கேரளா தேர்தல்: 40 ஆண்டுகளுக்குப் பின் சரித்திரம்-மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி.. பரபர கருத்து கணிப்பு
திருவனந்தபுரம்: கேரளா சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணியே அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் போல கேரளாவிலும் சட்டசபை தேர்தல் களை கட்டியுள்ளது. 140 இடங்களைக் கொண்ட கேரளா சட்டசபை தேர்தல் தொடர்பாக ஏசியாநெட் நியூஸ்-சிபோர் ஆகியவை இணைந்து கருத்து கணிப்பு நடத்தின.
இக்கருத்து கணிப்பில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 72 முதல் 78 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெரும்பான்மைக்கு தேவை 71 இடங்கள்.

40 ஆண்டுகளுக்குப் பின்..
கேரளாவில் 1980-ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த ஒரு கட்சியும் அல்லது எந்த ஒரு கூட்டணியும் 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தது இல்லை. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இடதுசாரிகள் 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து சரித்திரம் படைப்பார்கள் என்கிறது இக்கருத்து கணிப்பு

காங்கிரஸ் அமோகம்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியானது 59 முதல் 65 இடங்களில் வெல்லும் என்கிறது இக்கருத்து கணிப்பு. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 3 முதல் 7 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்
கேரளா முதல்வராக பினராயி விஜயன் மீண்டும் வரவேண்டும் என 39% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் முதல்வர் வேட்பாளராக உம்மன் சாண்டி 18% பேரும் சசி தரூருக்கு 9% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜாவுக்கு 7% பேரும் காங்கிரஸின் ரமேஷ் சென்னிதாலா, கேரளா பாஜக தலைவர் சுரேந்திரன் ஆகியோருக்கு தலா 6% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சபரிமலை விவகாரம்
கொரோனா லாக்டவுன் காலத்தில் உணவு தானியங்களை இலவசமாக வழங்கிய கேரளா அரசின் நடவடிக்கைக்கு 34% பாராட்டு தெரிவித்துள்ளனர். 2018-ல் சபரிமலை விவகாரத்தை கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசு சரியாக கையாளவில்லை என 34% பேர் கூறியுள்ளனர்.