வரலாற்றில் “தமிழன்” என்ற வார்த்தையே இல்ல.. தமிழ்நாட்டை “மூன்றாக” பிரிப்பீர்களா? பாஜக நிர்வாகி கேள்வி
விருதுநகர்: இந்து என்ற வார்த்தை வரலாற்றை இல்லை என்னும்போது தமிழன் என்ற வார்த்தை மட்டும் தமிழ்நாட்டில் இருந்ததா என்றும், வரலாற்றில் மதராசி என்றே அனைவரும் அழைக்கப்பட்டு வந்ததாகவும் பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் திமுக போர் குணத்தை வெளிகாட்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்க்கு பதிலளித்த பேராசிரியர் சீனிவாசன், "மாநில திமுக அரசாங்கம் மத்திய பாஜக அரசுடன் போர் தொடுக்கட்டும். உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடிப்பதால் இங்கு அவர் பேசும் சினிமா கதை இங்கு எடுபாடாது என்றார். மத்திய பாஜக அரசு எல்லோரையும் சமமாக பாவிக்கிறது என்றார். பாரத பிரதமர் மோடி கூறும் இந்தியாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் பேசியது சரியானது இல்லை.

பட்டாசு தொழில்
பட்டாசு தொழிலை பாதுகாப்பதில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மேலும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் முடிவு பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக வரும். பட்டாசு தொழிலுக்கு உள்ள பிரச்சனைகளை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சரி செய்ய முயற்சிப்போம். திருமாவளவனுக்கு இந்து என்ற வார்த்தையில் என்ன பிரச்சனை இருக்கிறது.

திருமாவளவன்
திருமாவளவன் ஒரு இந்து என்பதால் தான் பட்டியல் சமுதாய தலைவராகவும் அதன் மூலம் தான் தேர்தலில் தனி தொகுதியில் போட்டியிட முடிகிறது. மேலும் அவர் தன்னுடைய சாதி சான்றிதழிலில் இந்து என்ற வார்த்தையை எடுத்து விட்டு பேசட்டும் என்றார். இந்து என்ற வார்த்தை வரலாற்றில் இருந்தது இல்லை என்றால் தமிழன் என்ற வார்த்தை வரலாற்றில் எங்கே இருந்தது? நம்மை மதராஸி என்று தான் அழைத்தார்கள் என்றார்.

தமிழ்நாட்டை பிரிப்பீர்களா?
மேலும் பேசிய அவர் இந்திய வரலாற்றிலும் சரி தமிழக வரலாற்றிலும் சரி 2000 ஆண்டுகால வரலாற்றில் தமிழ்நாடு என நாடு இருந்ததா என கேள்வி எழுப்பினார். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என தமிழக அரசாங்கம் இதை பிரித்து மூன்று நாடுகளாக ஆக்க முன் வந்தால் விசிக தலைவர் திருமாவளவன் கூறியது போல் வைணவ மற்றும் சைவ அறநிலையத்துறை என பெயர் மாற்றிக்கொள்ளலாம் என்றார்.

ஆர்.எஸ்.எஸ்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தேசிய கட்சி ஆரம்பித்து இருப்பதை வரவேற்கிறேன். இந்தியா ஜனாதிபதி முதல் கடைநிலை தொண்டன் வரை ஆர்.எஸ்.எஸ் என்ற அடையாளத்துடன் இருக்க வேண்டும் என ஆசை படுகிறோம். ஆர்.எஸ்.எஸ் திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் ஸ்டாலின், ஆர்.எஸ்.எஸ் கம்யூனிஸ்டாக இருந்தால் சந்தோஷப் படுவோம்.

தேசபக்தி அமைப்பு
ஆர்.எஸ்.எஸ் என்பது நல்ல மனிதர்களை உருவாக்கும் அமைப்பு. நாட்டின் பாரம்பரியம், பண்பாட்டின் மீது நம்பிக்கை உடைய அமைப்பு. தேசபக்தியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ளவர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்க வேண்டும். திருமாவளவன் ஆர்எஸ்எஸ் அமைப்பை புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications