இந்திய மண்ணில் களமிறங்கியது சீட்டாக்கள்..தனது பிறந்தநாளில் குனோ பூங்காவில் விடுவித்தார் பிரதமர் மோடி
போபால்: வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சீட்டாக்களை தனது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார். இதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்தியாவில் சீட்டா வகை சிறுத்தைப்புலிகள் கம்பீர நடைபோடுகிறது.
சிறுத்தைகளில் 4 வகை இனங்கள் உண்டு. இதில் உலகிலேயே மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கினமான சீட்டா (சிவிங்கி புலிகள்)வும் சிறுத்தைப்புலி இனத்தில் ஒன்றாகும்.
இந்தியாவில் ஒரு காலத்தில் இந்த சீட்டாக்கள் அதிக அளவில் இருந்தன. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் உள்ளிட்டோர் பொழுதுபோக்குக்காக சீட்டாக்களை வேட்டையாடினர்.

சீட்டா வகை புலிகள்
இதனால், இந்தியாவில் சீட்டாக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்படாத மாநிலமாக இருந்த சத்தீஷ்கர் மாநிலத்தில் மட்டும் கடந்த 1947-ம் ஆண்டு ஒரு சீட்டா தென்பட்டது. அதன்பிறகு 1952-ல் சீட்டா இந்தியாவில் எங்கும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வரை சீட்டா வகை புலிகள் இந்தியாவின் எந்த பகுதியிலும் இல்லை. எனவே இந்தக் குறையை போக்குவதற்கு திட்டமிட்ட இந்தியா இதற்காக நமீபியாவிடம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

புலி முகம் போல் விமானம்
இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவுக்கு 5 ஆண் சீட்டாக்கள் மற்றும் 3 பெண் சீட்டாக்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று இந்த 8 சீட்டாக்களும் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த சீட்டாக்களை இந்தியா அழைத்து வர நேற்று முன் தினமே இந்திய விமானம் நமீபியா சென்றடைந்தது. இதற்காக இந்திய விமானத்தில் பிரத்யேகமாக புலியின் முகம் போல் விமானத்தின் முன்பகுதி வரையப்பட்டிருந்தது.

இந்தியா வந்தடைந்த சீட்டாக்கள்
இந்த நிலையில் சீட்டாக்களை கொண்டு வருவதற்காக சென்ற சிறப்பு வசதிகள் கொண்ட சரக்கு விமானம் பி747 இன்று காலை கவாலியர் விமான நிலையத்தில் கம்பீரமாக தரையிறங்கியது. கவாலியர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் விமானத்தில் இருந்து 8 சீட்டாக்களும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டன. இதையடுத்து அந்த 8 சீட்டாக்களும் அங்கு இருந்து மத்திய பிரதேசத்தில் உள்ள குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு சீட்டாவுக்கு என தனித்தனி மரக்கூண்டுகளில் அடைக்கபட்டன.

மோடி விடுவித்தார்
விமான நிலையத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் பூங்கா அமைந்திருப்பதால் சீட்டாக்களை ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, 8 மரக்கூண்டுகளில் அடைக்கப்பட்ட சீட்டாக்கள் ஹெலிகாப்டரில் ஏற்றப்பட்டு பத்திரமாக மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே பிரதமர் மோடியும் குனோ தேசிய பூங்காவிற்கு வந்தடைந்தார். ஏற்கனவே தனது பிறந்தநாளில் பிரதமர் மோடி இந்த 8 சீட்டாக்களையும் விடுவிப்பதாக இருந்தது. அதன்படி பூங்கா வந்தடைந்த பிரதமர் மோடி, 5 ஆண் மற்றும் 3 பெண் சீட்டாக்களை பூங்காவில் விடுவித்தார். மரக்கூண்டுக்குள் இருந்து வெளிவந்த சீட்டாக்கள் கம்பீரமாக காட்டுக்குள் சென்றது. இதன் மூலம் சீட்டாக்கள் இந்திய மண்ணில் 70 ஆண்டுகளுக்கு பின் கால் தடம் பதித்துள்ளது.












Click it and Unblock the Notifications