“சீரியஸ்” ஆன மேட்டர்.. வட கொரியாவின் “ஷாக்” ட்ரீட்மெண்ட் - வரிந்துகட்டும் அமெரிக்கா! உறைந்த ஜப்பான்
வாஷிங்டன்: கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை நடத்திய வட கொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கும் அமெரிக்கா, தக்க பதிலடியை கொடுப்பது தொடர்பாக நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
பசிபிக் பிராந்தியம் அமைந்திருக்கும் முக்கிய நாடான வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தொடர்ந்து பலமுறை ஏவுகணை சோதனையும் நடத்தி வருகிறது.
வட கொரியாவுடனான மோதல் போக்கை கைவிட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அதன் பின்னர் ஏவுகணை சோதனைகளை குறைத்த வடகொரியா, மீண்டும் அதை தொடங்கி இருக்கிறது.

ஏவுகணை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் பலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்திக் காட்டியது வடகொரியா. இந்த நிலையில் தற்போது தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆயுத சோதனைகளை வட கொரியா முடுக்கிவிட்டுள்ளது.

பதற்றம்
எனவே கொரிய எல்லையில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக 3 நாடுகளையும் அச்சுறுத்தும் விதமாக அடுத்தடுத்து வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 25 ஆம் தேதி தேதியிலிருந்து 3 முறை ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கும் வட கொரியா 4 வது முறையாக இன்று சோதனை நடத்தியுள்ளது.

அதிர்ச்சியில் ஜப்பான்
இந்த ஏவுகணை ஜப்பான் எல்லையின் மேற்பரப்பில் பறந்ததாக தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் அலுவலகம், மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியது. மேலும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனத்தையும் ஜப்பான் பதிவு செய்துள்ளது.

தென் கொரியா எச்சரிக்கை
அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனை மேற்கொண்ட வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தென்கொரிய அதிபர் எச்சரித்துள்ளார். இதன் காரணமாக அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே ஏவுகணை சோதனை மேற்கொண்ட வட கொரியாவுக்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

அமெரிக்கா கருத்து
வட கொரியாவின் இந்த செயல் சட்டவிரோதமானது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அப்போது இரு நாட்டு அதிகாரிகளிடமும் வட கொரியாவுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக அமெரிக்கா ஆலோசித்து இருப்பதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications