ஷாக் ஆன ஆபீசர்ஸ்... வைக்கோல்போரில் ரூ1 கோடி பதுக்கல்.. சிக்கிய மணப்பாறை அதிமுக எம்எல்ஏவின் ஓட்டுநர்!
மணப்பாறை: மணப்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரின் ஓட்டுநர் வீட்டு வைக்கோல் போரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ1 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சட்டசபை தேர்தல் களத்தில் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிங்கெனாதபடி சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் பிரமுகர்களுக்காக பணத்தை பதுக்கியவர்கள் இப்போது வசமாக சிக்கிக் கொண்டும் இருக்கிறார்கள்.

அதிமுக எம்.எல்.ஏ.
இதேபோல மணப்பாறை அதிமுக எம்.எல்ல்.ஏ. சந்திரசேகரை குறி வைத்து வருமான் வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். எம்.எல்.ஏ. சந்திரசேகரின் ஓட்டுநர்களான அழகர்சாமி, ஆனந்த், ஒப்பந்தகாரர் தங்கபாண்டியன் ஆகியோர்தான் அதிகாரிகளின் இலக்காக இருந்தது.

எங்கும் சிக்காத பணம்
அத்துடன் எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமான நபரின் கல்குவாரியிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது யாருடைய வீட்டிலும் எந்த பணமும் சிக்கவில்லை. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

நள்ளிரவு ரெய்டு
இதன்பின்னர் நள்ளிரவில் வருமான வரித்துறை இணை இயக்குநர் மதன்குமார் தலைமையிலான அதிகாரிகள் அழகர்சாமி வீட்டுக்கு சோதனைக்கு சென்றனர். அவரது வீட்டில் எதுவும் சிக்காத நிலையில் திடீரென அழகர்சாமி வீடு அருகே இருந்த வைக்கோல் போர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

வைக்கோல்போரில் ரூ1 கோடி
வைக்கோல் போரை பிரித்து பார்த்ததில் 500 ரூபாய் கட்டுகள் கத்தை கத்தையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் ரூ1 கோடி ரொக்கப் பணம் வைக்கோல்போரில் இருந்து கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அழகர்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.