“ஹரே பாய்.. திருச்சி வராம..” - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பற்றி கே.என்.நேரு பேச்சால் சிரிப்பலை!
திருச்சி : அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு 9 சகோதரர்கள். அவர்களைப் படிக்க வைத்து, நல்ல தொழிலை ஏற்படுத்திக் கொடுத்து, தன்னுடைய சொத்தை எல்லாம் கொடுத்துவிட்டு வெறும் 60 சென்ட் நிலத்தை வைத்துக் கொண்டு வாழ்கிற ஒரு நல்ல மனிதர் மஸ்தான் என பாராட்டு பத்திரம் வாசித்தார் அமைச்சர் கே.என்.நேரு.
மேலும், மாலத்தீவு செல்ல இருந்த நிலையில், ஹரே பாய் திருச்சி வராம நீ போகக்கூடாது என்றேன். சரி நா போகலண்ணா என்று மஸ்தான் கூறினார் என கிண்டலாக கே.என்.நேரு பேசினார்.
திருச்சியில் நடைபெற்ற தென்னிந்திய திருச்சபையின் நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, செஞ்சி மஸ்தான் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். அப்போது, திமுக அரசு, சிறுபான்மையினருக்கு செய்த பணிகள் பற்றி உரையாற்றினர்.

திருச்சியில் அமைச்சர்கள்
தென்னிந்திய திருச்சபையின் திருச்சி - தஞ்சை திருமண்டலத்தின் 75 ஆம் ஆண்டு பவள விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தென்னந்திய திருச்சபை தஞ்சை மற்றும் திருச்சி மண்டலத்தின் பேராயர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் மஸ்தானுக்கு 60 செண்ட் நிலம் தான்
தென்னிந்திய திருச்சபை வளர்வதற்கு காரணமாக இருந்த முன்னாள், இந்நாள் பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை செய்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "இங்கு இருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் குறித்து செல்ல வேண்டுமென்றால் அவருக்கு 9 சகோதரர்கள். அவர்களைப் படிக்க வைத்து, நல்ல தொழில்களை ஏற்படுத்திக் கொடுத்து, தன்னுடைய சொத்தை எல்லாம் கொடுத்துவிட்டு வெறும் 60 சென்ட் நிலத்தை வைத்துக் கொண்டு வாழ்கிற ஒரு நல்ல மனிதர். நல்ல சகோதர பாசம் கொண்டவர். அப்படி இருந்தால் தான் நம் பொதுமக்களுக்கு பணியாற்ற முடியும்." எனப் பேசினார்.

ஹரே பாய்
மேலும் பேசிய கே.என்.நேரு, "நேற்று கூட மாலத்தீவு செல்ல தமிழக முதல்வரிடம் அனுமதி வாங்கிவிட்டார். ஹரே பாய் திருச்சி வராம நீ போகக்கூடாது என்றேன். "சரி நா போகலண்ணா" என்று கூறினார். விசா சரியா கிடைக்கலை அவருக்கு" என்று பேசியதும் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

எச்.ராஜாவே சொல்கிறார்
தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு, "அவருக்கு இந்த மதம் என்று கிடையாது. அவர் இஸ்லாமியராக இருந்தாலும் கூட அனைத்து சமூகத்தினருடன் இணைந்து செயல்படுவார். சிறுபான்மை மக்களோடு இருந்தாலும் சரி இட ஒதுக்கீடாக இருந்தாலும் கடுமையாக கொள்கையில் பணியாற்றுவார் கருணாநிதி. நாங்கள் கூட நினைத்தது உண்டு முதல்வர் ஸ்டாலின் அவ்வாறு சிறப்பாக செய்வாரா என்று. ஆனால், எச்.ராஜா சொல்கிறார் ஸ்டாலின் மிகவும் கெட்டிக்காரராக இருக்கிறார் என்று. சிறுபான்மையினர் அவர்களுக்கான இட ஒதுக்கீடு மட்டுமல்ல அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும் என்பதில் கலைஞரை காட்டிலும் முதல்வர் ஸ்டாலின் எல்முனை அளவு கூட மாறாமல் நேராக தராசு போல் உறுதியாக இருக்கிறார்.

சுயநலமும் இருக்கிறது
இங்கிருக்கும் மூத்தவர்களுக்குத் தெரியும். 1991-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடைச் சட்டத்தால் கிறிஸ்துவர்கள் பாதிக்கப்பட்டனர். கிறிஸ்துவ மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் தேவையான பணிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. அதையெல்லாம் மாற்றி தொடர்ந்து கழகம் உங்களுடைய வளர்ச்சிக்காக இருக்கிறது. அதிலும் எங்களுக்கு ஒரு சுயநலம் இருக்கிறது.உங்களை வாழ வைத்தால் தான் எங்களுக்கு வாழ்வு கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு நீங்களும் தமிழக முதல்வருக்கு உறுதுணையாக இருக்கிறீர்கள். அதுதான் எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றியே.

எங்களை மிரட்டுகிறார்கள்
சட்டமன்றத்திலேயே ஆதி திராவிடர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தால் ஆதிதிராவிடர்களுக்கு உள்ள சலுகைகள் கிடைக்கும் என்ற சட்டத்தை நாங்கள் நிறைவேற்றினோம். மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள். ஆனால் இன்று அவர்களே சொல்லுகிறார்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகை கிடைக்கும் என்று. அதற்குக் காரணம் வாக்கு வங்கியை சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுத்தால் மகிழ்ச்சி தான். ஆனால் அவர்கள் நல்லதுக்காக கொடுக்கவில்லை." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications