சசிகலாவுடன் சந்திப்பு! பண்ணை வீட்டில் பரபரப்பு ஆலோசனை! ஓ.பன்னீர்செல்வம் முடிவு என்ன?
தேனி: சசிகலாவை நீங்க சந்தித்துப் பேச வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.
Recommended Video
பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்திய நிலையில் இந்த கோரிக்கை அவருக்கு வைக்கப்பட்டுள்ளது.
தனது அழைப்பை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்தியதால் சசிகலாவை ஓபிஎஸ் விரைவில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரியாக.. சசிகலா பிறந்தநாளில் ஓபிஎஸ் சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா.. ஓஹோ.. இதுதான் பின்னணி!

தேனி மாவட்டம்
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் புறப்பட்டுச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான், ஓ.ராஜா உள்ளிட்டோர் சசிகலாவுடனான சந்திப்பை இனியும் தாமதப் படுத்த வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளார்களாம்.

உதாசீனப்படுத்திவிட்டார்
அன்புச் சகோதரர் என மிகவும் மரியாதையாக எடப்பாடி பழனிசாமியை நீங்கள் குறிப்பிட்டும் அவர் அரசியல் நாகரீகம் தெரியாமல் உங்களை உதாசீனப்படுத்தி இருக்கிறார், இதனால் சசிகலாவை நீங்கள் சந்திப்பதன் மூலம் எடப்பாடி தரப்புக்கு நாம் அதிர்ச்சி கொடுக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். தற்போதைய சூழலில் சசிகலாவுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லதல்ல எனவும் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் சகோதரர்
குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, ஓபிஎஸ் -சசிகலா சந்திப்பை எப்படியாவது நிகழ்த்தி விட வேண்டும் என முழு முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். ஆனால் அவசரம் வேண்டாம், என ஓபிஎஸ் தான் தனது சகோதரரை அமைதிப்படுத்தி வைத்திருக்கிறாராம். இதனிடையே நேற்று தேனி புறப்படுவதற்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை சின்னம்மா என்று குறிப்பிட்டு இணைப்பு பற்றி பேசியது கவனிக்கத்தக்கது.

முக்கிய முடிவு
சசிகலாவை சந்திக்க வேண்டும் என ஆதரவாளர்கள் கூறுவது பற்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளோடு திங்கள்கிழமைக்கு மேல் ஆலோசனை நடத்தி ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவு எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.