பத்தல..பத்தல..ஆதரவாளர்களை உசுப்பேற்றும் ஓபிஎஸ்! இபிஎஸ்க்கு எதிராக போடும் பக்கா ப்ளான்! சுறுசுறு தேனி
தேனி : அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தனக்கு ஆதரவான சிக்னல்களால் அமைதியாக இருந்த ஓபிஎஸ் தரப்பு, தற்போது வரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இறங்கி வராததால் அவர் தரப்பு ஆதரவாளர்களை இழுக்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. இதற்காக அவர் டீம் மா.செ.க்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
பாஜக ஆதரவு காரணமாக உற்சாகத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், பல மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை தங்கள் தரப்புக்கு இழுக்க இது ஒரு நல் வாய்ப்பு எனக் கருதி அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமீப காலமாக ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக இறுதி விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம்
இந்நிலையில் தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ்ஸை சந்தித்த ஆதரவு தெரிவிக்கும் ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவாளர்கள் சாரைசாரையாக வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கலகல கைலாசபட்டி
கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வத்தின் கைலாசபட்டி பண்ணை வீடு களைகட்டி காணப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தால் நியமனம் செய்யப்பட்டு இருந்த மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி தரப்பிலிருந்து ஒன்றிய நகர அளவிலான நிர்வாகிகளை அழைத்து வந்து ஆதரவு தெரிவிக்க வைத்தனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு மாநிலங்களவை உறுப்பினரான தர்மர் தலைமையில் தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பாஜக -டிடிடி தினகரன்
இந்நிலையில் பாஜக -டிடிடி தினகரன் ஆதரவு தனக்கு இருந்த போதும் எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கி வராததால் ஓபிஎஸ் தரப்பை கடும் அதிருப்தியில் இருக்கிறது. என்ன நடந்தாலும் இறுதிவரை போராடி தனக்கான இடத்தை பெற்றே தீருவேன் என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் சேர்க்க மறுத்து வருகிறார். இதனால் எடப்பாடிக்கு எதிராக டெல்லி தரப்பு பல்வேறு கட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய உத்தரவு
ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரை இறங்கி அடிக்க முடிவு செய்திருப்பதாக கூறுகிறது சேலம் தரப்பு. இது ஒரு புறம் இருக்க ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தலைமை கைவிட்டு விடலாம் எனவும் கடந்த சில நாட்களாக யூகங்கள் பரவி வருகிறது. இதன் காரணமாக தேனி தரப்பு சற்றே அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் பாஜக தரப்புக்கும் எடப்பாடி தரப்புக்கும் தங்களது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து வரும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பல மாவட்ட செயலாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உற்சாகம்
இந்நிலையில் மாவட்ட செயலாளர்களுக்கு தேனி தரப்பு முக்கிய உத்தரவு ஒன்றை புதுப்பித்து இருக்கிறது. அந்த வகையில் எடப்பாடி தரப்பில் இருக்கும் நிர்வாகிகளை அதிக அளவில் தேனிக்கு அழைத்து வரவேண்டும் என உத்தரவிடப்பட்டு இருக்கிறது. காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு சரிவதோடு பாஜக தலைமைக்கும் தன் மீது நம்பிக்கை அதிகரிக்கும் என்பதால் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார் என்கின்றனர் தேனி ரத்தத்தின் ரத்தங்கள். இதை அடுத்து சிறப்பு கவனிப்போடு எடப்பாடி தரப்பு நிர்வாகிகளை வளைக்கும் பணியில் ஓபிஎஸ் ஆதரவு மாசெக்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் எடப்பாடி தரப்பு சற்றே அதிர்ச்சியில் இருந்தாலும் முடிந்தவரை நிர்வாகிகளை தக்கவைத்துக் கொள்ள தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications