For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு: தோழி உட்பட 2 பேர் கைது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை அடுத்த கொரட்டூரில், காதலன் துணையுடன் தோழியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த இளம்பெண் மற்றும் கடத்தலுக்கு உதவியவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர், சுப்புலட்சுமி நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் ரவீந்திரன். ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி. இவருடைய மகள் பானுப்பிரியா. 30 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆவடியை அடுத்த மோரை கிராமம் பாலாஜி நகரை சேர்ந்த பிரேமா என்பவர் பானுப்பிரியாவுடன் நெருங்கிய நண்பராக பழகியுள்ளார். இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவது வழக்கம். கடந்த 21 ம் தேதி பானுப்பிரியாவும், பிரேமாவும் சென்னையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றனர்.

Woman, aide held for friend's abduction in Chennai

மாலை பெற்றோரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, ‘நான் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருக்கிறேன். எனது தோழி பிரேமாவை ஆவடி ரயிலில் ஏற்றிவிட்டு, நான் வீட்டுக்கு வந்துவிடுகிறேன்' என்று கூறியுள்ளார். ஆனாலும் இரவு வரை பானுப்பிரியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பானுப்பிரியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

பானுப்பிரியா கடத்தல்

இதையடுத்து பானுப்பிரியாவின் தந்தை ரவீந்திரன் மற்றும் உறவினர்கள் அம்பத்தூர் ரயில் நிலைய பகுதிகளில் பானுப்பிரியாவை தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, ஆவடி ரயில்வே போலீசில் ரவீந்திரன் புகார் செய்தார். புதன்கிழமையன்று மதியம் 12.30 மணியளவில் ரவீந்திரன் செல்போனுக்கு பானுப்பிரியாவின் செல்போனில் இருந்து போன் வந்தது. அதில் பேசிய நபர், ‘உனது மகள் என்னிடம் பத்திரமாக இருக்கிறார். ரூ.5 லட்சம் பணம் கொடுத்து விட்டு, அவரை மீட்டு செல்லுங்கள் என்று கூறி விட்டு தொடர்பை துண்டித்துக் கொண்டார்.

பணம் கேட்டு மிரட்டல்

மீண்டும் அதே நபர், சுமார் 3 மணியளவில் போன் செய்து, ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு உடனே வா. இல்லை என்றால், உனது மகளை உயிருடன் பார்க்க முடியாது' என்று மிரட்டியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவீந்திரன், என்னிடம் அந்தளவுக்கு பணம் இல்லை. ஒன்றரை லட்சம் மட்டும்தான் கொடுக்க முடியும். அதற்குமேல் கொடுக்க முடியாது' என்று கூறியுள்ளார். அதற்கு கடத்தல் கும்பலை சேர்ந்தவர், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு, போலீசுக்கு தகவல் சொல்லாமல் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வா. மீண்டும் உன்னுடன் தொடர்பு கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

போலீஸ் விசாரைணை

இதையடுத்து ரவீந்திரன் , மாலை ஒன்றரை லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வெகுநேரமாக காத்திருந்தும் கடத்தல் கும்பலிடம் இருந்து போன் வரவில்லை. பேருந்து நிலையத்தில் ரவீந்திரன் வெகுநேரமாக காத்திருப்பதைப் பார்த்து, கோயம்பேடு ரோந்து போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தனது மகள் கடத்தப்பட்டது குறித்தும், அவரை மீட்க கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டியது குறித்தும் கூறினார்.

போலீசில் புகார்

உடனடியாக கோயம்பேடு போலீசார், கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்து, அவரை கொரட்டூருக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு கொரட்டூர் காவல் நிலையத்திற்கு வந்த ரவீந்திரன், தனது மகள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரிடம் கூறினார். வழக்கு பதிவு செய்த போலீசார் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், விஜயராகவன், சந்திரசேகரன், கிளாசன் ஜோஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கடத்தப்பட்ட இளம் பெண்ணையும், கடத்தல் கும்பலையும் தேடி வந்தனர். இதற்கிடையில், மீண்டும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் ரவீந்திரனுக்கு போன் செய்து உடனடியாக பெருங்களத்தூருக்கு பணத்துடன் வரும்படி கூறியுள்ளார். அங்கு சென்றபோது கடத்தல் கும்பலை சேர்ந்தவர் மீண்டும் திண்டிவனத்துக்கு ரவீந்திரனை வரச்சொல்லி போன் மூலம் தகவல் கொடுத்தார். போலீசார் ரவீந்திரனை பின்தொடர்ந்து வருவதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கும் வரவில்லை. இதை தொடர்ந்து, திண்டிவனம் பகுதிகளில் போலீசார் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

கடத்திய தோழி

இதற்கிடையில் கடத்தப்பட்ட பானுப்பிரியாவின் தோழி பிரேமாவை போலீசார் பிடித்து துருவி துருவி விசாரித்ததில், போலீசாருக்கு சரியான பிடி கொடுக்காமல் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். பின்னர் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் பானுப்பிரியாவை காதலனுடன் சேர்ந்து கடத்தியதை பிரேமா ஒப்புக்கொண்டார். பிரேமா கொடுத்த தகவல் அடிப்படையில் போலீசார் பானுப்பிரியாவை மீட்டனர். மேலும், பிரேமாவையும், கடத்தலுக்கு உதவியாக இருந்த குளித்தலையை சேர்ந்த பிரவீனையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் பிரேமாவின் காதலன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடத்திய ஏன்?

பிரேமா திருநெல்வேலியை சேர்ந்த கார்த்திக் (26) என்பவரை காதலித்து வந்தார். அவருடன் பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் தனது காதலன் கார்த்திக்கிடம் தனது தோழி பானுப்பிரியாவை கடத்தினால் அவரது பெற்றோரிடம் இருந்து அதிக பணம் பறிக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளார். இதற்கு கார்த்திக்கும் சம்மதித்ததால் திட்டமிட்டபடி ஆயுதபூஜையன்று பிரேமா தனது தோழி பானுப்பிரியாவை அம்பத்தூரில் உள்ள தியேட்டருக்கு சினிமாவுக்கு அழைத்து சென்றுள்ளார். சினிமா முடிந்து இருவரும் மின்சார ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தனர். கொரட்டூரில் இறங்க முயன்ற பானுப்பிரியாவிடம், தன்னை ஆவடியில் இறக்கிவிட்டு வரும்படி பிரேமா வற்புறுத்தினார். அதை ஏற்று அவரும் ஆவடிக்கு சென்று, ரயில் நிலையத்தில் இருவரும் இறங்கினர்.

கடத்திய பெண் மீட்பு

அங்கு 3 பேர் அவர்களை காரில் ஏறும்படி கூறினர். அதற்கு பானுப்பிரியா தயங்கினார். அப்போது பிரேமா, "இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள்தான், நாம் காரில் ஏறிச்சென்றால் உன்னையும் வீட்டில் இறக்கிவிடுவார்கள்" என்று கூறியுள்ளார். அதை நம்பி பானுப்பிரியா காரில் ஏறினார். அவர் காரில் ஏறிய உடன் திடீரென அவர்கள் பானுப்பிரியாவின் வாயை பொத்தினர். இதனால் திடுக்கிட்ட அவர், செய்வதறியாது திகைத்தார். பின்னர் அவரை மோரை கிராமத்துக்கு காரில் கடத்திச் சென்றனர். வழியில் பிரேமாவை மட்டும் அவர்கள் இறக்கி விட்டனர். மோரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பானுப்பிரியாவை அடைத்து வைத்து விட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தோழியே பணத்திற்காக கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் கொரட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Police on Friday arrested a 26-year-old woman who with her boyfriend and two other accomplices kidnapped her friend and demanded Rs 5 lakh for her release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X