Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100 நாள் வேலை -உழைப்பதற்கு அசராத விவசாயத் தொழிலாளிக்கு சீமான் சோம்பேறிப் பட்டம் தருவதா? -அ. குமரேசன்

Subscribe to Oneindia Tamil

"நூறு நாள் வேலை," என்று வழக்கத்தில் சொல்லப்படுகிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005ல், அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டபோது, இந்தத் திட்டம் விவசாயத்திற்கு தொழிலாளர்கள் கிடைக்காமல் செய்துவிடும் என்று அபாயச் சங்கு ஊதப்பட்டது. பின்னர் இத்திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு பற்றிய விவாதங்களில் வயலில் இறங்கி உழைக்காமலே கூலி கிடைத்துவிடுவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுவிட்டது என்று அபாய மணி அடிக்கப்பட்டது. இப்போதும் அந்தச் சங்கு ஊதப்படுகிற, மணி அடிக்கப்படுகிற ஓசைகளைக் கேட்கிறபோது, திட்டத்திற்கு இறுதி யாத்திரை நடத்துவதில் இவ்வளவு உறுதியா என்ற திகைப்பு ஏற்படுகிறது.

பொருளாதார வல்லுநர்களில் வலதுசாரிகள் திட்டத்தை எதிர்த்தும், இடதுசாரிகள் ஆதரித்தும், கருத்துக் கூறி வந்திருக்கிறார்கள். விவசாயச் செயல்பாட்டாளர்களில் நிலவுடைமையாளர்கள் எதிர்த்து வருகிறார்கள், அவர்களது நிலங்களில் உழைக்கிற விவசாயத் தொழிலாளர்கள் ஆதரித்து வருகிறார்கள். அரசியல் களத்தில் பாஜக-வினர் எதிர்க்கிறார்கள், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தோர் ஆதரிக்கிறார்கள். இப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டத்தையே ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். அதற்கு முன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மக்களைச் சோம்பேறியாக்கவே இந்தத் திட்டம் என்று சொன்னதோடு, டாஸ்மாக் கடைகளோடும் ஒப்பிட்டிருக்கிறார்.

Writer Kumaresan Article on Facts in MGNREGA scheme

இந்தத் திட்டத்தால் விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை, மக்களை இது சோம்பேறியாக்குகிறது, அவர்கள் மரத்தடி நிழலில் வெட்டிக்கதை பேசி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற வாதங்களே மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகின்றன. நிலவுடைமையாளர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே இவர்கள் தங்களை யாருடைய பிரதிநிதியாக முன்னிறுத்திக்கொள்கிறார்கள் என்ற விமர்சனங்களும் கண்டனங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டிற்கு ஆதாரம்?

கடந்த பல ஆண்டுகளில் வேளாண்மைத் தொழிலுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. சாதாரணமாக கூகுளில் தேடினாலே, பணியாளர் தேர்வு ஆணையத்தின் பதிவுகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்கள் ஆதாரமாகக் கிடைக்கின்றன. மேற்கொண்டு தொடுக்கப்படும் சட்டத் தாக்குதல்களை ஏற்க மாட்டோம் என்று நாட்டில் தலைநகரில் அயராமல் போராடிக்கொண்டிருக்கிற விவசாயிகள் சாட்சிகளாக நிற்கிறார்கள். ஆனால், ஊரக வேலை உறுதித் திட்டத்தால்தான், அதனால் மக்கள் சோம்பேறிகளாகிவிட்டதால்தான், அவர்கள் நிழலில் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருப்பதால்தான் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று காட்டுகிற புள்ளிவிவரங்கள் எதுவும் இதுவரையில் ஆதாரமாக முன்வைக்கப்பட்டதில்லை. நம்பகமான அமைப்புகளின் ஆய்வறிக்கைகள் எதுவும் சாட்சியமாக நிறுத்தப்பட்டதில்லை. திட்டத்தை ஒழிக்க விரும்புவோர் இத்தகைய தகவல்களை அளித்தால் ஆராயலாம்.

திட்டத்தின் பெயரே, கிராமங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஓராண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதிப்படுத்துவது என்ற பொருளைத் தருகிறது. அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் பெரிதும் விவசாயத்தைச் சார்ந்திருப்பவர்கள். அதாவது நிலவுடைமையாளர்கள் தருகிற வேலைகளை நம்பியிருக்கிறவர்கள். அந்த வேலை கிடைக்காத நாட்களில் தாக்குப்பிடித்து வாழ்வதற்காக, கிராமத்திற்கும் விவசாயத்திற்கும் உதவக்கூடிய கட்டுமானம் சார்ந்த வேறு வேலைகள் அதிகம் போனால் 100 நாட்களுக்குத் தரப்படும், அதற்கான கூலி வழங்கப்படும். அவர்கள் சும்மா இருந்துகொண்டிருக்க வீடுகளுக்குக் கூலி அனுப்பிவைக்கப்பட மாட்டாது. இதுதான் திட்டத்தின் அடிப்படை. ஆக, அந்த வேலைகளைச் செய்துதான் கூலி பெறுகிறார்கள். பிறகு எப்படி அவர்கள் சோம்பேறியாகிவிட்டதாக, திட்ட ஒழிப்பாளர்கள் கூறுகிறார்கள்?

உலகின் மிகப்பெரிய மக்கள் நலத்திட்டம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இத்திட்டம், 2006ல் நடைமுறைக்கு வந்தது. அதன் பின் முதல் பத்தாண்டுகளில் 3 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய், கிராமப்புற ஏழைகளுக்கான வேலைகளுக்காகச் சென்றது. அது, கிராமப்புற வறுமை நிலையை மாற்றுவதில் ஓரளவுக்குக் கைகொடுத்திருக்கிறது என்று உலக வங்கியின் 'உலக மேம்பாட்டு அறிக்கை' தெரிவிக்கிறது. அதற்கடுத்த நான்காண்டுகளின் நிலவரம் பற்றிய புதிய ஆவணங்கள் இதை மேலும் உறுதிப்படுத்துகிற தகவல்களைத் தெரிவிக்கக்கூடும்.

புலம்பெயர்தல் குறைந்தது

மிக முக்கியமாக, கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் பிழைப்புத் தேடிப் புலம்பெயர்கிற நிலைமை, நாடு முழுவதுமே இத்திட்டத்தால் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இன்றைய கொரோனா பெருந்தொற்றுத் தாக்குதல் தொடங்கிய பிறகு, நகரங்களிலிருந்து ஏராளமானோர் தங்கள் சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பினார்கள் (கால்களில் ரத்தம் வடிந்து கண்களில் கண்ணீர் வரவழைத்த அந்தக் காட்சிகளை மறக்க முடியுமா?). அவர்களுக்கு அந்தக் கிராமங்களிலேயே தொடர்ந்து அரைவயிறை நிரப்பிக்கொள்கிற அளவுக்காவது வேலை கிடைப்பதற்கு இந்தத் திட்டம் பெரிய அளவில் துணையாக இருந்திருக்கிறது. அந்த மாநிலங்களின் அரசுகள் அவர்களுக்கும் இத்திட்டத்தில் வேலையும் கூலியும் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கின்றன. கேரளத்தில் கொரோனா வெப்பத்திலிருந்து காக்கும் நிழலாக, கிராம மக்களுக்குத் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம் அமைந்தது.

தமிழகத்திலும், கிராமப் பகுதிகளில் சுற்றுச்சூழலுக்குத் துணையாகக்.கூடிய வகையில் குறுங்காடுகள் வளர்ப்பு, கடலோரப் பகுதிகளில் மரம் வளர்ப்பு, மழைநீர்க் கால்வாய்கள் சீரமைப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு, சாலைகள் மேம்பாடு, புதிய சாலைகள், பண்ணைக் குட்டைகள் அமைப்பு, கழிப்பறைகள் உள்ளிட்ட அரசாங்கக் கட்டுமானங்கள் என பல்வேறு பணிகள் நடந்திருக்கின்றன. இந்தப் பணிகளைச் செய்துகொடுத்தவர்கள் விவசாயத் தொழிலாளர்களும் சிறு விவசாயிகளும் குறு விவசாயிகளும்தான். விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாத காலத்தில் இவர்கள் வருவாயின்றித் தவிக்கிற நிலைமைக்கு இதனால் கணிசமான அளவுக்கு முடிவுகட்டப்பட்டிருக்கிறது. கிராமங்களில் இயல்பாக விவசாயம் நடைபெறுகிறபோது இவர்கள். நிலத்தை உழுவது, விதைப்பது, விளைந்ததை அறுவடை செய்வது என உழவு சார்ந்த வேலைகளைச் செய்கிறார்கள். இவர்கள் இல்லாமல் அந்த வேலைகள் எதுவும் நடக்காது. ஆக, விவசாயம் நடைபெறுகிற நாட்களிலும் நடைபெறாத நாட்களிலும் உழைக்கிறவர்களை எப்படித்தான் எளிதாகச் சோம்பேறிகளாகிவிட்டதாகச் சொல்ல முடிகிறதோ?

சுயமரியாதையின் கசப்பு

இப்படிச் சிறுமைப்படுத்தப்படுவதை எப்போதுமே அனுபவித்து வந்திருப்பவர்கள்தான் விவசாயத் தொழிலாளர்கள். எளிய விவசாயிகளுடைய உற்பத்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு விவசாயத் தொழிலாளிகளுக்கு உரிய கூலி கிடைத்ததில்லை. அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள், ஒடுக்குமுறைகள், ஒப்பந்தங்கள் என எல்லாக் கிராமங்களின் வயல்களிலிலும் வரலாறுகள் இருக்கின்றன. நியாயக் கூலி என்பது உழைப்புக்கான பணமதிப்பு மட்டுமல்ல, அவர்களது மதிப்புக்கான ஏற்பாடுமாகும். அரைகுறைக் கூலியால் அந்த மதிப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு, 100 நாள் வேலைத் திட்டத்தால் அரசு நிர்ணயித்த கூலி கிடைக்கத் தொடங்கியது. அது அவர்களது சுயமரியாதைக்குத் துணையானது.

குறிப்பாக, இந்தியச் சமுதாய அமைப்பில் அடிமட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ள சமூகங்களைச் சேர்ந்தோர்தான் மிகப்பெருமளவுக்கு, சொந்த நிலம் இல்லாதவர்களாக, விவசாயக் கூலி வேலைகளைச் சார்ந்திருக்கிறார்கள். சமூக அடிப்படையிலும் வயல் வரப்புகளில் பல அவமதிப்புகளை எதிர்கொண்டவர்களான அவர்களுக்கு இந்தத் திட்டம் கைகொடுக்கிறது. அந்தக் கையைப் பற்றிக்கொண்டு அவர்களும் தலைநிமிர்கிறார்கள். பெரிய பண்ணையார்களின் நிலங்களில் வேலைசெய்கிறபோது, இதே போன்ற கூலியைக் கோர முடிகிறது. தொடக்கத்தில் நாளொன்றுக்கு 220 ரூபாய் என இருந்த கூலி படிப்படியாக உயர்த்தப்பட்டு, இப்போது தமிழத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திமுக அரசு 300 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. இப்படி, நியாயமான கூலிக்குக் குரலெழுப்பவும், முற்கால ஒடுக்குமுறைகளுக்கு ஒடுங்கிவிடாமல் இருக்கவும் துணிவைக் கொடுக்கிறது என்பதும் கூட பலருக்குக் கசப்பாக இருக்கிறது. இந்த சமூகவியல் நுட்பங்களை திட்ட ஒழிப்பாளர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களா?

இதனால் பயனடைகிறவர்கள் நிலமே இல்லாத விவசாயத் தொழிலாளர்களும், சிறு - குறு விவசாயிகளும் மட்டுமல்ல. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பெருமளவில் பயனடைகிறார்கள். பயனாளிகளில் 80 சதவீதத்தினர் அப்படிப்பட்ட உழைப்பாளிப் பெண்கள்தான். கணவரை இழந்த பெண்கள், குடும்பத்தின் ஆதரவு கிடைக்காத பெண்கள், உழைக்கும் திறனை இழக்காத வயதானவர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுகிறார்கள். இவர்களெல்லாம் சோம்பேறிகள்!

உண்மையிலேயே 100 நாள்தானா?

விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் மோதவிடுகிற போக்குகளைக் கடந்து, இந்த இரு தரப்பினரின் இணக்கமான செயல்பாட்டில்தான் விவசாய நலன்களைப் பாதுகாக்க முடியும். அந்தப் புரிதலோடு இயங்குகிற விவசாயிகள் சங்க, விவசாயத் தொழிலாளர் சங்க அமைப்புகள், இன்னொரு நடப்பு நிலையையும் சுட்டிக்காட்டுகின்றன. "ஒரு குடும்பத்திற்கு நூறு நாள் வேலை உறுதி என்பதுதான் திட்டம். குடும்பத்தில் குறைந்தது இரண்டு பேர் என்றாலும் ஒவ்வொருவருக்கும் 50 நாட்கள்தான் வேலை. தமிழ்நாட்டில் திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து முழுமையாக ஒருவருக்கு 100 நாள் வேலை கொடுக்கப்பட்ட வரலாறே இல்லை. அதிகபட்சமாக 57 நாட்கள்தான். விவசாயத்தில் ஓராண்டில் சராசரியாக 25 முதல் 30 நாட்கள்தான் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கிறது. மொத்தத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் சராசரியாக 25 நாட்கள், விவசாயத்தில் 30 நாட்கள் என 55 நாட்களுக்குத்தான் வேலை கிடைக்கிறது. தாராளமாகச் சொல்வதென்றால் 65 நாட்கள் என்று வைத்துக்கொள்ளலாம். ஓராண்டின் மீதி 300 நாட்கள் என்ன நிலைமை? ஆகவே, விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதும் தவறு, இந்தத் திட்டத்தால்தான் ஆட்கள் கிடைக்காமல் போய்விட்டார்கள் என்பது அதைவிடத் தவறு," என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பெ. சண்முகம்.

விவசாயம் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்கான காரணத்தை இந்தத் திட்டத்திற்குள் புகுந்து தேடுவது, உண்மைக் காரணங்களை மூடி மறைக்கிற வேலையாகிவிடும். விவசாயிகள் தங்கள் விளைச்சலுக்குரிய நியாயமான விலையைத் தாங்களே நிர்ணயிக்க முடியாத நிலைமை இப்போதும் தொடர்வது, கொள்முதல் விலை தொடர்பான வேளாண் அறிவியலாளர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை ஒன்றிய அரசு இன்னமும் முழுமையாக ஏற்க மறுப்பது, விவசாய இடுபொருள்களின் விலை உயர்வு, அவற்றுக்கான மானியங்கள் வெட்டு, விவசாயச் சந்தையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு, பல்வேறு விளைபொருள்களுக்கான சந்தையில் பன்னாட்டு நிறுவனங்கள் ஊடுறுவுவதற்கு இருந்த தடைகள் விலக்கப்பட்டது, விவசாயப் பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தாக கொள்கைகள், பாரம்பரிய வேளாண் அறிவு புறக்கணிப்பு, ஒருங்கிணைப்பற்ற திட்டங்கள் என பல உண்மைக் காரணங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் பேசாமல், உண்மையில் கைவிடப்பட்டவர்களான விவசாயத் தொழிலாளர்களை உழைக்க மறுப்பவர்களாகச் சித்தரிப்பது நழுவல் உத்தி மட்டுமல்ல, அவர்களைக் கொச்சைப்படுத்துகிற வன்மமும் கூட.

விவசாயத் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் கைவிடப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற பின்னணிகளைத் தெரிந்துகொண்டால், அவர்களுக்குக் கொஞ்சமாவது தோள்கொடுக்கிற இந்தத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும், மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் ஏற்படும். "காலப்போக்கில் நடந்துள்ள நிலக்குவியல், நடவு, களையெடுப்பு, மருந்து தெளிப்பு, அறுவடை என அனைத்து வகையான விவசாய வேலைகளுக்கும் எந்திரங்கள் புகுத்தப்பட்டது போன்ற காரணங்களால் நாடு முழுவதுமே விவசாயத் தொழிலாளர்கள் படிப்படியாக வயல்களிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். ஓராண்டில் பத்து மாதங்கள் கிடைத்துவந்த வேலை, பசுமைப்புரட்சிக் காலத்தில் ஆறு மாதங்களாகக் குறைந்தது (விளைச்சலைப் பெருக்கிய பசுமைப் புரட்சித் திட்டத்தைக் கொண்டுவந்தவரும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்தான்! அது வேறு கதை!). நவீன தொழில்நுட்பங்களோடு எந்திரங்கள் புகுத்தப்பட்டதால் இது மேலும் குறைந்து ஆண்டுக்கு மூன்று மாதங்கள்தான் வேலை என்றாகிவிட்டது. விவசாயத்திலும் நுழைந்துவிட்ட 'காண்டிராக்ட்' முறை காரணமாக எந்திரங்களைத் தாண்டி உழவுக்குப் பதினைந்து நாட்கள், அறுவடைக்குப் பதினைந்து நாட்கள் என்று வேலைவாய்ப்பு மேலும் சுருங்கிவிட்டது," என்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ. லாசர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் இவர்.

நிழலில் ஓய்வு குற்றமா?

இப்படிப்பட்ட சூழல்களில்தான் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களின் வறுமைக் கொடுமைகள், தற்கொலைக் கதைகள், ஒருசிலர் தள்ளிவிடப்பட்ட தவறான பாதைகள், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு நகரங்களை நோக்கிப் பயணங்கள் என்ற கட்டாய நிலைமைகள் உருவாகின. வழியற்றவர்கள் தங்கள் வலியை மறக்க, இந்தத் திட்டத்தின் நிழலாவது கிடைத்ததே என்று உழைப்பிற்கிடையே ஓய்வு நேரத்தில் தங்களுக்குத் தெரிந்த பல்லாங்குழி உள்ளிட்ட மனமகிழ் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். திட்டத்தை ஒழிக்க வற்புறுத்துகிறவர்கள் தங்களின் ஓய்வுப் பொழுதை தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளில் செலவிடுவது இல்லையா என்ன?

விவசாயத்தைக் காப்பதும், மக்கள் சோம்பேறியாகிவிடாமல் தடுப்பதும்தான் சுறுசுறுப்பு மிக்கவர்களின் உண்மை நோக்கமெனில், ஆண்டு முழுவதும் விவசாயம் தடையின்றி நடக்கச் செய்யும் அரசியல் கொள்கைளுக்காகவும் நாடாளுமன்றச் சட்டங்களுக்காகவும் நடைமுறைத் திட்டங்களுக்காகவும் வாதாடட்டும். ஏற்கெனவே இதையெல்லாம் வலியுறுத்தி வருகிறவர்களோடு சேர்ந்து குரல்கொடுக்க முன்வரட்டும். அந்த மாற்றங்கள் வருகிறபோது இயல்பாகவே இப்படிப்பட்ட திட்டங்களுக்குத் தேவையின்றிப் போய்விடும்.

திட்டத்தைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதை மறுப்பதற்கில்லை. முறைகேடுகள் எந்தத்துறையில்தான் இல்லை? நாடு தழுவிய, இத்தனை கோடிப் பணம் புழங்குகிற இந்தச் சிறப்பான திட்டத்திற்கு முறையான, தனியான நிர்வாக ஏற்பாடுகளைத் தொடக்கத்திலிருந்தே அன்றைய, இன்றைய ஒன்றிய அரசுகள் திட்டமிட்டு வகுக்கவில்லை என்ற காரணமும் இதன் பின்னால் இருப்பதை சமூகச் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். முறைகேடுகள் எங்கே நடந்தாலும் அதைப் பொறுப்புணர்வோடு அம்பலப்படுத்த வேண்டும். உரிய நடவடிக்கைக்கு வலியுறுத்த வேண்டும். அரசாங்கத்தின் தலையீட்டிற்கோ, தேவைப்பட்டால் நீதிமன்றத்தின் தலையீட்டிற்கோ வழி செய்ய வேண்டும். இத்தகைய அணுகுமுறைகளால் முறைகேடுகளைக் களையெடுக்க முடியும். முறைகேடுகளைக் காரணம் காட்டித் திட்டத்தையே முடக்கக் கோருவது, தோல் சிரங்குக்காக உடலை உயிரோடு புதைத்துவிட ஆலோசனை கூறுவது போலத்தான்.

ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் ஆக்கப்பூர்வமான விளைவுகளைக் காண முடிகிற அனுபவத்திலிருந்துதான் ஓராண்டில் 250 நாட்கள் வேலை என்று அறிவிக்க வேண்டும், எத்தனை நாட்கள் என முடிவு செய்யப்பட்டாலும் அத்தனை நாட்களும் வேலை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஊரக மக்களுக்குக் கிடைத்துள்ள அதே போன்ற பலன்களை நகரப் பகுதி ஏழைகளும் பெறுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்தக் கோரப்படுகிறது. தமிழக அரசு இது தொடர்பாக அறிவித்திருப்பது வரவேற்கப்பட்டுள்ள நிலையில், தேசிய நகர்ப்புற வேலை உறுதிச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற முழக்கம் நாடெங்கும் எதிரொலிக்கிறது. திட்டத்தை எதிர்ப்பவர்கள், நகரங்களிலும் மக்கள் சோம்பேறிகளாக மாறி விளையாடிக்கொண்டிருப்பார்கள் என்று கொச்சைப்படுத்தாமல், தங்களை மறுசிந்தனைக்கு உட்படுத்திக்கொள்ளட்டும். முழக்கத்தின் எதிரொலிகள் பேரதிர்வுகளாகப் பரிணமித்து அரசு எந்திரத்தை அசைய வைத்திடும் வகையில் குரலெழுப்பட்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+