ஆன்மீக அரசு..புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில்களுக்கு சுற்றுலா..அமைச்சர் சேகர்பாபு அசத்தல்
சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். இந்த ஆன்மிகச் சுற்றுலாவானது பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு சுற்றுலா, மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு என திமுக அரசு ஆன்மீக அரசாகவே மாறி வருகிறது. இந்துக்களுக்கு எதிரான அரசு என்பதை உடைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் சேகர் பாபு.
புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெருவிருப்பமாகக் கொள்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ திருக்கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து எதிர்வரும் புரட்டாசி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று கூறியுள்ளார்.

ஆடி மாதம் ஆன்மீக பயணம்
2022 - 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும், வைணவத் திருக்கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு வைணவத் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகர், அருள்மிகு அஷ்டலெட்சுமி திருக்கோயில், திருவிடந்தை, அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம், அருள்மிகு ஸ்தல சமய பெருமாள் திருக்கோயில், சிங்கப்பெமாள் கோவில், அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில், திருநீர்மலை, அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில், உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும்,

சென்னை பெருமாள் கோவில்கள்
சென்னையில் திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருநீர்மலை, அருள்மிகு நீர்வண்ண பெருமாள் திருக்கோயில், திருமுல்லைவாயில், அருள்மிகு பொன்சாமி பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர், அருள்மிகு வைத்திய வீர ராகவபெருமாள் திருக்கோயில், திருபெரும்புத்தூர், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி, அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு இரண்டாவது பயணத்திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

திருச்சி பெருமாள் கோவில்கள்
திருச்சியிலிருந்து, உறையூர் அருள்மிகு அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், உத்தமர்கோயில், அருள்மிகு புருஷோத்தம பெருமாள் திருக்கோயில், குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடாசல பெருமாள் திருக்கோயில், தான்தோன்றி மலை, அருள்மிகு கல்யாண வெங்கடராம பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர் பெருமாள் கோவில்கள்
தஞ்சாவூரிலிருந்து, திருகண்டியூர், அருள்மிகு சாபவிமோச்சன பெருமாள் திருக்கோயில், கும்பகோணம், அருள்மிகு சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில், திருநாகேஸ்வரம், அருள்மிகு உப்பிலியப்பன் பெருமாள் திருக்கோயில், நாச்சியார் கோயில், அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில், திருச்சேறை, அருள்மிகு சாரநாத பெருமாள் திருக்கோயில், மன்னார்குடி, அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், வடுவூர், அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.

மதுரை பெருமாள் கோவில்கள்
மதுரையிலிருந்து, அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், ஒத்தகடை, அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திருமோகூர், அருள்மிகு காளமேக பெருமாள் திருக்கோயில், திருகோஷ்டியூர், அருள்மிகு சௌம்ய நாராயண பெருமாள் திருக்கோயில், மதுரை, அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோயில் உள்ளிட திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

மதிய உணவுடன் சுற்றுலா
இந்த ஆன்மிகச் சுற்றுலாவானது பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோயில் பிரசாதம், திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். இந்த ஆன்மிகச் சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

சுற்றுலாத்துறை இணையதளம்
மேலும், இது தொடர்பாக விவரங்களுக்கு www.ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்திலும், 044 - 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, ஆன்மிக அன்பர்கள், சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications