விஜய்யின் கல்வி விழாவில் இப்படி ஒரு விருந்தா? மாதம்பட்டி ரங்கராஜ் தயார் செய்த மெனு.. எழும் கேள்வி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா என்றாலே மாணவர்களுக்கு விருதுகள், ஊக்கத்தொகை, விஜய்யின் பேச்சு என பல விஷயங்கள் கவனம் பெறும். ஆனால், இந்த முறை விழாவுக்கு முன்பே இன்னொரு விஷயம் இணையத்தில் பேசத் தொடங்கிவிட்டது. அது, விழாவுக்கு வருபவர்களுக்காக பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தயார் செய்திருக்கும் தடபுடல் விருந்து. வாழை இலையில் விதவிதமான உணவுகள், ஸ்பெஷல் பிரியாணி, இனிப்புகள் என வெளியாகியிருக்கும் மெனு பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இன்று நவம்பர் 4-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2025-26 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் வழங்கி பாராட்டுகிறார். முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மாணவர்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் அழைத்து கௌரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் மதிய உணவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான உணவு ஏற்பாடுகளை மாதம்பட்டி பாகசாலா குழுவினர் செய்கின்றனர். இதை பார்த்த பலரும், மாணவர்களுக்கான விழாவில் இப்படியொரு விருந்தா? என்று ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மெனு
இனிப்புகளில் பணங்கருப்பட்டி பருத்திப்பால் அல்வா, பிரட் மல்வா, கருப்புக் கவுனி அரிசி பாயாசம், ஐஸ்கிரீம் என விதவிதமான உணவுகள் இடம்பெற்றுள்ளன. அதோடு தமிழர் பச்சடி, கெட்டித் தயிர், இருக்கிறதாம். கார வகைகளிலும் பல ஸ்பெஷல்கள் இருக்கின்றன. முருங்கைக்காய் சாம்பார், சின்ன வெங்காயம் வெண்டைக்காய் காரக்குழம்பு, மிளகு ரசம் என பாரம்பரிய சுவையில் சில உணவுகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முக்கிய ஹைலைட்டாக வாழையம்பாடி ஸ்டைலில் தயாரிக்கப்பட்ட தம் பிரியாணி இருக்கிறது. அதனுடன் ஆவியில் வேகவைத்த சாதமும் பரிமாறப்பட உள்ளது.
இது தவிர காய்கறி உணவுகளிலும் பல வகைகள் இருக்கின்றன. கேரளா ஸ்டைல் எரிசேரி, புடலங்காய் மிளகாய் வறுவல், காய்கறி பொரியல் வகைகள், வடை, அப்பளம் என வாழை இலையில் ஒரு முழுமையான விருந்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கும் இந்த உணவு வழங்கப்பட இருக்கிறது.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு கிடைத்த ஆர்டர்
இப்படி இந்த விருந்து பேசப்படும் அதே நேரத்தில், மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகளும் மீண்டும் பேசப்படுகிறது. ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடனான அவரது உறவு தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகின்றன. நீதிமன்றம் வரை இவர்களுடைய பிரச்சனை அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந்த சூழலில் சமீபத்தில் ஜாய் கிரிசில்டா தனது மகன் ராகாவின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதில் மாதம்பட்டி ரங்கராஜும் இருந்தார். அதே நேரத்தில் ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜும் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இதனால் மீண்டும் அவருடைய குடும்ப வாழ்க்கை குறித்த விவாதங்கள் இணையத்தில் அதிகரித்தன.
இப்படியான பின்னணியில் தற்போது விஜய்யின் கல்வி விருது நிகழ்ச்சிக்கான உணவு ஏற்பாடுகளை மாதம்பட்டி ரங்கராஜின் குழு கவனிப்பது பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக ஜாய் கிரிசில்டா சில மாதங்களுக்கு முன்பு தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். அதனால் இந்த நிகழ்ச்சிக்கான கேட்டரிங் ஆர்டர் அவருக்கு கிடைத்ததற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.



Click it and Unblock the Notifications
