For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாவலர் பெருஞ்சித்திரனார் நூல்கள் நாட்டுடமை: கருணாநிதி உறுதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பாவலர் பெருஞ்சித்திரனாரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உவமைக் கவிஞர் சுரதாவுக்கு சென்னையில் வெண்கலத்தால் ஆன முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை அசோக் நகரில் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார்.

நிழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், நானும் சுரதாவும் 1942-43-ம் ஆண்டுகளில் இருந்து நண்பர்கள். திருவாரூருக்கு பக்கத்தில் சிக்கல் என்ற ஊருக்கு அருகில் பிறந்தவர் சுரதா. அப்போது அவருடைய பெயர் ராஜகோபாலன். ராஜகோபாலன்தான் சுரதாவாக மாறினார். அந்தச் சுரதா என்னுடைய திருமணத்திற்கு எழுதி அச்சடித்து, சிக்கல் என்கிற கிராமத்தில் இருந்து நடந்தே வந்து, திருவாரூரில் மணவிழா மேடையில் வாசித்தளித்த அந்த வாழ்த்துப் பத்திரத்தினுடைய ஓரிரு வாசகங்களை இங்கே கவிஞர் ராஜேஸ்வரி வாசித்துக் காட்டினார்.

உருக்குலையா மங்கை ஒளி முகத்தை முத்தமிட, கருக்கலிலே கண் விழிக்கும் திருக்குவளை - இவ்வளவு அழகான, செழுமையான, வளமான சொற்களைக் கொண்டு தமிழ் வரிகள் இரண்டை அன்றைக்கு வாழ்த்துப் பாடலாகத் தொடங்கிய சுரதாவை அந்த விழாவிற்கு வந்த அத்தனை பேரும் நிமிர்ந்து பார்க்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியது.

அவருடைய பெயர் அமைந்ததிலேயே ஒரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஒளிவிடுகிறார். எந்தப் பாரதிதாசன்? கிளம்பிற்றுக் காண தமிழ் சிங்கக் கூட்டம், கிழித்தெறிய தேடுது காண் பகைக் கூட்டத்தை; வளம் பெரிய தமிழ்நாட்டில் தமிழரல்லார் வால் நீட்டினால், இனி உதை தான் கிடைத்திடும் காண் என்று பாடிய பாரதிதாசன்.

அந்தப் பாரதிதாசனின் மாணவனாக சுரதா அமைந்தார். அந்தப் பாரதிதாசனுடைய அடியொற்றி கவிதைகளை இயற்றினார்.

எப்படி பாரதியாருக்கு தாசன் நான் என்று கனகசுப்புரத்தினம் என்ற அந்தக் கவிஞர்-பாரதிதாசனாக தன்னை மாற்றிக் கொண்டாரோ, அதைப் போல அவருடைய உண்மையான சீடர், சுரதா என்பதற்கேற்ப கனகசுப்புரத்தினத்திற்கு நான் தாசன் சுப்பு ரத்தின தாசன் - அதன் சுருக்கம் சு ர தா என்றாகி நம்மிடையே உலவினார். அவர் எழுதிய பாடல்களை, அவர் எழுதிய திரையுலக இசைப்பாடல்களை இங்கே பேசிய நம்முடைய புலவர் மாமணிகள் எல்லாம் எடுத்துக் காட்டினார்கள்.

அவரோடு பழகியன் என்ற முறையில், எவ்வளவு எளிமையானவர், எவ்வளவு இனிமையானவர் என்பதையெல்லாம் நான் மிகத் தெளிவாக அறிவேன்.

இங்கே நான் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு வீட்டிலிருந்து திருமாவளவனிடம் பேசும்போது, இடி இடிக்கிறதே, மழை பொழியுமா என்று கேட்டேன். அப்போது அவர் பெரிய இடி அல்ல, மேகக்கூட்டம், அவ்வளவுதான். அதனால் வாருங்கள், தைரியமாக வாருங்கள் என்றார்.

இடி, மழை, மின்னல், சூறாவளி, புயல் இவைகள் எல்லாம் பொதுவாழ்விலே ஈடுபடுகின்றவர்களுக்கு இயல்பாக அவர்கள் சந்திக்க வேண்டிய இயற்கையின் எதிர்ப்புகள். இயற்கையின் எதிர்ப்புகளைவிட, செயற்கை எதிர்ப்புகளையும் அவர்கள் சமாளிக்க வேண்டியவை, சந்திக்க வேண்டியவை. அதை நானும் அறிவேன். அனுபவரீதியாக திருமாவும் அறிவார்.

இருவரும் அதை அறிந்திருக்கின்ற காரணத்தினால்தான், மழை வராது, நீங்கள் வந்தால் நின்றுவிடும் என்று சொன்னார். சில மகானுபாவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருந்தாலே மழை பொழியாது. வந்தாலே மழை பொழியாது. ஆனால் நாங்கள் மழை வர வேண்டும் என்று எண்ணுகின்ற நேரத்தில், விரும்புகின்ற நேரத்தில் மழை பெய்யும். அப்படி பெய்கின்ற காரணத்தினால்தான் இன்றைக்கு நாடு, தமிழ்நாடு வளமாக இருக்கின்றது.

இன்றைக்கும் நான் சாகின்ற வரையிலே மறக்க முடியாத ஒரு செய்தி. வள்ளுவர் கோட்டத்தை எழுப்பியது நான்தான் என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். அதனுடைய திறப்பு விழாவிற்கு தேதி தந்து, இன்னமும் ஏழு நாளில் திறப்பு விழா நடைபெறப் போகிறது என்ற நேரத்தில் என் தலைமையிலே இருந்த தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதுவும் உங்களுக்குத் தெரியும்.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, அன்றைக்கு இருந்த ஜனாதிபதியைக் கொண்டு வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. அப்படி திறக்கப்பட்டபோது, நெருக்கடி நிலை நாட்டில் பிரகடனப்பட்டு இருந்தது. வள்ளுவர் கோட்டத்தை ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்து கட்டியன் நான். அமைத்தவன் நான். கணபதி ஸ்பதியார் என்கிற தலைசிறந்த ஒரு சிற்பியை அவருடைய சீடர்களை வைத்து வள்ளுவர் கோட்டத்தை அளந்து அளந்து கட்டி முடித்தோம். ஆனால், அந்தத் திறப்பு விழாவிற்கு நான் அழைக்கப்படவில்லை. என்னைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அழைக்கப்பட்டார்கள்.

அப்படி ஒரு நிலை அன்றைக்கு. அதனால்தான் அதற்கு நெருக்கடி நிலை என்றே பெயர். அந்த நேரத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் நம்முடைய நிழல்கூட படக்கூடாது என்று எண்ணுகின்ற மிகச்சிறந்த நண்பர்கள் சில பேர், தமிழறிஞர்கள் அந்த மேடையிலே பேசும்போது, என்னைத் தாக்கிப் பேசினார்கள். ஒருவேளை வள்ளுவர் கோட்டத்தைக் கட்டியதற்காக தாக்கிப் பேசியிருக்கக்கூடும்.

அப்படி பேசிய நேரத்திலே ஒரு குரல் பேசாதே என்று சொல்லிக் கொண்டே மேடைக்குச் சென்று பேசியவருடைய வாயை அடைத்தது. அந்தக் குரல்தான் என்னுடைய தோழர், சுரதாவிற்கு சொந்தமான குரல். இதை நான் மறக்க முடியுமா? வாழ்நாள் முடிகின்ற வரையிலே மறக்க முடியாத ஒரு சம்பவம் அல்லவா?

திருமாவளவன் பேசும்போது, பெருஞ்சித்திரனாருடைய புத்தகங்களை நாட்டுடமை ஆக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவருடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்பதை அறிவிக்கிறேன் என்றார் கருணாநிதி.

விழாவுக்கு தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், இளைய கம்பன், ராஜேஸ்வரி கல்லாடன் ஆகியோர் கவிதாஞ்சலி பாடினார்கள். தொழிலதிபர் நல்லி குப்புசாமி வாழ்த்துரை வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X