குவியும் வடமாநிலத்தவரால் பேராபத்துகள்! தமிழகம் வந்தேறிகளின் வேட்டைக்காடா? மீண்டும் எழும் முழக்கம்!
சென்னை: தமிழகத்தில் வந்து குவியும் வடமாநிலத்தவருக்கு எதிரான குரல்கள் மீண்டும் வலுத்து வருகின்றன. வடமாநிலத்தவர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் குவிந்து வருவதால் தமிழகத்தின் அரசியல், பொருளாதார சூழ்நிலை தலைகீழாக மாறக் கூடிய பேராபத்து காத்திருக்கிறது என்கின்றனர் சமூக, அரசியல் ஆய்வாளர்கள்.
1980 மற்றும் 1990களின் தொடக்கங்களின் தமிழ் தேசியம் உரத்து பேசப்பட்டது.. அரசின் அடக்குமுறைகளை மீறி தனித் தமிழ்நாடு, தமிழ்த் தேசியம் என்பது வீச்சாக இருந்த காலம்.. தமிழ்நாடு விடுதலைப் படை என்கிற ஆயுதக் குழுவை பொன்பரப்பி தமிழரசன், இடதுசாரி சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்கி செயல்பட்டுக் கொண்டிருந்தார்.. இன்னொரு பக்கம் தமிழ் தேசியத்துக்கு தன்னுரிமை, இந்திய கூட்டமைப்புக்குள் சுயாட்சி பெற்ற தமிழ்நாடு, தமிழ்த் தேச தன்னுரிமை, சுயநிர்ணய உரிமை என பல பெயர்களில் தமிழ்த் தேசியம் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் இருந்தது.

வந்தேறிகளின் வேட்டைக்காடு
தமிழ்த் தேசியம் வலுவாக பேசப்பட்ட அப்போது அதிரவைத்த முழக்கம் 'வந்தேறிகளின் வேட்டைக்காடா தமிழகம்' என்பதுதான். அப்போது குஜராத் உள்ளிட்ட மாநிலத்தவர் தமிழகத்தின் தொழில்களை தீவிரமாக தங்கள் வசமாக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைக்கு இருப்பது போல தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வட இந்திய தொழிலாளர்கள் நுழையாத தருணம். அப்போதே வந்தேறிகளின் வேட்டைக்காடு தமிழகம் என நூலையே எழுதினார் தமிழ்த் தேசிய மூத்த தலைவர் பழ.நெடுமாறன்.
குக்கிராமங்களிலும் வட இந்தியர்கள்
இன்று தமிழ்நாட்டில் வட இந்தியர் கால் பதிக்காத கிராமங்களே இல்லை என்கிற தலைகீழான மாற்றம் உருவாகிவிட்டது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து தொழில்களும் வட இந்தியர்கள் நிரம்பி வழிகின்றனர். தமிழகத்தின் உட்பகுதியான வேடசந்தூர் அருகே கரூர்-மதுரை நெடுஞ்சாலையில் இந்தியில் பெயர் பலகை வைக்கும் அளவுக்கும் ஈரோடு பெருந்துறை அருகே இந்தியில் பேருந்து பலகைகள் வைக்கும் அளவுக்கும் நிலைமை கவலைக்குரியதாகி வருகிறது. இதன் உச்சமாக, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு வேலை தராதே! எங்களுக்குதான் வேலை கொடுக்க வேண்டும் என வட இந்தியர்கள் தமிழ்நாட்டு மண்ணில் நின்று கொண்டு போராடுகிற பேராபத்தும் வந்து நிற்கிறது.
தமிழ்நாடுதானா இது?
ஒடிஷா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உ.பி, பீகார் என பிற மாநிலங்களில் இருந்து கொத்து கொத்தாக தலைநகர் சென்னையில் வந்திறங்கி நிற்கின்றனர் வட இந்தியர்கள். வட இந்தியாவில் இருந்து வரும் ரயில்களில் மூட்டை முடிச்சுகளுடன் பல்லாயிரக்கணக்கில் வந்து இறங்கும் தொழிலாளர்களை பார்க்கும் போது தமிழ்நாடுதானா? என பதைப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது என்கின்றனர் சமூகப் பார்வையாளர்கள்.
ஏன் வருகின்றனர்?
உழைப்பு அதிகம், கூலி சொற்பம், தமிழ்நாட்டு தொழிலாளர்களை விட அதிகம் சுரண்ட முடிகிறது என்கிற அற்ப காரணங்களுக்காக நிறுவனங்களும் அதன் உரிமையாளர்களும் தமிழ்நாட்டு மண்ணில் வட இந்தியர்களை இறக்குமதி செய்துவிட்டு லாபம் பார்க்கின்றனர். ஆனால் இப்படி வட இந்தியர்களை லட்சம் லட்சமாக இறக்குமதி செய்துவிட்டால் நேரிடப் போகும் பேராபத்துகளை எப்படி சமாளிக்க முடியும் என்பதுதான் கேள்வி.
வடவருக்கு வாக்குரிமை மட்டும் கூடாது ஏன்?
இதனைத்தான் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மிக எளிமையாக, இங்கே இருக்கும் தமிழர்களை மிக நுட்பமாக உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். பிறகு வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும்போது, அதை நிரப்ப வட மாநிலத்தவரை வலிந்துப் புகுத்துகிறார்கள். இங்கே வந்து அவர்கள் வேலை செய்து பெறுகின்ற சம்பளத்தைக் கொண்டு பெருமளவு நமது மாநிலத்தின் பொருளாதாரம் வேறு மாநிலத்திற்குச் செல்கிறது. அவர்கள் உழைத்து, அதற்கேற்ற வருமானத்தை ஈட்டுவதுக் கூட பரவாயில்லை. ஆனால், அவர்களுக்கு குடும்ப அட்டை கொடுப்பது போதாதென்று வாக்காளர் அட்டையும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் இந்த நிலத்தின் அரசியலையே அவர்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்படும். அப்படி நடந்தால், இந்த நிலத்தின் மக்கள் அரசியல் அதிகாரமற்ற அடிமைகளாக மாற நேரிடும். நாம் அடிமையானால், நிலமற்றவராவோம். நிலமற்றவர்கள் வேறு இடத்திற்கு அடித்து விரட்டப்படுவார்கள். ஈழத்தில் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்ததோ அது எங்களுக்கும் இங்கு நடக்கும். அவர்களுக்காகவாவது ஏதிலிகளாக வந்து குடியேற இங்கு ஒரு தாய்நிலம் இருந்தது. நாம் இங்கிருந்து அடித்து விரட்டப்பட்டால் எங்கு செல்வது? அதனால், நாங்கள் அரசை எச்சரிக்கின்றோம். அவர்களுக்குக் குடும்ப அட்டை கொடுப்பதுக் கூட பரவாயில்லை. ஆனால், வாக்காளர் அட்டை மட்டும் கொடுக்கவேக் கூடாது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். பெரும் விளைவுகள் ஏற்படும் முன் தமிழக மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும் என சொல்கிறார்.
என்ன செய்ய வேண்டும் திராவிட மாடல் அரசு?
உதாரணமாக திருப்பூர் அருகே உள்ளது பொங்குபாளையத்துக்குட்பட்ட பரமசிவம் பாளையம். இங்கு 5,000 வட இந்தியர் குடும்பங்கள் ஒரே இடத்தில் வசிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு வட இந்திய கிராமம் என அழைக்கப்படும் நிலைமை உருவாகி இருக்கிறது. இந்த வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டின் பூகோளம் தெரியுமா? வரலாறு, அரசியல் தெரியுமா? இந்த வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் கண்ணை மூடிக் கொண்டு அவர்களுக்கு தெரிந்த பாஜகவின் தாமரை அல்லது காங்கிரஸின் கை சின்னத்துக்கு மட்டும்தான் வாக்களிப்பார்கள். இதனைத்தான் தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் நிலைமை வட இந்தியர் கையில் போய்விடுமோ என பதற்றப்படுகின்றனர். வட இந்தியர்கள் எத்தனை லட்சம் பேர் தமிழ்நாட்டில் குவிந்துள்ளனர்? இவர்களில் எத்தனை பேருக்கு ரேஷன் கார்டு உள்ளது? இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளதா? ஆதார் அட்டை எந்த முகவரியில் உள்ளது? என்பதை போர்க்கால அடிப்படையில் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு மேற்கொள்ள வேண்டும். வட இந்தியர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்டவை தமிழக போலீசாருக்கும் பெரும் சவாலாக இருக்கிறது. வட இந்திய கொள்ளையர்களை தீரன் அதிகாரம் 1 பட பாணியில் தேடிக் கொண்டிருப்பது எல்லாம் காலத்துக்கு பொருந்தா நிலைமை. ஆகையால் திராவிட மாடல் பெருமிதம் பேசும் திமுக ஆட்சியில் தமிழர்களின் எதிர்காலம், தமிழ்நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனில் வடமாநிலத்தவர் எண்ணிக்கைக்கு கடிவாளமும் கட்டுப்பாடுகளும் அவசியம் போட வேண்டும் என்கின்றனர் சமூக, பொருளியல் ஆய்வாளர்கள்.