எப்போதும் துப்பாக்கியுடன் தான் இருப்பார் போல..இணையத்தை உறைய வைத்த எலான் மஸ்க்கின் ட்விட்..என்னாச்சு?
வாஷிங்டன்: எலான் மஸ்க் தனது படுக்கை அருகே இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த் ட்விட் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. எலான் மஸ்க் துப்பாக்கி கலாசாரத்தை ஆதரிக்கிறாரா? என்றும் நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான இவர் கடந்த மாதம் 44 பில்லியன் கொடுத்து ட்விட்டரை வாங்கினார்.
உலக அளவில் செய்திகளில் அதிகம் எலான் மஸ்க் பெயர் அடிக்கடி வந்து கொண்டு இருக்கும்.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல்
தனது நிறுவனத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தனது புதிய யோசனைகள் என எப்போதும் பரபரப்பாக வைத்திருப்பவர் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு எலன் மஸ்க் மேலும் பரபரப்பாகி போனார். அவரைப்பற்றிய செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எலான் மஸ்க்கின் ஒவ்வொரு செயலும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்
ட்விட்டரை விலைக்கு வாங்கிய கையோடு, அதன் உயர்மட்ட அதிகாரிகள் 50 சதவீத பேரை பணி நீக்கம் செய்தது... ஊழியர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வேலையை விட்டு ராஜினாமா செய்து கொள்ளலாம் எனவும் எலான் மஸ்க் அறித்த அறிவிப்புகள் எல்லாம் அதிரடிதான். அது மட்டும் இன்றி டிவிட்டர் நிறுவனம் திவால் நிலைக்கு சென்று விடும் என எச்சரித்த எலான் மஸ்க் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

புளூ டிக் வசதி பெற கட்டணம்
அதன்படி, புளூ டிக் வசதி பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் யூசர்களை அதிர வைத்தார். இப்படி எலான் மஸ்க்கின் ஒவ்வொரு நடவடிக்கையும் இணையத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தும் வகையிலேயே சமீப காலமாக அமைந்து வருகிறது. ட்விட்டரிலும் செம ஆக்டிவாக இருக்கும் எலான் மஸ்க், பயனர்களின் கேள்விகளுக்கு உடனடியாக ட்விட்டரிலே பதில் அளிப்பது.. சில முக்கிய அப்டேடுகளை வெளியிடுவதும் என எப்போதும் இணையவாசிகளுக்கு கண்டெண்டுகள் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்.

இரண்டு துப்பாக்கிகளும்..
அந்த வகையில், எலான் மஸ்க் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது இணையவாசிகளை உலுக்கியுள்ளது. எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் எனது படுக்கை அருகில் இருக்கும் டேபிள் என்று ஒரு படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த படத்தில் இரண்டு துப்பாக்கிகளும்.. சில டயட் கோக் டின்களும் இருந்தன. படுக்கையின் அருகே உள்ள டேபிளில் கூட துப்பாக்கியை வைத்துக்கொண்டு எலான் மஸ்க் வெளியிட்ட படம் இணையத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

துப்பாக்கி கலாசாரம்
அமெரிக்காவில் துப்பாக்கிகள் வைத்திருக்க அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் சமீப காலமாக அங்கு உருவெடுத்துள்ள துப்பாக்கி கலசாரம், துப்பாக்கி பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது. இந்த சூழலில், எலான் மஸ்க் வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படம் புது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. எலான் மஸ்க் ஏற்கனவே துப்பாக்கி பயன்படுத்துவதற்கு ஆதரவாக கருத்தை வெளியிட்டு இருந்தது நினைவிருக்கலாம்.

நெட்டிசன்கள் கருத்து
எலான் மஸ்க்கின் படுக்கை அருகில் உள்ள டேபிளில் 4 டயட் கோக் (காஃபின் இல்லாத கோக்) பாட்டில்கள் இருந்தன. அதுபோக ஜார்ஜ் வாஷிங்டன் டெலாவேர் ஆற்றைக் கடக்கும் ஓவியம் அடங்கிய ஒரு வரைபடமும் எலான் மஸ்க்கின் டேபிளில் உள்ளது. நெட்டிசன்கள் பலரும் "எலான் மஸ்க் துப்பாக்கி கலாசாரத்தை ஆதரிக்கிறாரா? நான் கூட நீங்கள் அமைதி மற்றும் மனித நேயத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர் என்று நினைத்தேன்" என்று பதிவிட்டுள்ளனர். அதேபோல் சில நெட்டிசன்கள், "கோக் உடல் நலத்திற்கு நல்லதல்ல" என்றும் பதிவிட்டுள்ளனர். எலான் மஸ்கின் இந்த்ந ட்விட் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications