ஸ்டாலினும் – ராகுலும் இரட்டைக் குழல் துப்பாக்கி.. தவெகவுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி
திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஸ்டாலினும் - ராகுல் காந்தியும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுகிறார்கள். இந்தக் கூட்டணியை உடைக்க விரும்புவோர் தான் தோல்வியடைவார்கள் என தவெகவுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில், "ஜவஹர்லால் நேரு இருமொழி கொள்கையை சொன்னார். தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்கிற வரை இருமொழி கொள்கையை பின்தொடரட்டும். அது அந்த மாநிலத்தின் விருப்பம் என்றார். ஜவஹர்லால் கொடுத்த வாக்குறுதியை இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோர் தொடர்ந்து பாதுகாத்தனர்.

இந்தி திணிப்பு
இருமொழி கொள்கையை மீறி மூன்றாவது மொழி திணிக்கப்படாது என்ற உறுதிமொழியை பின்பற்றினோம். பாஜக ஆட்சியில் இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. ஒரு மாநிலம் என்ன விரும்புகிறதோ அதுதான் ஜனநாயகம். ஜனநாயகத்திற்கு முரணாக இருப்பதுதான் பாஜக ஆட்சி. எல்லாவற்றிலும் இந்தியை திணித்து வரலாற்றை மறைக்கிறார்கள். வரலாற்று திணிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பொது மக்கள், தமிழ் ஆர்வலர்களும் இதை எதிர்த்து அகற்றுகிறார்கள். சட்டப்பூர்வமாக அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை முதலமைச்சர் எடுப்பார். ஆனால் மூன்றாவது மொழியை திணிப்பது என்பதை ஏற்க முடியாது. இதில் ஜவஹர்லால் நேரு சொன்னதை கடைபிடிக்க வேண்டும். திமுகவில் எங்களுக்கு வேண்டிய தொகுதிகளை நாங்கள் போராடி எல்லாம் வாங்கவில்லை.
அதிமுக - பாஜக கூட்டணி
முதலில் பாஜகவில் அதிமுகவிடம் போராடாமல் வாங்க சொல்லுங்கள். கடந்த 2021 தேர்தலுக்காக அமித்ஷா லீலா பேலஸில் தங்கி எப்படி கூட்டணியை முடித்தார் என்பதை அனைவரும் அறிவார்கள். அப்போது அவர் யாரை சேர்க்க சொன்னார், யாரை சேர்க்கவில்லை, அப்போது சேர்க்காமல் இப்போது சேர்த்தது எல்லாமே அவர்கள் கூட்டணி தான்.
எங்களை பொறுத்தவரை தமிழ் மண்ணையும், மக்களையும் பாதுகாப்பது இந்தியா கூட்டணி. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டணி வலிமையாக உள்ளது. ஒருபோதும் பாஜகவால் தமிழ் மண்ணை ஆள முடியாது என எங்கள் தலைவர் ராகுல் காந்தி கூறினார். அதை இந்தத் தேர்தலிலும் நிரூபித்துள்ளோம். பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள கட்சிகளை விழுங்கி அழிக்கிற வேலையை செய்கிறார்கள்.
தவெகவுக்கு பதிலடி
மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களை தொடர்ந்து அந்த அரசியலை தமிழ்நாட்டிலும் பின்தொடர்வார்கள். அதிமுக இப்போதுவரை பாதுகாப்பாக இல்லை. அதிமுகவை விழுங்கி ஸ்வாஹா செய்வார்கள். தலைவர்களை எல்லாம் மிரட்டுவார். தேர்தல் முடியும்போது தெரியும். பொறுத்திருந்து பாருங்கள். காங்கிரஸ் கட்சி 140 வருடங்களாக உள்ள பேரியக்கம். நாங்கள் நேற்று முளைத்த காளான் இல்லை.
எவ்வளவோ வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளோம். முதல்வர் ஸ்டாலினும் - எங்கள் தலைவர் ராகுல் காந்தியும் அண்ணன் தம்பியாக இருந்து இந்த கூட்டணியை வலிமையாக உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டையும், இந்தியாவையும் பாதுகாப்பதற்காக இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதை யாராவது சிதைக்க விரும்பினால் அவர்கள் தான் தோல்வியடைவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications