தஞ்சை தமிழழகிக்கு நடந்த துயரம்.. விபரீதத்தின் பின்னணியில் பகீர் .. சார் ஆட்சியர் நேரடி விசாரணை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி.இவரது மகன் பாலமுருகன் (வயது 32) என்பவரது மனைவி தமிழழகி தற்கொலை செய்து கொண்டார். இந்த சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரை ஏற்று சார் ஆட்சியர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் விவசாயி.இவரது மகன் பாலமுருகன் (வயது 32) இவருக்கும் பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த துரைமாணிக்கம் -பார்வதி தம்பதிகளின் மகள் தமிழழகிக்கும் (வயது 26) கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பாலமுருகன் கடந்த ஒரு வருடமாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
தமிழழகி ஆவணம் பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலையில் தமிழழகி தனது பெற்றோருக்கு போனில் பேசி நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

பதறிய பெற்றோர்
அன்று மாலையே தமிழழகியின் பெற்றோருக்கு, வெளிநாட்டில் உள்ள தமிழழகியின் கணவர் பாலமுருகன் போன் செய்து உங்கள் மகள் தூக்கு மாட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழழகியின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு ஆவணம் கிராமத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு தமிழழகி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணை
இதையடுத்து தமிழழகியின் பெற்றோர் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி செருவாவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அங்கு சென்ற செருவாவிடுதி காவல்துறையினர் இறந்து கிடந்த தமிழழகி உடலில் காயங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தனர். மேலும், காவல்துறையினர் தமிழழகி வசித்து வந்த வீட்டிற்கு சென்றும், அருகில் வசித்து வரும் குடியிருப்புவாசிகளிடமும் விசாரணையில் ஈடுபட்டனர். பின்பு இறந்துகிடந்த தமிழழகியின் உடலை உடற்கூறாய்வுக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிஎஸ்பி விசாரணை
தமிழழகிக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் தான் ஆகின்றன என்பதால் சார் ஆட்சியர் பாலச்சந்தர், மற்றும் பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலைக்கு காரணம்
இதனிடையே இறந்துபோன தமிழழகி ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்ததாகவும், அந்த கடிதத்தில் அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும், அந்த தொந்தரவு காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், அவர்கள் பெயரை குறிப்பிட்டு தமிழழகி எழுதி வைத்துள்ளதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். அந்த கடிதம் காவல்துறையினர் வசம் உள்ளது. எனவே முழுமையாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே சடலத்தை பெற்றுக்கொள்வோம் என தமிழழகியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications