வேலூர் பாலியல் வழக்கில் 5 பேர் கைது, 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்! ஆன்லைனிலும் புகார் தர ஏற்பாடு
வேலூர்: இளம்பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வழக்கில் முறையாக செயல்படாத தனிப்பிரிவு காவலர் ஜெயகரன் மற்றும் வடக்கு காவல் நிலைய காவலர் நித்தியானந்தம் சுரேஷ் பாபு ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Recommended Video
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள திரையரங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரக் காட்சியை பார்த்த இளம்பெண் தன் நண்பருடன் திரும்பியபோது, அங்கு வந்த ஆட்டோவில் ஏறினார். அதில், ஓட்டுநருடன் 4 பேர் இருந்தனர். அவர்கள் பயணிகள் என ஆட்டோ ஓட்டுநர் கூறியதால் இளம்பெண் தன் நண்பருடன் அந்த ஆட்டோவில் பயணம் செய்தார்.
இளம்பெண் சொன்ன இடத்துக்கு செல்லாத அந்த ஆட்டோ வேலூர் சத்துவாச்சாரியை நோக்கி திரும்பியது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டபோது கத்திமுனையில் இளம்பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை கடத்திய அந்த கும்பல் பாலாற்றங்கரைக்கு கடத்திச்சென்று அங்கு ஆண் நண்பரை சரமாரியாக தாக்கிவிட்டு இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் ஏடிஎம் கார்டை அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.

குற்றவாளிகள்
ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அதிலிருந்து ரூ.40 ஆயிரம் பணம் எடுத்த அந்த கும்பல் அந்தப் பணத்தில் புதிய ஆடைகள் வாங்கியும், உயர்ரக மதுபானங்கள் வாங்கியும் செலவழித்தனர். சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது. அவர்கள் இதற்ககு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது . இதையடுத்து முழு போதையில் இருந்த 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்ததை கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

4 பேர் கைது
இது தொடர்பாக இளம் சிறார் உட்பட 4 பேரை கைது செய்து காவல் துறை விசாரித்து வந்த நிலையில். நேற்று வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு ஈ மெயில் மூலம் ஒரு புகார் மனு வரப்பெற்றுள்ளது. அந்த புகாரில் ஒரு பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரும் கடந்த 16.03.2022 ஆம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவு 01.00 மணியளவில் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாவும், அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும் , தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச்சென்றதாகவும், அங்கு வைத்து தங்களிடமிருந்த செல்போன்கள் , பணம் சுமார் ரூ . 40,000 மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும் , மேலும் அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

போலீஸ் விசாரணை
இதில், வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் தான் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அவரிடம் இருந்து பணம், நகையை பறித்தது தெரியவந்தது. அதன்பேரில், அவர்கள் மீது ஆயுதங்களுடன் சேர்ந்து அச்சுறுத்துவது, கடத்தி சிறை வைப்பது, கட்டாயப்படுத்தி கடத்தியது, அடைத்து வைப்பது, கூட்டுப் பாலியல் பலாத்காரம், தொடர் குற்றங்களில் ஈடுபடுவது, கூட்டுக் கொள்ளை, ஆயுதம் வைத்து மிரட்டல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தடயங்கள், ஆவணங்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.

காவல்துறை அறிவிப்பு
வேலூரில் இளம் பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் செய்த 5 பேரில் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் பெயர், முகவரி, புகைப்படம் வெளியிட்டால் வழக்கு விசாரணை பாதிக்கும் என்பதால் அவர்களை பற்றி விவரம் தெரிவிக்க சாத்தியமில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை பறிமுதல்
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறாத இந்த நிலையில் தான் சத்துவாச்சாரியில் நேற்று முன்தினம் ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டு காவல் துறையில் பிடிபட்ட பின் இது போன்ற சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கைதான இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் பயண்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்து எஸ்.பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எத்தனை பேர் பாதிப்பு
ஷேர் ஆட்டோ எனக் கூறி 2 பேரை கடத்தி செல்போன், பணம் ஆகியவற்றை பறித்து பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் ஆட்டோ பயணிகளிடையேயும், பொது மக்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்ணை கடத்திய இந்த கும்பல் இவ்வளவு துணிச்சலுடன் முதன் முறையாக கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்று கவால்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக இதேபோல் மேலும் பெண்களை இவர்கள் கடத்தி பலாத்காரம் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் காவல் துறையினருக்கு எழுந்துள்ளது.

ஆன்லைனில் புகார் தரலாம்
இது குறித்து குற்றவாளிகளின் செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், பெண்கள் தொடர்பான வீடியோக்கள் ஏதேனும் உள்ளதா, அதைக் காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளதா, அவர்கள் எண்ணில் இருந்து யாருக்கெல்லாம் அழைப்பு சென்றுள்ளது, அழைப்பு வந்துள்ளது, வாட்ஸ் அப் மெசேஜ் உள்ளிட்ட பதிவுகள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வேலூரில் பெண்கள் யாராவது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தால் தைரியமாக புகார் அளிக்கலாம். நேரில் வர அச்சமடையும் பெண்கள் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications