சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபிட் ஆகுறோம், பட்டைய கிளப்புறோம்… ஜிம்முக்கு போகும் அங்கிள், ஆண்ட்டீஸ் அட்டகாசங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: சுவர் இருந்தாதான் சித்திரம்.. அதனால உடம்பு பத்திரம்... இப்படி ஆளாளுக்கு இன்று பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நமது வாட்ஸ் அப்பில் இருக்கும் பள்ளிக்கால நண்பர்களின் குரூப், கல்லூரி நண்பர்களின் குரூப்புகளில் திடீரென நம்ம மகேஷ் செத்துட்டாண்டா என்று செய்தி வந்துவிழும்போது, அடி ஆழத்தில் ஒரு பயம் பிடித்து ஆட்ட ஆரம்பித்துவிடும். மிஞ்சி மிஞ்சி போனா ஒரு நாற்பது வயசு இருக்குமா, அதுக்குள்ளேயே மாரடைப்பா? என்று மலைப்பாக இருக்கும்.

கூட வேலை செய்யும் நண்பர் ஒருவர் நன்றாக வேலைக்கு வந்தவர், வந்த சில நிமிடங்களில் கை, கால்கள் வலிப்பு வந்தது போல் இழுக்க, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தோம். பாராலிடிக் அட்டாக் என்று சொல்லிவிட்டார்கள். பிசியோதெரபி செய்தபடி வீட்டில் இப்போது ஓய்வெடுக்கிறார். இது போன்ற செய்திகளை நேரில் பார்க்கும்போது உடல்நலன் மீதான பயம் கலந்த அக்கறை வந்துவிடுகிறது. உடனே உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எதையாவது செய்ய ஆரம்பித்துவிடுவோம். பெரும்பாலானோர் உடனடியாக ஜிம்மில் சேர்ந்துவிடுவார்கள்.

go to the gym regularly not occasionally

நானும் அப்படி ஒரு ஜிம்மில் போய் சேர்ந்தேன். ஒரு நீண்ட அப்ளிகேஷன் பாரம் கொடுத்தார்கள். உங்களுக்கு என்ன ஆகணும் எடையை குறைக்கணுமா, ஏத்தணுமா, ஃபிட்னஸ் மெயிண்டெயின் பண்ணனுமா என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினார் ஒரு இளம்பெண். அடுத்ததாக ஒரு பெண் வந்து எடை, உயரம் போன்றவற்றை எல்லாம் சரி பார்த்துவிட்டு, உங்க பாடி மாஸ் இண்டெக்ஸ் படி நீங்க 5 கிலோ அதிகமா இருக்கிறீங்க என்றார். கவலைப்படாதீங்க, ஒரே மாசத்துல குறைச்சிரலாம் என்று அந்த மாதரசி கொடுத்த மாரல் பூஸ்டில் ஒரு வருஷ பேக்கேஜ்ஜுக்கு பணம் கட்டிவிட்டு ஜிம் எனும் அதிசய உலகத்திற்குள் நுழைந்தேன்.

முதல் ஒரு வாரம் வெறும் ட்ரெட் மில்லில் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற கார்டியோ உடற்பயிற்சிகள் மட்டும்தான். நம்மள வெயிட் எல்லாம் தூக்கவிட்டா, ஆறு மாசத்துல அர்னால்ட் ஆயிடலாமே, ஏன் இப்படி டைம் வேஸ்ட் பண்றாங்க என்று தோன்றியது. அப்புறம் அடுத்தடுத்த நாட்களில் ஜிம்முக்கு வரும் விதவிதமான மனிதர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு ஆண்ட்டி வாரத்திற்கு இரண்டு தடவை மட்டும் ஜிம்மிற்கு வருவார். குறைந்தது 100 கிலோ இருப்பார். வந்த உடன் யாருக்கோ போனைப் போட்டு பேச ஆரம்பித்தபடி, ட்ரெட் மில்லில் வியர்க்க விறுவிறுக்க நடப்பார்.

பெரும்பாலும் நான் பக்கத்து ட்ரெட் மில்லில் ஓடுவதால் அவர் பேசுவது நன்றாகவே காதில் விழும். அக்கம்பக்கத்து வீட்டு வம்பு தொடங்கி சில நேரங்களில் இந்த மோடி கவர்மெண்ட் ரொம்ப மோசம் என்பது வரை அனைத்தையும் பற்றி அனல்பறக்க பேசுவார். ட்ரெட் மில் முடிந்ததும் கொஞ்சம் அங்கேயே சோபாவில் உட்கார்ந்து அடுத்து வர்ர ஆண்ட்டிகள் சிலருடன் அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிடுவார். வொர்க் அவுட் 20 நிமிஷம், அரட்டை அரை மணி நேரம் என்று ஷெட்யூல் போட்டு வைத்திருப்பார்.

go to the gym regularly not occasionally

முப்பதுகளில் இருக்கும் இரண்டு இளம்ஆண்ட்டிகள் ரெகுலராக ஜிம்மிற்கு வருவார்கள். கொஞ்ச நேரம்தான் வொர்க் அவுட் செய்வார்கள். மற்ற நேரம் முழுவதும் ஒருத்தரை ஒருத்தர் மாற்றி மாற்றி போட்டோ எடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஒரு படத்தில் வடிவேலுவை மயில்சாமி வளைச்சு வளைச்சு படம் எடுப்பார்ல, அந்த மாதிரி எடுப்பார்கள். தம்புல்சை தூக்குற மாதிரி போஸ், பெல் ராடை தூக்குற மாதிரி போஸ் என போஸோ போஸ்தான். எடுத்த புகைப்படங்களை சுடச்சுட இன்ஸ்டாவிலும், ஃபேஸ்புக்கிலும் அப்லோடு செய்துவிட்டு, லைக்கு, கமெண்ட்களை கணக்கெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். சில கமெண்ட்களை படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். சுற்றி இருக்கிற யாரைப் பற்றியும் கவலையேபடமாட்டார்கள்.

அங்கிள்கள் மட்டும் தக்காளி சட்னியாக்கும்.. ஒரு ஆர்வக்கோளாறு அங்கிள் இருக்கிறார். ட்ரெயினர் சொல்லாத உடற்பயிற்சிகளை எல்லாம் யூ ட்யூப்பில் பார்த்து முயன்று கொண்டிருப்பார். ஒற்றைக் கையில் தண்டால் எடுப்பது, கையை தட்டித் தட்டி தண்டால் எடுப்பது என்று சர்க்கஸ் எல்லாம் செய்வார். சார், இதுக்கு அப்புறம் இந்த எக்சர்சைஸ் செய்யக் கூடாது, தசை இறுகி ஸ்ட்ரெயின் ஆயிடும் என்று ட்ரெயினர் சொன்னாலும் கேட்க மாட்டார். நான் ஒரு காட்டாறு, ஐ வோல்டேஜ் மோட்டாரு என்ற ரேஞ்சுக்கு பின்னி பெடலெடுப்பார். ஒருநாள் வழக்கமான ஆர்வக்கோளாறில் அதிக எடையுள்ள வெயிட்டை தம்கட்டி தூக்கி எசகுபிசகா ஏதோ செய்யப் போக அடிவயிற்றில் புடிச்சிகிச்சுனு அலறிகிட்டே போனவர்தான், அப்புறம் நான் அந்த அங்கிளை ஜிம் பக்கம் பார்க்கவே இல்லை.

எனது ஜிம் ஒரு பெரிய கிளப்பில் இருக்கிறது. ஒரு அங்கிள் தினமும் ஷார்ட்ஸ், டீ சர்ட் போட்டுக் கொண்டு வருவார். ஜிம் வாசலில் நின்று சில நிமிடங்கள் யோசிப்பார். பின்னர் அப்படியே யூ டர்ன் போட்டு அடுத்த பிளாக்கில் உள்ள பாருக்கு நடையை கட்டிவிடுவார். மாதத்தில் 10 நாள் கிளப்பிற்கு வந்தால், அதில் 8 நாள் பார், 2 நாள் ஜிம் என்ற கணக்கில் வருவார். இதுகூட பரவாயில்லை, நானும் ஒரு வருஷமா ஜிம்மிற்கு வர்ரேன், உடம்புல பெரிய வித்தியாசம் தெரியலையேப்பா என்று ட்ரெயினரை வேறு கடுப்பேத்துவார். தனது பெரிய பீர் தொப்பையை தடவியபடி இதை எப்படியாவது கரைக்கணும்னு பார்க்கிறேன், முடிய மாட்டேங்குது என்று பெருமூச்சுவிடுவார்.

இன்னொரு வித்தியாசமான அங்கிள் இருக்கிறார். அவர் பயங்கர பிசியான பிசினஸ்மேன். இருந்தாலும் நேரம் ஒதுக்கி எப்படியாவது ஜிம்மிற்கு வந்துவிடுவார். மரம் ஓய்வை விரும்பினாலும், காற்றுவிடுவதில்லை கதையாக போன் மேல் போன் வந்து கொண்டேயிருக்கும். ஹெட் போனை மாட்டி பேசிக் கொண்டே உடற்பயிற்சி செய்வார். சில நேரங்களில் அவரைத் தேடிக் கொண்டு சிலர் ஜிம்மிற்கே வந்துவிடுவார்கள். நடிகர், நடிகைகள் ஷாட் இடைவேளையில் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பது போல, ஒரு வொர்க் அவுட் செய்துவிட்டு இடையில் போய் இரண்டு நிமிடம் பேசிவிட்டு வருவார். மறுபடியும் அடுத்த எக்சர்சைஸ் முடிந்ததும் மீண்டும் போய் விட்ட இடத்தில் இருந்து பேசுவார். இவ்வளவு வேலையிலும் மனுஷன் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முயற்சி பண்றாரேன்னு தோணும்.

உண்மையிலேயே வெறித்தனமான வொர்க் அவுட் செய்யும் நடுத்தர வயசுக்காரர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒரு குரூப் எங்கள் ஜிம்மில் இருக்கிறது. நாங்க நாலு பேர், எங்களுக்கு பயமே கிடையாதுன்னு அன்புச்செல்வன் ஐபிஎஸ் குரூப் மாதிரி, ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் நாலு அங்கிள்கள் ரெகுலராக ஜிம்மிற்கு வருவார்கள். அவர்கள் செய்யும் உடற்பயிற்சிகள் எல்லாம் உண்மையிலேயே வேற லெவல். நீண்ட நாள் பழக்கம் இருந்தால் மட்டுமே அதுபோன்ற உடற்பயிற்சிகளை செய்ய முடியும். என்னுடைய உண்மையான இன்ஸ்பிரேஷன் இவர்கள்தான்.

இன்று ஜிம் என்பது மிகவும் மாறிவிட்டது. நான் இருபது வருடங்களுக்கு முன் முதன்முதலில் போன சிறிய ஜிம்மில் ஒரே ஒரு ஃபேன் இருக்கும். அனைத்து உடற்பயிற்சி கருவிகளும் மிகவும் எளிய கருவிகளாக இருக்கும். இன்று பெரும்பாலும் எல்லா ஜிம்களிலும் ஏசி குளுகுளுவென வீசுகிறது, அதிநவீன மெஷின்கள் நம் உடற்பயிற்சியை எளிதாக்கிவிட்டன. எவ்வளவு தூரம் ஓடினோம், எத்தனை கலோரிகளை கரைத்தோம் என்பது தொடங்கி அத்தனை புள்ளிவிவரங்களும் நம் முன் உள்ள திரையில் விரிகின்றன. ஆனால் ஏதோ ஒரு ஆர்வத்தில் ஜிம்மில் சேர்ந்துவிட்டு, அதன் பிறகு அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத கூட்டம் மட்டும் இன்றும் மாறாமல் அப்படியே இருக்கிறது. அப்படியே தவறி ஜிம்மிற்கு வந்தாலும், வந்த வேலையை பார்க்காமல் அரட்டை கச்சேரியில் இறங்கும் கூட்டமும் அப்படியேதான் இருக்கிறது.

- கௌதம்

English summary
Most people want to reduce their weight. They are going to Gym and doing various exercises but they are not following it regularly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X