• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பார்க்க வேண்டியவை...

By Super
|

Meenakshi Amman temple
கோவில்களுக்குப் பெயர் போனது மதுரை. மதுரையிலும், நகரைச் சுற்றிலும் பல கோவில்கள் உள்ளன. நகரின் மையப் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதுதவிர, வண்டியூர் மாரியம்மன் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில், திருப்பரங்குன்றத்தில் முருகனின் முதல் படை வீடு, அழகர் கோவில், திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோவில் என பல கோவில்கள் அமைந்துள்ளன.

மதுரை நகரில் உள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலங்களாக, திருமலை நாயக்கர் மஹால், காந்தி மியூசியம் ஆகியவை உள்ளன. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழனி, கொடைக்கானல் ஆகிய பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன.

மீனாட்சி கோவில்

கோவில் அருங்காட்சியகம்:

அழகர் கோவில்

மாரியம்மன் கோவில் தெப்பக்குளம்

திருமலை நாயக்கர் மஹால்

காந்தி மியூசியம்

கோவலன் பொட்டல்

திருப்பரங்குன்றம்

விரகனூர்:

வைகை அணை

தேக்கடி:

கொடைக்கானல்:

பழனி:

பிற இடங்கள்:

மதுரை என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது மீனாட்சி அம்மன் கோவில். பெரியார் பஸ் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மீனாட்சி கோவில். குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றது.

மதுரை நகரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள மீனாட்சி கோவில் நகருக்கு அழியாப் புகழைக் கொடுத்துள்ளது. கோவிலைச் சுற்றிலும் அமைந்துள்ள நான்கு வெளி வீதிகள்தான் நகரின் அன்றைய எல்லையாக இருந்தது. தென்னிந்தியாவின் பழம்பெரும் புராதனக் கோவில்களில் இதுவும் ஒன்று. தமிழர்களின் கலாசாரம், இலக்கியம், இசை, நடனம் என பல்துறைகளின் பெருமையை விளக்கும் மையமாக இது நின்று கொண்டுள்ளது.

மூன்றாவது மற்றும் இறுதித் தமிழ்ச் சங்கம் மதுரையில் கூடியபோது, இலக்கிய சுவடிகளையெல்லாம் கோவில் குளத்தில் போட்டு விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது, நல்ல புத்தகங்கள் மட்டும் மூழ்காமல் இறைவனின் சக்தி தடுத்தது. தரம் குறைந்த புத்தகங்கள் குளத்தில் மூழ்கும்படியும் அது செய்தது.

ஆகம விதிகளை கடுமையாகக் கடைப்பிடித்துக் கட்டப்பட்டது மீனாட்சி அம்மன் கோவில். ஒவ்வொரு மன்னர்களின் காலகட்டத்திலும் அவர்களது விருப்பத்திற்கேற்ப வளர்ந்த இக்கோவில் 65,000 சதுர அடிப் பரப்பளவில் அமைந்துள்ளது.

மீனாட்சி யார்? மலையத்துவாஜ பாண்டிய மன்னனின் மகள்தான் மீனாட்சி. மலையத்துவாஜ பாண்டியனுக்குக் குழந்தை இல்லை. இந்த நிலையில் கடவுள் அருளால் அவருக்கு ஒரு பெண் குழந்தை கிடைத்தது. அதைத் தத்தெடுத்துக் கொண்டார் பாண்டியன். ஆனால் குழந்தைக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. இதனால் மன்னன் கவலையுற்றான். ஆனால் தன் மனம் கவர்ந்தவனைக் காணும்போது, மூன்றாவது மார்பகம் மறையும் என்று அசரிக் குரல் மன்னனை ஆறுதல் படுத்தியது.

மீனாட்சி சிறந்த வீராங்கனையாக வளர்ந்தார். திருக்கயிலாயத்தில் ஒரு போரில் ஈடுபட்டிருந்தபோது, சிவபெருமானின் தரிசனம் கிட்டியது. அவரது அழகில் மெய் மறந்தார் மீனாட்சி. அப்போது அவரது மூன்றாவது மார்பகம் மறைந்தது. இதையடுத்து சிவ பெருமானையே மணந்து கொண்டு, மீனாட்சி, சுந்தரேஸ்வரர் என்ற கோலத்தில் மதுரைக்கு வந்தார். அப்போதுதான் மீனாட்சி, வேறு யாருமல்ல, பார்வதியின் மறு உருவம் என்பது அனைவருக்கும் விளங்கியது. தெய்வ மகளான மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரர் கோலத்தில் வந்த சிவனுக்கும் மதுரையில் கோவில் கட்டப்பட்டது. அதுதான் மீனாட்சி அம்மன் கோவில்.

மொத்தம் 12 கோபுரங்களைக் கொண்டது மீனாட்சி அம்மன் கோவில். இதில் கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வானுயர அமைந்திருப்பது காண்பதற்கு அழகூட்டுவதாக உள்ளது. நான்கு கோபுரங்களிலும் தெற்கு கோபுரம்தான் அதிக உயரமானது. 170 அடி உயரம் கொண்ட இக் கோபுரம், 9 நிலைகளைக் கொண்டது.

பழமையான கோபுரம் 13-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கிழக்கு கோபுரம். சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ளது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் என்ற மன்னன் இக்கோபுரத்தைக் கட்டினார்.

மீனாட்சி கோவிலில் இடம் பெற்றுள்ள அஷ்ட சக்தி மண்டபம், திருமலை நாயக்கரின் இரு மனைவிகளால் கட்டப்பட்டது. இதற்கு அடுத்து உள்ளது மீனாட்சி நாயக்கர் மண்டபம்.

கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக நுழைந்தால் தென்படுவது பொற்றாமறைக் குளம். இக்குளத்தின் நடுவில் தங்கத் தாமரை மிதக்க விடப்பட்டிருந்ததால் இப்பெயர் வந்தது. இங்குதான் தமிழ்ச் சங்கம் இயங்கியது.

தொடர்ந்து உள்ளே சென்றால் தலில் வருவது அம்மன் சன்னதி. அடுத்து வருவது சுந்தரேஸ்வரர் சன்னதி. அம்மன் சன்னதிக்கு முன்பாக, ஊஞ்சல் மண்டபம் உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் சிலைகள் ஊஞ்சலில் வைத்து ஆட்டப்படும்.

கிளிக்கூண்டு மண்டபத்திற்கு வடக்கே அமைந்துள்ளது சுந்தரேஸ்வரர் சன்னதி. வழியில் நாம் பார்ப்பது பிரமாண்டமான பிள்ளையார் சிலை. இது முக்குறுணிப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறது. கோவில் கட்டும் போது, மண்ணுக்காக வண்டியூரில், பெரிய குளத்தை திருமலை நாயக்கர் வெட்டினார். அப்போது அங்கு இந்த பிள்ளையார் கிடைத்தார்.

புது மண்டபம்:

கிழக்கு கோபுரத்திற்கும், முடிவு பெறாத நிலையில் உள்ள ராஜகோபுரத்திற்கும் இடையில் உள்ளது இந்த மண்டபம். இதற்கு வசந்த மண்டபம் என்றும் பெயர். திருமலை நாயக்கர் கட்டியது இது. அழகான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது இந்த மண்டபம்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள இந்த அருங்காட்சியகம் கோவிலில் உள்ள கட்டடக் கலை குறித்து விளக்கப்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தில் மொத்தம் 985 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் அக்கால கட்டடக் கலை மறைந்துள்ளது. தூண்கள் அமைந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் கூட இன்னும் அழகு குலையாமல் உயிரோட்டத்துடன் உள்ளன. ஒரு கோணத்தில் நின்று பார்த்தால், அத்தனை தூண்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். அக்காலத்திய கட்டடக் கலையின் சிறப்பை விளக்குவதாக இது உள்ளது.

மண்டபத்தின் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள தூண்களில் சிலவற்றைத் தட்டினால் இசை வரும். ஒவ்வொரு தூணும் ஒரு இசையைத் தரும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.

காலை 6 மணி தல் இரவு 8மணி வரை காட்சியகம் திறந்திருக்கும்.

வைணவர்களின் புனிதத் தலமாக மதுரை அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில், தொட்டில் போல உள்ள அழகர் மலை எனப்படும் அழகர் கோவில் விளங்கி வருகிறது.

சிற்ப கலையின் சிறப்புக்கு சரியான உதாரணமாக, கோவில் உள்ள முகப்பு மண்டபத்திலும், மற்ற மண்டபங்களின் தூண்களிலும் உள்ள சிற்பங்கள் உள்ளன.

சங்க காலத்திலிருந்தே சிறப்பு பெற்று வரும் இத்தலத்தை பற்றி ஆழ்வார்கள் தங்கள் பாடலில் குறிப்பிட்டுள்ளனர். நக்கீரர் உள்பட பல புலவர்கள் அழகர் கோவிலைப் பற்றி பல பாடல்கள் இயற்றியுள்ளனர்.

அழகர் கோவிலில், பெருமாள், சுந்தரராஜராக எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலிக்கிறார்.

Azhagar Temple

இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், அழகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவில், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோவிலைச் சுற்றி உள்ள மலைகளும், இயற்கை காட்சிகளும், நிலவும் அமைதியான சூழ்நிலையும், பெருமாளைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திவ்யமான நிம்மதியைத் தரக் கூடியதாக உள்ளது.

பாண்டியர்களின் சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் இந்த கோவிலை குலசேகர பாண்டியனின் மைந்தனான மலையத்துவஜா பாண்டியன் புதுப்பித்தான்.

கிபி 1251 முதல் 1270 வரை ஆண்ட ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கோவிலுக்கு பொன்னாலான விமானத்தை அமைத்தான். அதன் பின்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் மதுரை வீழ்ந்தபோது, கிருஷ்ணதேவராயன் இந்த கோவில் புணரமைப்பு பணிகள் செய்து ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தான்.

நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் மதுரை வந்தபோது, அழகர் கோவிலுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பாண்டிய, விஜயநகர மன்னர்களைப் போல நாயக்க மன்னர்களும் அழகர் கோவிலைப் போற்றி பராமரித்தனர்.

கிபி 1558 முதல் 1563 வரை ஆண்ட விஷ்வநாத நாயக்க மன்னன் இந்த கோவிலில் பல திருப்பணிகளை செய்தார்.

இந்த கோவிலின் முக்கிய தெய்வமாக கருதப்படும் பரமஸ்வாமி சிலையும், சுந்தரராஜ பெருமாளான கள்ளழகர் சிலையும் தங்கத்தினால் செய்யப்பட்டதாகும். இது பழங்கால கைவேலைப்பாடுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பெருமாளுக்கு வலப்புறமாக கல்யாண சுந்தரவல்லியும், இடப்புறமாக ஆண்டாளும் காட்சி தருகிறார்கள். ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தன் தந்தை பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு வந்து பெருமானை தரிசித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

கோவிலில், சுதர்சனனார், யோக நரசிம்மர், கருப்பசாமி ஆகியோருக்கு தனித்தனி கருவறைகள் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். கடைசியாக பெருமான் சந்நதி உள்ளது. இங்கே வரும் பக்தர்களுக்கு சந்நதியில் பொய் பேச தைரியம் வராது.

இதன் அருகில் 300 மீ உயரமுள்ள மலையில் சிலம்புரு, நுபுரு கங்கை எனப்படும் அருவிகள் உள்ளன. மகாவிஷ்ணு மனித உருவமாக திரிவிக்ரமர் அவதாரம் எடுத்தபோது அவருடைய பாதங்களிலிருந்து இந்த அருவிகள் உருவானதாக கூறப்படுகிறது.

கோவிலில் உள்ள திருமண மண்டபதிலுள்ள தூண்களில் நாயக்கர்களின் சிற்பக்கலை மிளிர்வதைக் காணலாம். மதுரை மீனாட்சி கோவில் தூண்களில் உள்ளது போன்ற சிற்பங்களுடன் இங்குள்ள தூண்களும் எழிலுற காணப்படுகிறது.

நரசிம்மர், கிருஷ்ணர், ரதி ஆகியோர் கிளி வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்றும், கருடவாகனத்தில் விஷ்ணு அமர்ந்திருப்பது போன்றும் இங்கு சிற்பங்கள் காணப்படுகின்றன. இது மட்டுமில்லாமல், திருமலை நாயக்க மன்னர் சிலைகளும் தூண் சிற்பங்களில் காணப்படுகிறது. அசோகர் காலத்திற்கு பின்னுள்ள சிற்பங்களும் இங்கு காணப்படுகிறது.

இங்குள்ள மலைக் குகைகளில் ஜைன மத குரு அஜ்ஜைனந்தி மற்றும் அவரது சீடர்கள் இங்கு தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.

அழகர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமானது சித்திரைப் பெருவிழாதான்.

சித்திரை திருவிழாவின் போது சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இந்த சித்திரைத் திருவிழாவுக்கு ஒரு புராணக் கதையும் உண்டு.

தங்கை மீனாட்சிக்கு மதுரையில் திருமணம். ஊரே விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. தங்கையின் கல்யாணத்தைக் காண கிளம்புகிறார் அழகர் பெருமான். அவர் மதுரை எல்லையை அடைகிறார். இடையில் வைகை ஆறு. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆற்றைக் கடந்து மதுரைக்குள் செல்வதற்குள், தங்கையின் கல்யாணம் முடிந்து விடுகிறது. இதனால் கோபமடையும் அழகர், மதுரைக்குள் வராமல் வைகை ஆற்றோடு திரும்பி ஊருக்குச் செல்கிறார். இதை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது.

எப்படிப் போகலாம்?

மதுரையிலிருந்து 21 கி.மீட்டர் தொலைவில் அழகர் கோவில் உள்ளது. இங்கு செல்ல மிகச் சிறப்பான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

மதுரை நகரிலிருந்து கோவிலுக்கு ஏராளமான நகரப் பேருந்துகள் உள்ளன. டாக்சி வசதியும் உண்டு. தங்கும் வசதி பெரிய அளவில் இல்லை. காலையில் கோவிலுக்குப் போய் விட்டு மாலையில் மதுரை திரும்பி விடுவது சிறப்பானது.

மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில், வண்டியூரில் அமைந்துள்ளது இக்கோவில். மீனாட்சி கோவில் கட்டும் போது, இக்கோவில் அருகே, பெரிய குளத்தை திருமலை நாயக்கர் வெட்டினார். இங்கிருந்துதான் மீனாட்சி கோவில் கட்டுமானப் பணிக்குத் தேவையான மண் அள்ளப்பட்டது.

இந்தத் தெப்பக்குள மைய மண்டபத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து திருமலை நாயக்கர் மஹாலுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டிருந்ததாக ஒரு செய்தி உண்டு. ஆண்டு தோறும் தை மாதத்தில் இங்கு தெப்பத் திருவிழா நடத்தப்படும்.

திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்ட சிறப்பான கட்டடங்களுள் இதுவும் ஒன்று. மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது உள்ள மஹால், அப்போது திருமலை மன்னர் வாழ்ந்த பகுதியின் ஒரு பகுதியே. பல பகுதிகள் காலப்போக்கில் அழிந்து விட்டன. சொர்க்கவிலாசம் மற்றும் ரங்க விலாசம் என இரு பகுதிகளைக் கொண்டது மஹால்.

மஹாலில், தலில் நுழைந்ததும் தென்படுவது, அரண்மனை தர்பார் மண்டபம். இங்கிருந்துதான் திருமலை மன்னர் மதுரையை ஆண்டு வந்தார். தினசரி நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும். நவராத்திரி விழா, சித்திரைத் திருவிழா, மாசி விழா, தெப்பத் திருவிழா ஆகியவற்றை திருமலை நாயக்கர் நடத்தி வந்தார்.

1822-ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் நேப்பியர் மன்னர், மஹாலை புணரமைத்து, அதன் ஒரு பகுதியில் மாவட்ட நீதி மற்றும் நிர்வாக அலுவலகங்களை ஏற்படுத்தினார்.

தமிழக அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இப்போது, மஹால் உள்ளது. தினசரி காலை 9 மணி தல் மாலை 5 மணி வரை மஹாலைச் சுற்றிப் பார்க்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலி, ஒளிக் காட்சியும் இங்கு உண்டு. திருமலை நாயக்கர் வரலாறு, கண்ணகி வரலாறு இதில் இடம் பெறும்.

தேசப் பிதா மகாத்மா காந்திக்கு நாட்டின் சில பகுதிகளில் நினைவு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, தேர்வு செய்யப்பட்ட ஒரு நகரம் மதுரை. மகாத்மா காந்தி, முழு ஆடை துறந்து அரை நிர்வாணத்திற்கு மாறியது, இந்த மதுரையில்தான்.

காந்தி மியூசியத்தில் மகாத்மா பயன்டுத்திய ஆடைகள், கடைசியாக அவர் அணிந்திருந்த உடை ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை தவிர நல்ல நூலகம் உள்ளது.

காந்தியின் நினைவைப் போற்றுவோருக்கு சிறந்த வரப்பிரசாதம் இந்த அருங்காட்சியகம்.

பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவலன் பொட்டல். கி. 300 மற்றும கி.பி. 300 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமான சங்க காலத்தில் இருந்து இடுகாடுகளை இங்கு காணலாம்.

மதுரைக்குத் தெற்கே, 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, முருகனின் இரண்டாவது படை வீடான திருப்பரங்குன்றம். இது ஒரு குகைக் கோவில். ஒரே கல்லில் குடைந்த கோவிலில் முருகன் குடி கொண்டுள்ளார். அசுரனான சூரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டு இங்கு குடிபுகுந்தார். கோவிலின் நுழைவாயிலில் 48 தூண்கள் அமைந்த, கலை வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபம் உள்ளது.

மதரை நகருக்குள் இருக்கும் சிறிய அணைக் கட்டு. வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த இடம். நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

: மதுரையிலிருந்து 65 கிலோமீட்டர் தூரத்தில் வைகை அணை உள்ளது. சிறந்த சுற்றுலாஸ்தலமாகும்.

மதுரை மாவட்டம் மற்றும் தமிழக எல்லையில் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த சுற்றுலாஸ்தலம் காண்பவர் மனதுக்கு இதம் தரக் கூடியதாக உள்ளது. அழகான ஏரியும், அவ்வப்போது வந்து செல்லும் யானைக் கூட்டம் மற்றும் பிற விலங்குகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். மதுரையிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் தேக்கடி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் முன்பு இருந்த கொடைக்கானல் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. ஊட்டிக்கு அடுத்து தமிழகத்தில் உள்ள இரண்டாவது பெரிய சுற்றுலா மலைவாசஸ்தலம் (7000 அடி உயரம்). மதுரையிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களை கொடைக்கானலில் காணலாம். கோக்கர்ஸ் வாக், ஏரி, தற்கொலைப் பள்ளத்தாக்கு, குறிஞ்சியாண்டவர் கோவில் என கொடைக்கானலுக்கு அணி செய்பவை பல.

122 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. தமிழகத்தின் திருப்பதி என்று சொல்லக் கூடிய அளவுக்கு நல்ல வருவாய் உள்ளது பழனி தண்டாயுதாபாணி கோவில். விஞ்ச் மூலம் கோவிலுக்குச் செல்லும் வசதி உள்ளது. பஞ்சாமிர்தம், விபூதிக்குப் பெயர் போனது பழனி. மதுரைக்கு அருகிலுள்ள முக்கிய புனிதத்தலம்.

மதுரையில் உள்ள மற்ற பிரபல இடங்களில் மங்கம்மாள் சத்திரம், தமிழன்னை சிலை, தக்கம் மைதானம் ஆகியவை முக்கியமானவை. காந்தி மியூசியம் அமைந்துள்ள கட்டடம், ராணி மங்கம்மாளினால் கட்டப்பட்டது. இங்குதான் காந்தி மியூசியம், நூலகம், மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more