கேலி கிண்டல் பண்ணுவாங்க! கேவலமா சிரிப்பாங்க..ஆனா இப்போ! கேரளாவைக் கலக்கும் ஆன் மேரி! சிங்கப் பெண்ணே!
திருவனந்தபுரம் : சாதனையானாலும் சரி கடின உழைப்பானாலும் சரி பாலின பேதம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் படிக்கும் ஆன் மேரி ஆன்சலன் என்ற இளம்பெண் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பரபரப்பான காக்கநாடு-பெரும்படப்பு சாலையில் கனரக பேருந்தை பயணிகளுடன் இயக்கி வருகிறார்.
இந்தியா முழுவதும் இப்போது அதிகமான இளம் பெண்கள் சமூகத் தடைகளை உடைத்துவிட்டு, வேலை செய்வதற்கும், அவர்கள் மிகவும் விரும்புவதைச் செய்வதற்கும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருகிறார்கள்.
அவர்களுக்கு ஒரு உதாரணம் தான் கொச்சியைச் சேர்ந்த 21 வயது சட்டக்கல்லூரி மாணவியான ஆன் மேரி ஆன்சலன். தனக்கு வந்த கேலி கிண்டல்கள் என எல்லா தடைகளையும் உடைத்துவிட்டு கனரக பேருந்தை அதுவும் சம்பளம் இல்லாமல் இயக்கி வருகிறார்.

ஆன் மேரி ஆன்சலன்
எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் படிக்கும் ஆன் மேரி ஆன்சலன், வாரம் தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஹே டே என்ற பேருந்தை பரபரப்பான காக்கநாடு - பெரும்படப்பு சாலையில் இயக்கி வருகிறார். ஆன் எப்போதும் வாகனங்கள் மீது பேரார்வம் கொண்டவர், பெரிய மற்றும் கனரக வாகனங்கள் மீது அவருக்கு பைத்தியம் என்கின்றனர் அவரது பெற்றோர்கள்.

கனரக வாகனங்கள்
லாரிகள், டேங்கர் லாரிகள், பேருந்துகள் என்று கனரக வாகனங்களை மட்டுமே இயக்குவது பிடிக்கும் எனக் கூறும் ஆன், தனது 15 வயதில் தனது தந்தையின் ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் சவாரி செய்யக் கற்றுக்கொண்டபோது வாகனம் ஓட்டுவது தனக்கு பிடித்துப் போனது என்கிறார். கனரக வாகனங்களை இயக்குவதை 15 வயதிலேயே கற்றுக்கொண்டாலும், சாலைகளில் 18 வயது வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

பரபரப்பான சாலை
மிகவும் பரபரப்பான காக்கநாடு - பெரும்படப்பு சாலையில் சுமார் எட்டு மாதங்கள் பேருந்து இயக்கும் நிலையில், இதனை பார்த்த மக்கள் முதலில் அதிர்ச்சியடைந்தனர். பேருந்தில் பயணம் செய்யவும் தயங்கியுள்ளனர். நான் பேருந்தை ஓட்டிய முதல் நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு பெண் வாகனம் ஓட்டுவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். ஆரம்ப நாட்களில் எனக்கே புதுமையாக இருந்தது. ஒரு பெண் வாகனம் ஓட்டுவதைக் கண்டு பலர் பயந்தனர். விபத்து நிச்சயம் நடக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். இருப்பினும், இப்போது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் இந்த வழியாக வாகனம் ஓட்டுவதை அவர்கள் பார்த்து பழகிவிட்டனர் என்கிறார் ஆன்.

பாராட்டுகள்
அந்த வழித்தடத்தில் வாகனங்களை இயக்கும் மற்ற ஓட்டுநர்கள் ஆரம்பத்தில் ஒரு பெண் வாகனம் ஓட்டுவதை அவ்வளவு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ஆனின் பேருந்தை துரத்திச் சென்று முந்த முயன்றதோடு, மிகவும் அசௌகரியமாக இருந்தது. அவர்களில் பலர் மோசமாகவும், மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாகவும், இப்போது அவர்கள் நண்பர்களாக மாறி விட்டதாக மகிழ்ச்சியாகக் கூறுகிறார் ஆன். பேருந்தில் இருந்த மற்ற ஊழியர்கள், கண்டக்டர் போன்றவர்கள் இப்போது என் நண்பர்கள். ஒவ்வொரு ஷிப்ட் முடிஞ்சதும் நாங்களும் சேர்ந்து சாப்பிடுவோம் எனக் கூறிய அவர், இது ஒரு கடமை மட்டுமே எனவும், சம்பளம் கூட வாங்குவதில்லை எனும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications