தீபாவளி நாளில் எகிறிய மூக்குத்தி அம்மன் 2 வசூல்..ஒரே நாளில் இத்தனை கோடி வசூல்! நயன்தாராவுக்கு கம்பேக்
சென்னை: நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு முதல் நாளில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. சூர்யாவின் சீன் படத்துடன் தீபாவளி ரேஸில் களமிறங்கிய இந்த படம், தொடக்க வசூலில் பின்தங்கியதால் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் தீபாவளி நாளான நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்திருக்கிறது. முதல் நாளில் இருந்ததைவிட 3வது நாள் வசூல் நல்ல முன்னேற்றத்தை காட்டியிருக்கிறது.
நயன்தாரா என்ற பெரிய நட்சத்திரம், ஏற்கனவே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகம், சுந்தர்.சி இயக்கம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியானது. ஆனால் முதல் நாள் வசூல் கணக்கு மட்டும் படக்குழுவுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது. இப்போது விடுமுறை நாட்களில் ரசிகர்கள் தியேட்டருக்கு வர தொடங்கியிருப்பது படத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

தீபாவளி நாளில் வசூல்
நவம்பர் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான மூக்குத்தி அம்மன் 2 படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.1.88 கோடி நெட் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டாவது நாளான சனிக்கிழமை இந்த வசூல் ரூ.2.45 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் முதல் இரண்டு நாட்களில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் படத்துக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைத்தது. ஆனால் தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை வசூல் இன்னும் அதிகரித்திருக்கிறது. நவம்பர் 8-ம் தேதி மட்டும் இந்தியாவில் ரூ.4.60 கோடி நெட் வசூல் கிடைத்துள்ளதாக, பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் Sacnilk தெரிவித்திருக்கிறது.
இதன் மூலம் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.8.93 கோடி நெட் வசூலை மூக்குத்தி அம்மன் 2 பெற்றுள்ளது. இந்திய மொத்த வசூல் ரூ.10.35 கோடியாக உயர்ந்திருக்கிறது. முதல் நாளில் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை என்றாலும், தீபாவளி விடுமுறை நாளில் கிடைத்த இந்த வசூல் முன்னேற்றம் படக்குழுவுக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஏற்கனவே நயன்தாரா சமீப காலமாக நடிக்கும் படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெறாமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த படமாவது அவருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக இருக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இப்போ 3வது நாள் வசூல் முன்னேற்றம் அதற்கு ஆறுதலாக காட்டுகிறது.
தமிழ்நாட்டில் வசூல் நிலவரம்
இந்த படத்தின் வசூலில் தமிழ் ரிலீஸ்தான் அதிகமாக வந்திருக்கிறது. முதல் மூன்று நாட்களையும் சேர்த்து பார்த்தால் தமிழ் ரிலீஸ் மட்டும் ரூ.8.45 கோடி நெட் வசூல் செய்துள்ளது. தெலுங்கில் ரூ.48 லட்சம் கிடைத்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழில் ரூ.4.40 கோடி வசூல் செய்த நிலையில், தெலுங்கில் ரூ.20 லட்சம் வசூல் செய்துள்ளது.
சீன் படத்துடன் போட்டி
தீபாவளிக்கு சூர்யாவின் சீன் படமும், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படமும் ஒரே நாளில் வெளியாகியிருப்பதால் ஆரம்பம் முதலே இரண்டு படங்களின் வசூலும் ஒப்பிடப்பட்டு வருகிறது. முதல் நாளில் சீன் படம் நல்ல வசூலைப் பெற்ற நிலையில், மூக்குத்தி அம்மன் 2 மிகவும் குறைவாகவே வசூல் செய்திருந்தது. இதனால் நயன்தாரா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லையா? என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால் இப்போது மூன்றாவது நாள் வசூல் கணிசமாக உயர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, விடுமுறை நாட்களில் குடும்ப ரசிகர்களின் வருகை படத்துக்கு உதவியிருக்கலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications
