அதிகாரிகள் அலட்சியம் - கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமிகள் - தேனியில் சோகம்!
தேனி: தேனி மாவட்டம் அருகே, அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசு பொது சுகாதார கழிவு நீர்தொட்டியில் தவறி விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் பேரூராட்சியில் உள்ள பாவலர் தெருவில் வசிக்கும் ஈஸ்வரன் என்பவரின் 7 வயது மகள் நிகிதாஸ்ரீ. மேற்கு நந்தகோபால் தெருவை சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் 6 வயது மகள் சுபஸ்ரீ. இவர்கள் இருவரும் அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கழிவு நீர்தொட்டி
பள்ளித் தோழிகளான இருவரும், பண்ணைப்புரம் பேரூராட்சிக்குச் சொந்தமான பொது சுகாதார கழிவு நீர்தொட்டியின் மேல் உள்ள மூடியின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். பழுதான மூடியாக இருந்ததால், எதிர்பாராத விதமாக அந்த மூடி திடீரென உடைந்து விழுந்தது. இதில் மூடியின் மேல் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகளும் செப்டிக் டேங்க் நீரில் விழுந்து மூழ்கினர்.

சிறுமிகள் உயிரிழப்பு
சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டுக்காரரான ரமேஷ் என்பவர், விரைந்து குழிக்குள் இறங்கி சிறுமி இருவரையும் தூக்கினார். பலத்த காயம் அடைந்து மூச்சு திணறல் ஏற்பட்ட 2 சிறுமிகளையும், உறவினர்கள் உட்பட அருகில் உள்ளவர்கள், உடனடியாக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு சிறுமி உயிரிழந்தார். மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது மற்றொரு சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை மறியல்
செப்டிக் டேங்க் மற்றும் பழுதான மூடியை சரி செய்ய கோரி, பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால், தற்போது 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து மறியலை உறவினர்களும், பொதுமக்களும் கைவிட்டனர். இதனையடுத்து, உயிரிழந்த சிறுமிகளின் உடல், உற்கூறு பசிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அதிகாரிகளின் அலட்சியத்தால், பழுதான அரசு பொது சுகாதார கழிவு நீர்தொட்டியில் தவறி விழுந்து, 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், பண்ணைப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications