Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமஜெயம் கொலையில் விலகாத மர்மம்... சிபிசிஐடி,சிபிஐ, எஸ்ஐடி விசாரணை வரை கடந்து வந்த பாதை

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை கடந்த பத்தாண்டுகளில் கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு பத்தாண்டு காலமாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டுள்ளது. தமிழக காவல்துறை, சிபிசிஐ, சிபிஐ என பல துறை அதிகாரிகள் விசாரித்தும் கொலையாளியின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு ராமஜெயம் கொலை செய்யப்பட்டது முதல் சிறப்பு புலனாய்வுக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுவரை வழக்கு கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது காணாமல் போனார் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம். காவல்துறையினர் உறவினர்கள் என பலரும் தேடத் தொடங்கினர். அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் அன்றைய தினமே கண்டெடுக்கப்பட்டது

கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கை தமிழக குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை விசாரணை செய்தது. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. ராமஜெயத்திற்கு நெருக்கமானவர்களை அழைத்து உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. எந்த துப்பும் கிடைக்காமல் கிறுகிறுத்துப்போனார்கள்.

கண்டுபிடிக்க முடியாத மர்மம்

கண்டுபிடிக்க முடியாத மர்மம்

கடந்த 2006ம் ஆண்டு திருச்சியில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட முட்டை ரவிக்கு மூளையாக செயல்பட்ட குணா, சாமி ரவி ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்பதும் போலீசாரின் சந்தேகம். இதனையடுத்தே சிபிசிஐடி போலீசாரின் விசாரணை கூலிப்படைகள் பக்கம் திரும்பியது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஜெயச்சந்திரன்தான் இத்தனை குழப்பத்திற்கும் காரணம் என்ற தகவலும் வெளியானது. அவர்தான் ராமஜெயம் நள்ளிரவில் கடத்தப்பட்டார் என்று கூறியவர். அதோடு சாமி ரவி தப்பிக்கவும் காரணமாக இருந்தாராம். வழக்கு பல கோணங்களில் திசை மாறியும் 2017 ஆம் ஆண்டு வரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

கடந்த 2017ஆம் ஆண்டு சட்டசபையில் விளக்கம் அளித்த அப்போதய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தொழில்போட்டி, அரசியல் விரோதம், குடும்பப் பிரச்சனை ஆகியவற்றால் இந்தக் கொலை நடந்திருக்கலாமோ என சிபிசிஐடி விசாரித்து வருவதாகக் கூறினார். இந்த வழக்கில் இதுவரை 1,100 பேருக்கு மேல் விசாரிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தனிப்பட்ட விரோதம்

தனிப்பட்ட விரோதம்

2910 மொபைல் போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தியவர்கள் சாரிக்கப்பட்டிருப்பதாகவும் ராமஜெயத்தைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 294 வாகனங்கள் ஆய்வுசெய்யப்பட்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கூறினார். ராமஜெயத்திற்கு தொழில்ரீதியாகவும் தனிப்பட்ட வழியிலும் பல விரோதங்கள் இருந்துள்ளன என்றும் இது தொடர்பாக அவருக்கு நெருக்கமானர்கள் கூடுதல் விவரங்களை அளித்தால், அவை விசாரணை செய்யப்படும் என்றும் சட்டசபையில் கூறினார் அப்போதய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

செல்போன் எண்கள்

செல்போன் எண்கள்

ராமஜெயம் கொலையை பொறுத்தவரை போலீசாருக்கு கிடைத்த முக்கிய தடயம் அவர் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் மட்டுமே. அந்த எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டவர்கள், இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியல் தனித் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

இதனையடுத்து ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு 8 நீதிபதிகளை சந்தித்தது. ஒவ்வொரு முறையும் சிபிசிஐடி போலீசார் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால அவகாசம் வாங்கி வருகின்றனர். ரகசிய அறிக்கை என்ற பெயரில் இழுத்தடிப்பு செய்தனர். கொலையாளிகள் யாரும் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ரகசிய அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.

பத்தாண்டு காலமாக இழுத்தடிப்பு

பத்தாண்டு காலமாக இழுத்தடிப்பு

கடந்த 5 ஆண்டு காலமாக சிபிஐ விசாரணை நடத்தியும் ராமஜெயத்தை கொன்ற கொலையாளி யார் என்று நிழலைக் கூட நெருங்க முடியவில்லை. பத்து ஆண்டு காலமாக ராமஜெயம் கொலை வழக்கில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ராமஜெயத்தை கொன்றது யார் என்பது அந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கே வெளிச்சம் என்று திருச்சி மக்கள் கூறத் தொடங்கினர்.

சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு

சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு

இதையடுத்து கொலை செய்யபட்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனபதால், மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

 அறிக்கை தாக்கல்

அறிக்கை தாக்கல்

இந்த வழக்கு நீதிபதி வி. பாரதிதாசன் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி, விசாரணை அதிகாரி சரியான கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 ஹைகோர்ட் உத்தரவு

ஹைகோர்ட் உத்தரவு

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக காவல்துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும், விசாரணைக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் பட்டியலை வழங்குவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ராமஜெயத்தின் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுகுழு விசாரிக்க ஆணையிட்டார். 2017 முதல் விசாரித்த சிபிஐயால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வுக்குழு

சிறப்பு புலனாய்வுக்குழு

இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில், சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையை கண்காணிப்பார். இவர்களின் கண்காணிப்பின் கீழ் தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயை சேர்ந்த ரவி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒருமுறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது என உத்தரவிடப்பட்டுள்ளது.

கொலையாளிகள் சிக்குவார்களா?

கொலையாளிகள் சிக்குவார்களா?

இந்த கொலை வழக்கு விசாரணை முடியும்வரை சிபிஐ அதிகாரி ரவிக்கு வேறு பணிகளை ஒதுக்கக்கூடாது என சிபிஐக்கும் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை கூடிய விரைவில் தொடங்க வேண்டும் எனவும், பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் தொடங்கினால் நல்லது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 7ஆம் தேதி தள்ளிவைத்துள்ளார். ராமஜெயத்தை கொன்றவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்று இனியாவது தெரியவருமா பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+