தாராபுரத்திற்கு நாளை வருகிறார் மோடி - ஒரே மேடையில் இபிஎஸ், ஒபிஎஸ் உடன் இணைந்து பிரசாரம்
திருப்பூர்: பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை தாராபுரம் வருகிறார். அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். ஒரே மேடையில் மோடியுடன் இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளனர்.
பாஜக மாநில தலைவர் எல். முருகன் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் மேற்கொள்கிறார். தாராபுரத்தில் நாளை காலை 11.30 மணிக்கு பிரதமா் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மோடியுடன் ஒரே மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பங்கேற்று பேச உள்ளனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் தாராபுரம் வேட்பாளர் எல். முருகன் உள்ளிட்ட 13 வேட்பாளர்களை ஆதரித்து மோடி வாக்கு சேகரிக்க உள்ளார். மோடி வருகையை முன்னிட்டு தாராபுரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாஜக தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று தாராபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, பிரதமா் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறினார்.
கூட்டத்தில் தாராபுரம் சட்டசபைத் தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் 13 வேட்பாளா்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனா். தாராபுரம் தொகுதியில் மக்களின் ஆதரவு 100 சதவீதம் எங்களுக்கு உள்ளது. அது போன்று தமிழ்நாட்டில்பிற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு 95 சதவீத வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.