வெறும் 13 வயசு பையன்.. தூக்கு போட்டு தற்கொலை.. என்ன காரணம்னு பாருங்க!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 13 வயது சிறுவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இந்த சிறுவன் வீட்டிற்கு பின்னால் இருந்த ஓலைக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
13 வயது சிறுவன் செல்போன் கேம் தாக்கத்தினால் உயிரிழந்தானா அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சிறுவர், சிறுமியர்கள் அடிக்கடி மரணம்
தமிழ்நாட்டில் கடந்த காலமாக சிறுவர் சிறுமிகளின் அகால மரணம் என்பது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் தொல்லையால் மாணவிகள் தற்கொலை, சிறுமி எரித்துக் கொலை, பட்டினியால் சிறுவன் உயிரிழப்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றன. இதுஒருபுறம் இருக்க செல்போன் விளையாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்கள் அதனால் ஏற்படும் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள்
கொரோனா பாதிப்புக்கு முன்னர் சிறுவர்களிடம் செல்போன்களை தரவேண்டாம் என்று அறிவுரை கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆன்லைன் வகுப்புகளால் கட்டாயம் செல்போன் தந்தே ஆகவேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் வீட்டில் பெற்றோர் இல்லாத சமயங்களில் குழந்தைகள் வகுப்பு நேரம் போக மீதி நேரம் முழுவதும் கேம் விளையாடுவதற்காகத்தான் பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமின்றி போதிய விழிப்புணர்வு இல்லாத சிறுவர்கள் ஆன்லைன் கேம் நிறுவனங்கள் மிரட்டி பணம் கேட்கும்போது பயந்து போய் கொடுத்துவிடுகின்றனர். பெற்றோரின் ஏடிஎம் கார்டு எண்களை பயன்படுத்தி பணம் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர். கடந்த ஜூலை மாதம் மத்திய பிரதேசத்தில் செல்போன் கேம் விளையாடி 13 வயது சிறுவன் 40 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்துவிட்டான். இதனால் பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டான். கடந்த வருடம் ஜூலை மாதம் சென்னை டி.பி.சத்திரம் கல்லூரி மாணவர் ஆன்லைனில் அனைத்து பணத்தையும் இழந்ததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரியில் ஆன்லைன் கேமிற்கு அடிமையான தொழிலதிபரின் மகன் தீபக் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமை
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெருமாநல்லூர் அருகே ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கண்ணன் ஈரோட்டில் அரசு விடுதியில் தங்கி அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தான். அதே சமயம் வகுப்பு நேரம் போக செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவதில் நீண்ட நேரம் செலவழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் செல்போனில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென வெளியில் சென்றுவிட்டு வருவதாக தாய் சுதா மற்றும் தம்பி கண்ணனிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளான்.

தற்கொலை செய்து கொண்ட சிறுவன்
வீட்டை விட்டு சென்ற மகன் நீண்ட நேரம் ஆகியும் வராமல் போகவே அவரது தாய் அவனை தேடியுள்ளார். பின்னர் வீட்டிற்கு பின்புறம் சென்று பார்த்தபோது அங்கிருந்த ஓலைக் கொட்டகையில் உங்ள மூங்கிலில் சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டான். இதை பார்த்த தாய் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். கண்ணனை பரிசோதித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாணவன் பயன்படுத்திய செல்போனில் சிறுவர்களை அடிமைப்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகள் இருப்பதை உறுதிப்படுத்தினர். ஆனாலும் சிறுவன் தற்கொலை செய்து கொண்டானா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை செய்யப்பட்டானா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிறுவர்களுக்கு சங்கர் ஜிவால் அறிவுரை
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆன்லைன் மூலம் கேம் விளையாடும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்கள் பணம் கொடுப்பதை தவிர்க்க, தங்களது குழந்தைகள் செல்போனில் விளையாடும்போது பெற்றோர் கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் கேம் விளையாட்டு குறித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றும் நபர்களிடம் சிறுவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும் பெற்றோர்கள் தங்கள் பணப் பரிவர்த்தனை தொடர்பான எந்த விவரங்களும் செல்போனில் சேமித்து வைக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications