"யாரை கேட்டு வேலைக்கு போன?".. மனைவியை கொடூரமாக தாக்கி வீடியோ வெளியிட்ட கணவன் - கும்மிய போலீஸ்
திருவனந்தபுரம்: குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்ற மனைவியை கொடூரமாக தாக்கியதுடன் மட்டுமல்லாமல் அதை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்ட குடிகார கணவனை போலீஸார் துவைத்தெடுத்து கைது செய்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மலையின்கீழு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (27). இவருக்கும், ஆஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
திருமணமான புதிதில் ஒழுங்காக வேலைக்கு சென்று வந்த திலீப், பின்னர் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். தினமும் மது அருந்தியதால் ஒருகட்டத்தில் குடிக்கு அடிமையானார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திலீப் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மேலும், அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி குடித்தும் வாழ்க்கையை ஓட்டி வந்தார்.

வேலைக்கு சென்ற மனைவி
இதனிடையே, மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என கவலைப்பட்ட ஆஷாவின் பெற்றோர், அவருக்கு இயன்ற அளவு பணம் கொடுத்து உதவி வந்துள்ளனர். ஆனால் அந்தப் பணத்தையும் எடுத்துச் சென்று திலீப் குடிப்பதும், கும்மாளம் அடிப்பதுமாக இருந்தார். குடியை நிறுத்திவிட்டு ஏதாவது வேலைக்கு செல்லுமாறு ஆஷா பல முறை கூறியும் அவர் திருந்தவில்லை. இதனால் கணவனை நம்பி பயனில்லை என உணர்ந்த ஆஷா, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் அண்மைக்கு வேலைக்கு சேர்ந்தார்.

எச்சரித்த 'குடிகார' கணவன்
இந்நிலையில், தனது மனைவி வேலைக்கு செல்வதை அறிந்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்றார் திலீப். "ஒரு வீட்டில் பெண் வேலைக்கு சென்றால், என்னை பற்றி நாலு பேர் என்ன பேசுவார்கள்" எனக் கூறி மனைவியிடம் தகராறு செய்தார். மேலும், "இனி நீ வேலைக்கு போகக்கூடாது" என்றும் மிரட்டியுள்ளார். ஆனால், ஆஷா, கணவர் பேச்சை கேட்காமல் வேலைக்கு சென்று வந்தார்.

மனைவி மீது கொடூர தாக்குதல்
இந்த சூழலில், கடந்த வாரம் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்த ஆஷாவை, திலீப் கொடூரமாக தாக்கினார். வீட்டில் இருந்த விறகு கட்டையை எடுத்து அவரை தலை, முகம் என உடலில் பல இடங்களில் சரமாரியாக அடித்தார். இதில் ஆஷாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆனால் ஆத்திரம் அடங்காத திலீப், தனது செல்போனில் வீடியோ எடுத்தபடியே ஆஷாவை கடுமையாக தாக்கினார். ஒருகட்டத்துக்கு மேல் அடி தாங்க முடியாத ஆஷா, உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக இனி வேலைக்கு செல்ல மாட்டேன் எனக் கூறி கதறினார்.

ஆணவத்தில் வெளியிட்ட வீடியோ - தேவையா?
அதன் பின்னர், ஏதோ சாதனையை செய்தது போல, அந்த வீடியோவில் தனது முகத்தை காட்டிய திலீப், "பார்த்தீர்களா.. கொடுத்த அடியில் வேலைக்கு போக மாட்டேன் என என் மனைவி கூறிவிட்டாள். வீட்டில் ஒரு ஆண் மகன் இப்படிதான் இருக்க வேண்டும்" என அதில் அவர் கூறுகிறார். மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளத்திலும் அவர் பதிவிட்டார். இதனிடையே, இந்த வீடியோ வைரலாகி கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், அந்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பல தரப்பு மக்களும் வலியுறுத்தினர். இதையடுத்து, சித்ரவதைக்குள்ளான ஆஷாவும் தனது கணவர் மீது புகார் கொடுக்க, அங்கு வந்த போலீஸார், திலீப்பை நையப்புடைத்து கைது செய்து அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications