இந்திய பொருளாதாரம் பற்றி ஸ்பெயினில் கட்டுரை.. பாம்பாட்டி என சித்தரிப்பதா?.. வெடித்த கண்டன குரல்கள்
வாஷிங்டன்: இந்திய பொருளாதாரம் பற்றி ஸ்பெயின் நாட்டின் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட சித்தரிப்பு படம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேற்கத்திய காலனித்துவ மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்த வரைபடம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரால் இந்த நிலை இன்னும் மோசமானது. சர்வதேச விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடி ஏற்பட்டது.
சர்வதேச நாடுகள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டி இருந்தது.

இந்திய பொருளாதார வளர்ச்சி
இருள் சூழ்ந்த பொருளாதாரத்தில் ஒளிரும் புள்ளியாக இந்திய பொருளாதார வளர்ச்சி இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டி இருந்தது. இந்த நிலையில், இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து ஸ்பெயினில் உள்ள பிரபலமான 'லா வான்கார்டியா' என்ற செய்தித்தாளில் The hour of the Indian economy என்ற பெயரில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. கடந்த 9 ஆம் தேதி இந்தக் கட்டுரை வெளியானது. அதோடு இந்திய பொருளாதார வளர்ச்சியை சித்தரிக்கும் வகையில் ஒரு வரைபடமும் வெளியிடப்பட்டு இருந்தது.

பாம்பாட்டி ஒருவர் கையில் மகுடியுடன்
அதில், பாம்பாட்டி ஒருவர் கையில் மகுடியுடன் இருக்கும் காட்சியும் இடம் பெற்று இருந்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் ஸ்பெயின் செய்தித்தாளில் வெளியான வரைபடம் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்தியாவை கலாசார ரீதியில் கேலி செய்யும் விதமாகவும் காலனித்துவ மனப்பான்மையை வெளிக்காட்டும் வகையில் ஸ்பெயின் செய்தித்தாள் வெளியிட்ட வரைபடம் இருப்பதாக கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாம்பாட்டியாக சித்தரிப்பது முட்டாள்தனம்
பெங்களூரு மத்திய தொகுதி பாஜக எம்.பியான பிசி மோகன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிசி மோகன் கூறியதாவது:- ''ஸ்பெயின் நாட்டின் முன்னணி வார இதழில் The hour of the Indian economy என்ற தலைப்பில் முக்கிய கட்டுரை வெளியாகி இருந்தது. இந்தியாவின் வலுவான பொருளாதாரம் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியாவை பாம்பாட்டியாக சித்தரிப்பது சுத்த முட்டாள்தனம். காலனித்துவ வெளிநாட்டு மனநிலையை அகற்றுவது கடினமான முயற்சி'' என்று பதிவிட்டுள்ளார்.

இழிவு படுத்தும் செயல்
ஜீரோதா நிறுவனத்தின் சிஇஒ நிதின் கமத்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ''உலகம் கவனிக்கிறது என்பது நல்ல விஷயம்தான் . ஆனால், இந்தியாவை பாம்பாட்டி கொண்டு பிரதிநிதித்துவப்படுத்துவம் கலாசாரா கேலிசித்திரம் இழிவு படுத்தும் செயல்'' என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் பிரபல எழுத்தாளர் ரஜத் சேத்தியும் இனவெறியுடன் பிரதிநிதித்துவபடுத்தியிருப்பதாக சாடியுள்ளார்.

தடங்கல் இன்றி தொடர்கிறது
இது குறித்து அவர் தனது ட்விட் பதிவில் கூறுகையில், 'இந்தியாவின் பொருளாதார பலத்தை ஒட்டு மொத்த உலகமே கவனத்தில் கொள்ளும் வேளையில், இனவெறியுடன் கூடிய கேலிச்சித்திரம் எந்த தடங்கலும் இன்றி தொடர்கிறது' என விமர்சித்துள்ளார். சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் பாம்பாட்டியுடன் ஒப்பிட்டு வெளியான வரைபடத்திற்கு கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் கண்டனம்
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், ''வெட்கம் இல்லாதவர்கள்.. அவர்கள் எப்படி வேண்டும் என்றாலும் முன்னிறுத்த முயற்சிக்கட்டும். ஆனால், மேற்கத்திய நாடுகளின் இந்த கேலி கிண்டல்களை பொருட்படுத்தாது இந்தியா செழித்து வளரும்'' என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், மற்றொரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில், 'இதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. அவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் அதை பொருட்படுத்தாமல் நாம் எழுச்சி பெறுவோம்' என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications