பணம் தீர்ந்ததும்.. பஸ் நிலையத்தில் "மூதாட்டியை" வீசி சென்ற உறவினர்கள்.. அதிர்ந்த நெல்லை
திருநெல்வேலி: திருநெல்வேலியில் மூதாட்டி ஒருவரின் சேமிப்புப் பணம் தீரும் வரை, அவருடன் ஒட்டிக்கொண்டிருந்த உறவினர்கள் காசு தீர்ந்ததும் அவரை தெருவில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணம் என்ற காகிதத் தாளுக்கு இருக்கும் மரியாதை கூட, உயிருடன் நடமாடும் மனிதர்களுக்கு இல்லை என்ற உண்மையை இந்தச் சம்பவம் முகத்தில் அடித்ததை போல உணர்த்தியுள்ளது.
தற்போது உணவு கூட இல்லாமல் நிர்கதியாக இருக்கும் அந்த மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
டிராமா.. ஓசியில் வரமாட்டேன்னு மூதாட்டி அடம்பிடித்த வீடியோ பின்னணியில் அதிமுக புள்ளி.. திமுக விளாசல்

பணம் இல்லாதோருக்கு..
பணம் இல்லாதோருக்கு இந்த உலகத்தில் இடம் இல்லை என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றவன் தெய்வப் புலவன் திருவள்ளுவர். இது உண்மையிலும் உண்மை என்பதை நாமே பல இடங்களில் பார்த்திருப்போம். பணம் இருந்தால்தான் தாய் தந்தையை கூட, கடைசிக் காலத்தில் பார்த்துக் கொள்ள இன்றைய இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர். பிள்ளை பிள்ளை என, குழந்தைகளுக்காக தனது சேமிப்புப் பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டு கடைசியில் அதே பிள்ளைகளால் துரத்தி அடிக்கப்பட்ட வயதான தாய் - தந்தையர் இங்கு ஏராளம். அப்படியொரு கொடுமையான சம்பவம்தான் தற்போது திருநெல்வேலியில் நடந்திருக்கிறது.

குழந்தையில்லா தம்பதியர்..
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு கள்ளிக்குளம் ஊரைச் சேர்ந்தவர் மாடத்தி (80). இவருக்கு குழந்தைகள் இல்லை. எனவே, மாடத்தியும், கணவரும் கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாகவே இருந்துள்ளனர். பிள்ளைகள் இல்லாவிட்டாலும் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் குழந்தை போல நினைத்து அன்பு பாராட்டி வந்துள்ளனர். அவர்களிடம் அதிக அளவில் பணமும் இருந்ததால் உறவினர்களும் இவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதுமாக இருந்துள்ளனர்.

தீர்ந்துபோன சேமிப்புப் பணம்..
இந்த சூழலில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி மாடத்தியின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்து போனார். இருந்த ஒரு உறவும் போய்விட்டாலும், கணவரின் சேமிப்புப் பணம் மாடத்தியை கைவிடவில்லை. நிறைய பணம் இருந்ததால் மூதாட்டி மாடத்தியை பராமரிக்கவும் உறவினர்கள் மத்தியில் போட்டோ போட்டி நடந்துள்ளது. பராமரிக்கிறோம் என்ற பெயரில் மாடத்தியிடம் இருந்த பணத்தை எல்லாம் அவர்கள் சுருட்டிக் கொண்டு விட்டனர. இதனால் ஒருகட்டத்தில் மாடத்தியிடம் இருந்த பணம் அனைத்தும் தீர்ந்து போனது.

தெருவில் வீசிய உறவினர்கள்..
இந்நிலையில், மாடத்திக்கு சொந்தமான வீடும் இடிந்து போனது. பணம் இருந்த வரை மூதாட்டி மாடத்திக்கு மரியாதை கொடுத்து வந்த அவரது உறவினர்கள், அவரை தொல்லையாக பார்க்க ஆரம்பித்தனர். வீடு இடிந்ததால் நிர்கதியாக நின்ற மாடத்தியை தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல உறவினர்கள் யாரும் தயாராக இல்லை. இந்த சூழலில், அவர் ஊரில் இருந்தால் தானே தொல்லை என நினைத்த அவரது உறவினர்கள், 80 வயதான மூதாட்டி என்று கூட பாராமல் வடக்கு கும்பிகுளம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அவரை போட்டுவிட்டு சென்றனர். இதனால் கடந்த பல நாட்களாக உணவு இல்லாமல் மாடத்தி அங்கேயே இருந்துள்ளார். அங்கு வருபவர்கள் யாராவது இரக்கப்பட்டு சாப்பாடு வாங்கிக் கொடுத்தால்தான் அவருக்கு உணவு என்ற நிலையில் தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது அந்த பரிதாப ஜீவன். எனவே, நிர்கதியாக உள்ள மாடத்தியை முதியோர் இல்லத்தில் சேர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.