ஒபெக் நாடுகளுக்கு செக்.. கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பைடன் அதிரடி.. இந்தியா நிலைப்பாடு என்ன?
வாஷிங்டன்: ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், தங்கள் நாட்டில் கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்துவது குறித்து அதிபர் பைடன் விரைவில் முக்கிய முடிவெடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது ஒட்டுமொத்த உலக நாடுகளும் அப்படியே முடங்கியது. கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனால் சர்வதேச பொருளாதாரம் பெரியளவில் வீழ்ச்சியடைந்தது.

கொரோனா ஊரடங்கு
மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியதால் கச்சா எண்ணெய் தேவை பெருமளவு குறைந்தது. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் தேவை மளமளவென வீழ்ந்தது. ஒரு கட்டத்தில் கச்சா எண்ணெய் தேவை பூஜ்ஜியத்திற்குக் கீழ் கூட சென்றது. இருப்பினும், வேக்சின் பணிகளால் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. பெரும்பாலான நாடுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை
மேலும், சர்வதேச நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து மீண்டும் சீரடைய தொடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இவ்வளவு குறைந்த காலத்தில் கச்சா எண்ணெய் தேவை இந்தளவு அதிகரிக்கும் என யாருக்கும் தெரியவில்லை. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மளமளவென உயர்ந்தது.

அக். 2இல் முக்கிய முடிவு
சர்வதேச அளவில் தேவை அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒபெக் நாடுகள் அதிகரிக்க வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கேட்டுக்கொண்டன. இருப்பினும், இதற்கு ஒபெக் நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவும் ஒபெக் நாடுகள் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. வரும் டிசம்பர் 2ஆம் தேதி நடைபெறும் ஒபெக் நாடுகள் ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

அமெரிக்கா நிலைப்பாடு
பொதுவாக, அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் போர் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கக் கச்சா எண்ணெய்யைக் கையிருப்பில் வைத்திருக்கும். ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும்போது கையிருப்பில் உள்ள இந்த கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்தினால் விலை மிகப் பெரிய அளவுக்கு உயர்வதைக் குறைக்க முடியும். ஒபெக் நாடுகள் உற்பத்தியைக் குறைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதைச் சமாளிக்கும் வகையில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்திருந்தது. இதன் மூலம் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைக்க முடியும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது

என்ன நடக்கும்
இந்நிலையில், முதலில் அமெரிக்கா தனது கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் இது குறித்து அதிபர் பைடன் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளும் இந்த முடிவை எடுக்கச் சம்மதம் தெரிவித்துள்ளதாக வெள்ள மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக வெள்ளை மாளிகையில் இருந்து யாரும் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications