For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ்நாடா? திறந்த வீடா?

By Staff
Google Oneindia Tamil News

Nedumaran
- பழ.நெடுமாறன்

(தொடர்ச்சி- பாகம்2)

... தமிழ்நாட்டில் தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்த ஸ்டாண்டர்டு கார் நிறுவனம் நலிவடைந்து: இறுதியில் மூடப்பட்டு விட்டது. அதில் வேலை பார்த்த தொழிலாளர்கள் இன்று தெருவில் நின்று திண்டாடுகிறார்கள். இந்த நிறுவனத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமல் அன்னிய கார் நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பது எந்த வகையிலும் சரியான கொள்கை ஆகாது.

அன்னிய முதலீடு தமிழ்நாட்டில் செய்யப்பட்டு தமிழக அரசின் ஏராளமான சலுகைகளைப் பெற்று தொடங்கப்படும் தொழிற்சாலைகளின் மூலம் கிடைக்கும் ஆதாயத்திலும் தமிழகத்திற்குப் பங்கு இருக்க வேண்டும். சீனா போன்ற நாடுகளில் அதைத் தான் செய்கிறார்கள். தங்களிடம் இல்லாத தொழில்நுட்ப அறிவையும் பற்றாக்குறையாக உள்ள முதலீட்டையும் போக்குவதற்கு அன்னிய முதலீடுகளை வரவழைக்க முடியாமல் இருக்க முடியாது.

ஆனால் நாட்டின் நலன்களுக்கு ஏற்ற நிபந்தனையுடன் தான் அவைகள் வரவேற்கப்பட வேண்டும். இல்லையென்றால் நமது நாட்டின் வளங்களை அன்னியர்கள் சுரண்டிச் செல்ல நாமே உடந்தையாக இருப்பது போலாகி விடும். இந்த போக்கு கண்டிக்கப்பட வேண்டிய போக்காகுமே தவிர சரித்திர சாதனை அல்ல.

தமிழ்நாட்டில் இயற்கை வளம் குவிந்து கிடக்கிறது. பழுப்பு நிலக்கரி, இரும்புத் தாது, கிராபைட், கிரானைட், ஜிப்சம், சுண்ணாம்பு சிப்பி, சுண்ணாம்புக்கல், உயர்ரக களிமண், மங்கனீசு, சிலிக்கா மணல், இயற்கை வாயு போன்றவை ஏராளமாகக் கிடைக்கின்றன. தமிழகக் காடுகளில் தேக்கு, சந்தனம், மூங்கில் போன்றவை ஏராளமாக உள்ளன. காபி, தேயிலை, ரப்பர், முந்திரி போன்ற பணப் பயிர் தோட்டங்களும் தேவைக்கு மேல் உள்ளன.

இந்த இயற்கை வளம் போக தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உண்டு. ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் நீளமுள்ள தமிழகக் கடற்கரை நெடுகிலும் பெரிய, நடுத்தர துறைமுகங்கள் உண்டு. உலக நாடுகளை இணைக்கும் வகையில் விமான நிலையங்களும் உண்டு. நெடுஞ்சாலைக் கட்டமைப்பும் அகல ரயில் பாதை கட்டமைப்பும் தமிழகத்தில் சிறப்பாக அமைந்துள்ளன.

தமிழ்நாடு தொழில் கல்வியில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளது. தொழில் பல்கலைக் கழகமான அண்ணா பல்கலைக்கழகமும் அதன் கீழ் நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளும் தொழில் பள்ளிகளும் அமைந்து இவற்றில் கற்றுத் தேறிய மாணவர்கள் ஏராளமாக ஆண்டுதோறும் வெளிவந்த வண்ணம் உள்ளனர். தொழில்நுட்ப அறிவு படைத்த இந்த மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு மிகவும் தேவையானவர்கள்.

தமிழக மக்களின் உழைக்கும் திறன் உலகம் அறிந்ததாகும். கடந்த இரு நூற்றாண்டுகளில் இலங்கை, பர்மா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ரப்பர் தேயிலை போன்ற பணப் பயிர்த் தோட்டங்களை அமைப்பதற்கு தமிழ்நாட்டுத் தொழிலாளர்களை அன்னிய ஏகாதிபத்தியம் அழைத்துச் சென்று அவர்களின் சலியாத உழைப்பைச் சுரண்டிக் கொழுத்தது என்பது வரலாற்றுபூர்வமான உண்மையாகும்.

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்குரிய சாதகமான சூழ்நிலைகளும் இயற்கை வளமும் தமிழர்களின் உழைப்புத் திறனும் அபரிமிதமாக உள்ளன. ஆனால் இவற்றை அன்னியர்கள் சுரண்டிக் கொழுப்பதற்கு வழி வகுப்பதை விட துரோகம் வேறு இருக்க முடியாது. தமிழ்நாட்டின் வளத்தை-தமிழர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுக்குத் தமிழக அரசே முன்னின்று கதவைத் திறந்து விட்டுள்ளது.

இத்தகைய செயல் வரலாற்று சாதனை அல்ல. தமிழகத்திற்குத் தீராத வேதனையைத் தரும் செயலாகும். அன்னிய நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்க முற்படும் போது தமிழர்களின் தொழில் நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து நடத்த வேண்டும்-அப்போது தான் அனுமதியை வழங்க முடியும் எனச் சொல்லியிருக்க வேண்டும்.

அல்லது தமிழக அரசுடன் கூட்டு சேர்ந்து இந்த தொழிற்சாலைகளைத் தொடங்கியிருக்க வேண்டும். இவற்றில் எதையுமே செய்யாமல் அன்னிய நிறுவனங்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பது என்பது எதிர்காலத்தில் நமக்கு அழிவைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

காமராஜர் ஆட்சியின் போது பன்னாட்டு நிறுவனமான லேலண்டு நிறுவனத்துடன் முருகப்பா நிறுவனம் கூட்டாக அசோக் லேலண்டு என்ற பெயரில் நடுத்தர, கனரக டீசல் இன்ஜின் வாகனங்களையும், படகு இன்ஜின் களையும் செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கியது.

அதே போல ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுண்டாப் வெர்கிம் என்ற நிறுவனத்துடன் தமிழ்நாட்டு தொழிலதிபரான எஸ்.விசுவநாதன் கூட்டு சேர்ந்து என்பீல்டு இந்தியா என்ற பெயரில் தொடங்கிய தொழிற்சாலையில் மோட்டார் சைக்கிள்கள், மொபட்டுகள் உற்பத்தி தொடங்கப்பட்டது. இது போல ஏராளமான தொழிற்சாலைகளை அன்னிய கூட்டுறவுடன் தமிழ்நாட்டு தொழிலதிபர்கள் தொடங்க வழி செய்யப்பட்டதே தவிர எந்த அன்னிய நிறுவனமும் ஏகபோகமாக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அனுமதிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் ஏராளமான நூற்பாலைகள் நலிவடைந்து மூடப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வாடுகிறார்கள். கைத்தறி நெசவாளர்களுக்கு நியாய விலையில் நூல் வழங்கப்படுவதற்காக காமராஜர் ஆட்சியின் போது கூட்டுறவுத் துறையில் 8 நூற்பாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் அவை யாவும் ஒன்றன்பின் ஒன்றாக இப்போது மூடப்பட்டு விட்டன. இதன் விளைவாக நூல் விலையேற்றம் ஏற்பட்டு கைத்தறி நெசவாளர்கள் தவிக்கிறார்கள்.

ஈரோடு, கரூர் போன்ற பல ஊர்களில் நெசவாளர்களும் மற்றும் துணி உற்பத்தியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டாலர் மதிப்பு வீழ்ச்சியின் விளைவாக திருப்பூர் பனியன் தொழில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. ஏராளமான சிறுதொழில்கள் பல்வேறு காரணங்களினால் இயங்க முடியாதபடி மூடப்பட்டு விட்டன. இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கான திட்டமோ செயல்பாடோ தமிழக அரசிடம் இல்லை.

ஒரு கிழக்கிந்திய கம்பெனி தமிழ்நாட்டில் காலை ஊன்றுவதற்கு அன்று ஆட்சி நடத்திய ஆற்காடு நவாப் அனுமதித்தார். தங்களின் வணிகப் பொருட்களை வைத்துக் கொள்வதற்கு சிறிய கோட்டை ஒன்றைச் சென்னையில் ஆங்கிலேயர்கள் கட்டிக் கொண்டார்கள். அங்கிருந்து தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டையும் இந்தியா முழுமையுமே தங்கள் வசப்படுத்திக் கொண்டு 200 ஆண்டு காலத்திற்கு மேல் ஆண்டார்கள். வணிகத்திற்காகக் கட்டப்பட்ட ஜார்ஜ் கோட்டை பின்னாளில் ஏகாதிபத்திய அரசின் ஆதிக்கக் கோட்டையாக மாறியது.

ஒரு கிழக்கிந்தியக் கம்பெனியை நமது மண்ணில் அனுமதித்த தவற்றிற்காக மண்ணையும் நாம் இழந்தோம். அடிமைகளாகவும் ஆனோம். ஒரு 100 ஆண்டு காலம் போராடி அதற்குப் பின் மண்ணை மீட்க வேண்டி நேரிட்டது. ஆனால் இன்று பல அன்னிய பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதன் விளைவாக நமது பொருளாதார சுதந்திரம் பறிபோவதோடு நிற்காது. அரசியல் சுதந்திரமும் பறி போய்விடும் என்பதில் சந்தேகமில்லை.

70,000 கோடிக்கு அன்னிய முதலீட்டை வரவழைத்திருப்பது சரித்திர சாதனை என்று கூறுவது பொருளாதார அடிப்படையே புரியாதவர்களின் பேச்சு. கட்டுப்பாடற்ற அன்னிய முதலீடு என்பது நாட்டை இவர்களிடம் அடகு வைப்பதற்குச் சமமாகி விடும்.

அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு முன்னால் தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து இதன் விளைவாக தமிழகத் தொழில்கள் எந்த அளவுக்கு வளம் பெறும் அல்லது நலிவடையும் என்பதை அறிந்து முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் தி.மு.க. அரசு அவ்வாறு செய்து இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, வகைதொகை இல்லாத வகையில் அன்னிய முதலீடுகளை வரவேற்பது பின்னர் பேரழிவிற்கு வழி வகுத்து விடும் என்பதில் ஐயமில்லை.

"தமிழ்நாட்டின் வாயில்கதவுகளை அன்னியருக்கு அ.தி.மு.க. அரசு ஓரளவே திறந்து விட்டது. ஆனால் நாங்கள் தான் முழுமையாகத் திறந்து விட்டோம்" என தி.மு.க. மார்தட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.

தமிழ்நாடா? திறந்த வீடா? <font face=பாகம்-1" title="தமிழ்நாடா? திறந்த வீடா? பாகம்-1" />தமிழ்நாடா? திறந்த வீடா? பாகம்-1

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X