"யாரா இருந்தால் என்ன.." திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. கொந்தளித்த கடம்பூர் ராஜூ
தூத்துக்குடி: கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் உள்ள துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவுடைதங்கம் (75). மாற்றுத்திறனாளியான இவருக்குத் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனைவி இறந்து விட்டார்.
ஆவுடைதங்கம் தங்கை பத்மாவதி (65). இவருக்கும் திருமணமான சில ஆண்டுகளிலே கணவன் இறந்து விட்டார். இதன் காரணமாக மாற்றுத்திறனாளி அண்ணன் ஆவுடையதங்கம் தனது விதவை தங்கை பத்மாவதியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

கடம்பூர் ராஜூ
பத்மாவதி கூலி வேலை செய்து வரும் பணத்தில் இருவரும் அன்றாட வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். தற்போது பத்மாவதிக்கும் வயது முதிர்வின் காரணமாக வேலை செய்ய முடியவில்லை. இதனால் ஆவுடைதங்கத்தின் முதியோர் உதவித் தொகை ரூ.1000 வைத்துக்கொண்டு அண்ணன் தங்கை இருவரும் வறுமையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதை விளாத்திகுளம் தொகுதி அதிமுகவினர் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜூ கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

செவிலியர்கள் விவகாரம்
இதையடுத்து ஆவுடைதங்கம், பத்மாவதி ஆகியோருக்கு புத்தாடைகள், காலணிகள் மற்றும் உணவுப் பொருட்களை கடம்பூர் ராஜூ வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, "கொரோனா காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது அவசர நிலை கருதி மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் வகையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார்கள். தற்போது எடப்பாடி ஆட்சி தொடர்ந்திருந்தால் அவர்கள் நிரந்தர பணியாளர்களாக பணிநியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள்..

அதிமுக உட்கட்சி பிரச்சினை
அவர்கள் பணி என்பது தலையாய மகத்துவமான பணி கொரோனா காலகட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் கருதாமல் மக்களுக்கு பணியாற்றியவர்கள். அரசியல் பாகுபாடு பார்க்காமல் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் நிரந்தர பணியாளர்களாக ஆக்கப்பட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்துக் கேட்பதற்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சி சம்பவம்
அதிமுக பொதுக்குழு குறித்து உச்ச நீதிமன்றத்தில் இறுதிக் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது விரைவில் நல்ல தீர்ப்பும் வர உள்ளது அதன் பிறகு இப்போது பிரச்சனைகள் எல்லாம் நிறைவு பெற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று நிலைநிறுத்தப்படும். அந்த நேரத்தில் தேர்தல் கமிஷன் அதிமுக நிலையை ஏற்று ஒரே இயக்கமாகச் செயல்படும். அதிமுக ஆட்சிக் காலத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தமிழகம் முழுவதும் சென்று கனிமொழி எம்பி பேசி வந்தார்...

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
அப்போதைய அதிமுக அரசு பாரபட்ச பார்க்காமல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தோம். அந்த ஒரு சம்பவத்தை வைத்து 2021இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மையக் கருத்தாக அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பிரச்சாரம் செய்தனர்.. ஆனால், இப்போது என்ன நடந்துள்ளது எனப் பாருங்கள். சென்னை விருகம்பாக்கத்தில் கனிமொழி எம்பி பங்கேற்ற கூட்டத்திலேயே பெண்ணுக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது சம்பவம் அரங்கேறி உள்ளது

பாலியல் குற்றங்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுமிகள், பெண்களுக்கு என பாலியல் குற்றச் சம்பவம் அதிகரித்துள்ளது.. அதனைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. பெண்கள் பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு உள்ளாவது அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது.. கட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரியப் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்பது சந்தேகம் தான்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications