பாலாற்றில் அணை கட்டினால்..உச்சநீதிமன்றத்தில் வழக்கு!ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!
திருவள்ளூர்: பாலாற்றில் அணைக்கட்டும் பணிகளை ஆந்திர அரசு செயலாக்கத்தில் கொண்டு வந்தால், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் துரிதப்படுத்தப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை மண்டலத்தின் நீர்வளத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் கூட்டம், அத்துறையைச் சேர்ந்த அமைச்சர் துரை முருகன் தலைமையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட15 மாவட்டங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் துரைமுருகன்
இந்த ஆய்வு கூட்டத்தில், நீர்வளத்துறை முதன்மை செயலாளர் சக்சேனா, சென்னை மண்டல முதன்மை பொறியாளர் முரளிதரன், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டறிந்தார்.

வெள்ள பெருக்கு
ஆய்வுக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரை முருகன், வேலைகளில் உள்ள சுனக்கங்களை கூறியும், பணிகளை விரைவுப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், வடகிழக்கு பருவ மழை தொடர்பாக பேசப்பட்டதாகவும் தெரிவித்தார். கடந்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைப்போல, இனி வரும் காலங்களில் ஏற்படக்கூடாது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

புதிய அணை
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாலாற்றில் அணைக்கட்டும் பணிகளை ஆந்திர அரசு, செயலாக்கத்தில் ஈடுபட்டால், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு துரிதப்படுத்தப்படும். ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் தடுப்பணை கட்ட ஆய்வு செய்யப்படும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் அனைத்து ஊர்வலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேருந்தில் ஓசியில் பயணம் என்பது குறித்து பொன்முடி பேசி, பேருந்தில் டிக்கெட் எடுத்த பெண்ணுக்கு செலவு வைத்திருக்கிறார். எளாவூர் 7 கண் பாலத்தில் தடுப்பணை கட்ட ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications