா வழி வகுக்கும் என்று ஆட்சேபனை தெரிவித்து கேள்வி எழுப்பினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

அண்ணா தி.மு.க. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சர் பொறுப்பேற்ற திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அவருக்கு இருக்கும் பெரும்பான்மையை நிருபிக்க பிப்ரவரி 18 ஆம் நாள் காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சட்டப் பேரவை கூடியது.

ஓபிஎஸ்க்கு வரவேற்பு

சட்டசபையில் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அணியினர் நுழைந்தபோது, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தரப்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் வலுவாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்னவென்றால், வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாகவே நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.

திமுகவின் கோரிக்கை

இதனை ஆதரித்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், வாக்கெடுப்பை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற விதிகளின்படிதான் வாக்கெடுப்பை நடத்த இருக்கிறேன் என்று பேரவைத் தலைவர் அவர்கள் கூறினார்.

சட்டசபைக் கலவரம்

அதன்பின்னர் சட்டமன்றத்தில் ஏற்பட்ட அமளியும், கலவரமும், நாற்காலிகள் வீச்சும், பேரவைத் தலைவரின் மைக் உடைப்பும், பேரவைத் தலைவரின் மேஜை அகற்றப்பட்டதும், பேரவைத் தலைவர் அவையை விட்டு வெளியேற முற்பட்டபோது தி.மு.க. உறுப்பினர்கள் அவர் கையைப் பற்றி இழுத்ததும், பின்னர் அவரது சட்டை கிழிக்கப்பட்டதாக அவர் கூறியதும், பேரவைத் தலைவரின் நாற்காலியில் தி.மு.க.வின் இரண்டு உறுப்பினர்கள் மாறி மாறி அமர்ந்ததும், சில உறுப்பினர்கள் மேஜை மீது ஏறி நின்று பலத்த கூச்சல் எழுப்பியதும், தமிழ்நாட்டின் கோடானு கோடி மக்கள் மட்டுமல்ல, இந்திய நாட்டில் அரசியல் ஆர்வம் கொண்ட அனைத்து மக்களும், அனைத்து மொழித் தொலைக்காட்சிகளிலும் கண்கூடாகப் பார்த்தனர். உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் தொலைக்காட்சிகளில் கண்டனர்.

ஆணையிட்ட சபாநாயகர்

சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடியபோது, தி.மு.க. உறுப்பினர்களும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் அமளியில் ஈடுபட்டனர். தி.மு.க உறுப்பினர்களை சட்டசபையிலிருந்து வெளியேற்றும் ஆணை பிறப்பித்தார் பேரவைத் தலைவர். நாடாளுமன்ற, சட்டமன்ற மரபுகளின் படி உறுப்பினர் வெளியேற்றப்படுகிறார் என்று பேரவைத் தலைவர் ஆணையிட்டால் அவர் வெளியேறிவிட வேண்டும். இல்லையேல் பேரவைத் தலைவர் வெளியேற்றுவதற்கான ஏற்பாட்டைச் செய்வார்.

சட்டை கிழிப்பு

காவலர்கள் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், உட்காயங்கள் ஏற்பட்டதாகவும், தன் சட்டை கிழிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வெளியேற்றப்பட்டபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மிகப் பிரபலமான தமிழ் நாளேட்டில் சட்டசபை நிகழ்ச்சிகளைப் பற்றி வந்துள்ள செய்திகளில், எதிர்க்கட்சித் தலைவர் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறியதாகவும், எதிர்கட்சித் துணைத் தலைவர் திரு துரைமுருகன் அவர்கள் நாங்கள் கையில் பிளேடு வைத்திருக்கிறோம். கையை அறுத்துக்கொள்வோம். காவலர்கள்தான் அதற்கு பொறுப்பாவீர்கள் என்று கூறியதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

வாக்குப்பதிவு

ஆயுதங்களை உள்ளே கொண்டு வர அனுமதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் கார்களைச் சோதனையிட்டோம் என்று காவல்துறையினர் கூறியது நினைவுகூறத்தக்கது. பிற்பகல் மூன்று மணிக்கு பேரவைத் தலைவர் மாண்புமிகு தனபால் அவர்கள் தமிழ்நாடு சட்டசபை விதிகளை அறிவித்து, அதன்படி சட்டப்பேரவை உறுப்பினர்களை ஆறு பகுதிகளாக பிரித்து தனித் தனியே அவர்களை எழுந்து நிற்கச் சொல்லி வாக்குகளைப் பதிவு செய்தார்.

எடப்பாடி பழனிச்சாமி வெற்றி

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே வெளிநடப்பு செய்திருந்தனர். பின்னர் வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை.
முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக திரு ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் 11 வாக்குகளும் பதிவாகின என்றும், தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையின்படி தி.மு.க. உறுப்பினர்களும், காங்கிரஸ் உறுப்பினர்களும், திரு ஓ.பன்னீர்செல்வம் அணியினரும மொத்தமாக எதிர்த்து வாக்களித்தாலும்கூட அதனை மிஞ்சுகிற பெரும்பான்மையாக 122 வாக்குகள் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சருக்கு கிடைத்துள்ளன. நம்பிக்கை வாக்கில் முதல்வர் வெற்றி பெற்றார் என அறிவித்தார்.

சபாநாயகர் அவமரியாதை

எவரிடமும் அதிர்ந்து பேசாத பேரவைத் தலைவர் மாண்புமிகு தனபால் அவர்கள் மிகுந்த மனவேதனையால் உள்ளம் உடைந்தவராக "தனிப்பட்ட தனபால் என்ற மனிதனை அவமதித்தால் கவலை இல்லை. ஆனால், பேரவைத் தலைவர் பதவிக்கு அவமரியாதை செய்யப்பட்டதுதான் என்னை வருத்துகிறது.

சபாநாயகர் வேதனை

அதைவிட நான் நீலிக்கண்ணீர் விட்டேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதால், தவிர்க்க இயலாமல் என் உணர்வுகளை இங்கே பதிவு செய்கிறேன்" என்று கூறினார். அவரது நெஞ்சின் அடி ஆழத்தில் முள்ளாகக் குத்திக்கொண்டிருந்த வேதனை குறித்து அவர் வெளிப்படுத்திய சொற்கள் சமூக நீதியில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் அனைவர் மனதிலும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மரபுகள் என்ன?

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு, ரகசியமாக நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் திரும்பத் திரும்பக் கூறுவதும், அதனையே வலியுறுத்தி சமூகத்தின் பல்வேறு துறைகளில் இருக்கின்ற பலர் ஆதரித்து அறிக்கை விடுவதும், தொலைக்காட்சிகளில் அக்கருத்தை பதிவு செய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு சட்டசபை விதிகளும், நாடாளுமன்ற மரபுகளும் எப்படி திட்டவட்டமாக வரையறுத்துள்ளன என்பதை தெளிவுபடுத்த நான் விரும்புகிறேன்.

ரகசிய வாக்குப்பதிவுக்கு இடமில்லை

நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. 1952 ஜூலை 3ஆம் தேதி மூதறிஞர் ராஜாஜி அவர்களின் அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கு சட்டப்பேரவையில் நடைபெற்றபோதும், 1972 டிசம்பரில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் மீதான நம்பிக்கை வாக்கின் போதும், 1988 ஜனவரி 28 ஆம் தேதி முதல்வர் ஜானகி அம்மையார் அவர்களின் அமைச்சரவை நம்பிக்கை வாக்கின்போதும் எத்தகைய முறை கடைப்பிடிக்கப்பட்டதோ, அதே முறையைத்தான் இன்றைய சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு தனபால் அவர்கள் கடைப்பிடித்துள்ளார்.

நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு

மாண்புமிகு அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 1999 மார்ச்சில் நடைபெற்றபோது, நானும் அந்த வாக்கெடுப்பில் பங்கேற்றேன். ஒரு வாக்கு வித்தியாசத்தில் மாண்புமிகு வாஜ்பாய் அரசு தோற்றுப்போனது. நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு என்பதே கிடையாது. சட்டங்களை நிறைவேற்றும்போது பெரும்பாலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை உறுதி செய்யப்படும். யாராவது ஒரு உறுப்பினர் எழுந்து குரல் வாக்கெடுப்பு கூடாது, டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அவைத்தலைவர் நிராகரிக்கக்கூடாது என்பது இதுவரை பின்பற்றப்படும் மரபாகும்.

டிவிசன் வாக்கெடுப்பு

டிவிசன் வாக்கெடுப்பு என்று அவைத்தலைவர் அறிவித்தவுடன், அவையில் வெளிப்புறம் உள்ள காத்திருப்பு வராண்டாக்களின் கதவுகள் பூட்டப்படும். பின்னர் அவையின் கதவுகள் பூட்டப்படும். இப்பொழுது வாக்கெடுப்பு தொடங்குகிறது என்று பேரவையின் செயலாளர் நாயகம் அறிவிப்பார்.

வாக்கெடுப்பு எப்படி நடக்கும்

ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கைக்கு முன்னாள் மேஜையில் மூன்று பொத்தான்கள் இருக்கும். பச்சை நிறப் பொத்தானை அழுத்தினால் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள பல்புகளில் ஆதரவு என்று பச்சை விளக்கு எரியும். சிவப்பு நிறப் பொத்தானை அழுத்தினால் எதிர்ப்பு என்று சிவப்பு நிற பல்பு எரியும். மஞ்சள் நிறப் பொத்தானை அழுத்தினால் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்று மஞ்சள் நிற பல்பு எரியும். ஒவ்வொரு பல்பின் கீழும் உறுப்பினரின் எண் குறிக்கப்பட்டிருக்கும்.

ஆதரவா? எதிர்ப்பா?

யாரெல்லாம் ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள், எதிர்த்து ஓட்டுப் போட்டார்கள், நடுநிலை வகித்தார்கள் என்பது பதிவாகிவிடும். சில வேளைகளில் சில பல்புகள் எரியாவிட்டால், அந்த எண்களுக்குரிய உறுப்பினர்களிடம் தாளைக் கொடுப்பார்கள். அந்தத் தாளில் அவரது பெயர், அவரது எண் எனக் குறிப்பிடுவதோடு, அதரவா, எதிர்ப்பா, அல்லது நடுநிலையா என குறித்து கையெழுத்து போட்டுக் கொடுக்க வேண்டும். சில நேரங்களில் அவையில் சட்டங்கள் நிறைவேறும்போது, தாள்களைக் கொடுத்தே வாக்குகளைப் பதிவு செய்வதற்கும் விதிகளில் இடம் இருக்கிறது.

சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பு

1987 நவம்பர் 26 ஆம் தேதி, நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்திற்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு அரசியல் சட்ட திருத்த மசோதா விவாதத்துக்கு வந்தது. விவாதம் நடுநிசி கடந்து இரண்டரை மணிவரை நடைபெற்றது. விவாதம் முடிந்தவுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நிறைவேற்றச் சொல்லி அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர். அப்போது அவைத்தலைவராக குடியரசுத் துணைத் தலைவர் மேதகு சங்கர்தயாள் சர்மா அவர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் வாக்கெடுப்பை நடத்துகிறார்கள்.

எதிர்ப்பு தெரிவித்தேன்

நான் எழுந்து நின்று குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது, டிவிசன் முறை மூலம்தான் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். எனது நண்பர்களான காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் இப்பொழுது அதிகாலை மூன்று மணி ஆகப்போகிறது. டிவிசன் வைத்தால் இன்னும் அரை மணி நேரம் ஆகிவிடும் என்று கூறியதை நான் ஏற்கவில்லை.

சிவப்பு விளக்கு ஒளிர்ந்தது

வருங்கால உலகமும், தமிழர்களும், இந்தி பேசாத மக்களும் ஜவஹர்லால் நேரு அவர்களாலேயே நிராகரிக்கப்பட்ட இந்தி மொழி அரசியல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் யார் எதிர்த்தார்கள். யார் ஆதரித்தார்கள் என்ற உண்மை தெரிய வேண்டும். அதனால் டிவிசன்தான் வேண்டும் என்றேன். வாக்கெடுப்பு நடந்தது. இந்தி மொழியை ஆதரித்து அனைத்து ஓட்டுக்களும் விழுந்தன. அண்ணன் முரசொலி மாறன் அவர்கள் உடல்நலக் குறைவால் அன்றைக்கு அவைக்கு வரவில்லை. ஒரே ஒரு பல்புதான் சிவப்பு விளக்காக எரிந்தது. அதுதான் என்னுடைய வாக்கு.

சிங்கம் தனியாக இருக்கும்

உனக்கு ஆதரவே இல்லை. நீ தனித்துவிடப்பட்டாய் என்று உறுப்பினர்கள் என்னை கேலி செய்தபோது, ஆமாம் உண்மைதான். காட்டில் சிங்கம் தனியாகத்தான் இருக்கிறது என்றேன். எனவே நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதனை நல்லறிவாளர்களும், கற்றோரும், அரசியலில் அக்கறை கொண்டோரும், தமிழக மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளேன் என்றும் வைகோ கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடந்த உதாரணங்களை எடுத்துக்கூறி சட்டசபை சபாநாயகருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் வைகோ.

English summary
Despite the whole state is slamming the TN assembly speaker, MDMK chief Vaiko has hailed him for his actions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X