திருப்பூர் நவீன்குமாருக்கு வெறும் 23 வயது தான் ஆகிறது.. வெறும் ஒரு நொடிகூட.. வாழ்க்கை நிச்சயமில்லை
திருப்பூர்: திருப்பூர் மாநகரத்தையொட்டியுள்ள திருமுருகன்பூண்டியில் விஜிவி கார்டன் பகுதியில் வெள்ளியங்கிரி என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மகன் நவீன் குமாருக்கு 23 வயது ஆகிறது. ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நன்றாக இருந்த நவீன் குமாரின் வாழ்க்கையில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சம்பவம் வெறும் ஒரு நொடியில் நடந்தது. திடீரென தனது பைக்கின் மீது சாய்ந்தபடி சரிந்தார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பல இளைஞர்கள் உயிரிழக்கிறார்கள். அதுபோல் தான் நவீன்குமாரும் உயிரிழந்துள்ளார். வெறும் 23 வயதில் மாரடைப்பு ஏற்படுவது அரிதிலும் அரிதான நிகழ்வாகும். பொதுவாக, இந்த வயதில் மாரடைப்புக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு தான். ஆனாலும் சமீப காலங்களில் இளைஞர்களிடையே இந்த பிரச்சனை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஏனெனில் சீரற்ற உணவுப் பழக்கம் முக்கியமான காரணமாக மருத்துவர்களால் கூறுப்படுகிறது. துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய், உப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது உடலில் கெட்ட கொழுப்பைக் (cholesterol) குவித்து, இரத்த நாளங்களை அடைக்க வழிவகுப்பது தான் மாரடைப்புக்கு வழிவகுக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதேபோல் மன அழுத்தம் (Stress) முக்கியமான காரணமாக இருக்கிறது. படிப்பு, வேலை, மற்றும் சமூகப் போட்டிகள் காரணமாக மன அழுத்தம் அதிகமாகி, இரத்த அழுத்தத்தை (Blood Pressure) அதிகரித்து, இதயத்திற்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தி மாரடைப்பு ஏற்படுகிறது. அதேபோல் உடற்பயிற்சி இல்லாதது, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை, நீரிழிவு நோய் போன்றவையும் மாரடைப்புக்கு காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் காரணமாக இதயத் தசை மற்றும் இரத்த நாளங்கள் சேதமாகிறது என்றும் புகைபிடிப்பதால் இரத்தக் குழாய்களை சுருங்கச் செய்து, அடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல் சில குடும்பத்தில் முன்பே, யாருக்காவது இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் அல்லது அதிக கொழுப்புச் சத்து போன்றவை இருந்தால், இ இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து, முறையாக மருத்துவர்களை அணுகினால் இந்த பிரச்சனைகளை குறைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
திருப்பூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த திருமுருகன்பூண்டி விஜிவி கார்டன் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரது மகன் நவீன் குமார் (23) கபடி வீரர் ஆவார். நவீன் குமார் பெரியாயிபாளையத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து அலுவலகத்திற்கு வெளியே தனது வாகனத்தில் வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியில் தலை சுற்றல் ஏற்பட்டு சில நொடிகளிலேயே இருசக்கர வாகனத்தின் மேல் சாய்ந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கீழே விழுந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் நவீன் குமாரை மீட்டு திருமுருகன்பூண்டி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முதலுதவி அளித்து அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவிநாசி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நவீன்குமாரை பரிசோதித்ததில் ஏற்கனவே அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்று கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. உடனடியாக சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நவீன்குமார் அலுவலக வாயிலில் ஹார்ட் அட்டாக் சமயத்தில் கீழே விழுந்து இறப்பது அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications