For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உக்கல் கோயிலின் ராசராச சோழன் காலத்துக் கல்வெட்டு

By Chakra
Google Oneindia Tamil News

Rajaraja Chozhan period Stone inscriptions in Ukkal temple
- முனைவர் மு. இளங்கோவன்

திருவண்ணாமலை மாவட்டம்,செய்யாறு வட்டத்தில் உக்கல் என்னும் ஊர் உள்ளது. இந்த ஊரை அடைவதற்கு வந்தவாசி-காஞ்சி நெடுஞ்சாலையில் கூழமந்தல் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் (கூழமந்தல் என்பது பண்டைக்காலத்தில் சோழமண்டலம் என்னும் பெயர் உடைய ஊராகும். இதனை ஆங்கிலத்தில் chozhamandalam என்று எழுதினர். இதனை ஒலிக்கத் தெரியாத ஆங்கிலேயர் கூழமந்தல் என்றனர். தமிழறியாத அவர்கள் வாயில் கூழமந்தல் என்று வர அன்றுமுதல் இவ்வூர் கூழமந்தலானது. இவ்வூரில் அழகிய சிவன் கோயில் உள்ளது. சோழர்காலத்துக் கட்டடக்கலைக்குச் சான்றாக உள்ள இந்தக் கோயில் கலையுணர்வுடன் உருவாக்கப்பட்டுள்ளது).

காஞ்சிபுரத்திற்குத் தெற்கே 18 கி.மீ. இல் இந்த ஊர் உள்ளது. அருகில் மாமண்டூர் ஏரி வரலாற்றுச் சிறப்பு மிக்கது (7.கி.மீட்டரில்). உக்கல் ஊரின் சிறப்புகளுள் ஒன்று பெருமாள் கோயில் இங்குக் கட்டப்பட்டுள்ளது. சோழர் காலத்துக் கோயில் என்பதும், அரிய கல்வெட்டுகள் உள்ளதும் குறிப்பிடத்தகுந்த செய்திகளாகும்.

கூழமந்தலிலிருந்து உக்கல் 3 கி.மீ.நடந்தும், பகிர்வுத்தானியிலும் செல்லலாம். காலையிலும் மாலையிலும் பேருந்துகள் செல்லும். 1000 குடும்பம் இந்த ஊரில் இருக்கும். 5000 பேர் அளவில் வாழ்கின்றனர். அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அடிப்படை வசதிகளை எதிர் நோக்கிக் காத்திருக்கும் இந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இவ்வூரின் கோயிலும் கல்வெட்டுகளும் பாதுகாக்கப்படாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன. அரசும்,பொதுமக்களும் இணைந்து இக்கோயிலைப் புதுப்பிக்க வேண்டும். தொல்பொருள் துறையினர் கட்டுப்பாட்டில் இக்கோயில் இருப்பின் நல்லது.

உக்கல் பெருமாள் கோயிலில் முன்பு புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இன்று முறையான வழிபாடு இல்லாமலும் பராமரிப்பு இல்லாமலும் உள்ளது.

உக்கல் என்ற ஊரில் உள்ள பெருமாள் கோயிலின் மேற்குப் புறச்சுவரில் உள்ள கல்வெட்டு இராசராசன் காலத்து கல்வெட்டாகும்.இது தமிழும் கிரந்தமும் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கி.பி 1014 இல் வெட்டப்பட்ட கல்வெட்டாகும் இது. இராசராசனின் வெற்றிச்சிறப்பைக் கூறும் கல்வெட்டு இதுவாகும்.

மெய்க்கீர்த்தியால் அறியப்படும் செய்திகள்.

காந்தளூர்ச்சாலையிலுள்ள கலங்களை அறுத்தருளினான். வேங்கைநாடு, நுளம்பபாடி, தடிகைபாடி, குடமலை நாடு, கொல்லம்,க லிங்கம், ஈழமண்டலம், இரட்டபாடி, பழந்தீவு இவைகளை இராசராசன் வென்றான் என்று செய்திகள் புலனாகின்றன.

கல்வெட்டால் அறியப்படும் செய்தி

இராசராச சோழனது பணிமகனும், நித்த விநோத வளநாட்டிலுள்ள ஆவூர்க் கூற்றத்து ஆவூரைத் தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டவனுமாகிய கண்ணன் ஆரூரன்,தன் அரசன் பெயரால் சயங்கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துத் தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்தின் மேலைப் பெருவழியில் ஒரு கிணற்றை அமைப்பித்து அதற்கு நிவந்தம் அளித்துள்ளான்.

நிவந்தத்தின் வகை

இராசராசன் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீர் இறைப்பார்க்கு அருண்மொழித் தேவன் மரக்காலால் நாள் ஒன்றுக்கு நெல் இரு குறுணி ஆகத் திங்கள் ஆறுக்கு நெல் முப்பது கலமும், இராச ராசன் பெயரால் தண்ணீர் வார்ப்பார்க்கு நாடோறும் நெல் இரு குறுணியாகத் திங்கள் ஆறுக்கு முப்பது கலமும், இப்பந்தலுக்கு மட்கலம் இடுவார்க்குத் திங்கள் ஒன்றுக்கு நெல் இரு தூணியாகத் திங்கள் ஆறுக்கு நெல் நான்கு கலமும், இராச ராசன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம் ஏற்பட்டால் அவைகளைப் புதுப்பிக்க ஆண்டு தோறும் இருகலனே இரு தூணி நெல்லும் ஆக 66 கலம் எட்டு மரக்கால் நெல் விளையக் கூடிய நிலத்தின் விலைக்குரிய பணத்தையும், அதற்கு வரிக்கு உரிய பணத்தையும் தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார், கண்ணன் ஆரூரனிடம் பெற்றுக்கொண்டு வரி இல்லாமல் (நிலத்தை விற்றுக்கொடுத்து அத்தர்மத்தை நடத்துவதாக இசைந்தனர்)

கல்வெட்டில் அரிய செய்திகள்

இராசராசக் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீரிறைப்பார் முதலான பலபணியாளர்களுக்கு ஓர் ஆண்டில் ஆறு மாதங்களுக்குத்தான் கூலிகள் கொடுக்கப்பட்டு வந்தன. தண்ணீர்ப் பந்தல் இக்காலம்போல் அல்லாமல் பண்டைக் காலத்தில் ஆறு மாத காலம் நடத்தப்பெற்று வந்தது என்பது புலனாகின்றது. இக்கல்வெட்டில் வந்துள்ள பெருவழி, பணிமகன்,புதுக்கு என்னும் சொற்கள் தூய தமிழ்ச்சொற்களாகும்.

(கல்வெட்டின் தட்டச்சு வடிவம்)

1. ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள் பொல் பெருநிலச் செ(ல்வி) யுந் தனகெ உரிமை பூண்டமை மனக்கொளக் கா(ந்த) ளூர்ச்சா(லைக)ல (மறுத்த(ரு)ளி (வெக) நாடும் கங்க (பா)டி(யும்) நுளம்ப பாடியு(ந்த)டி(¬)க ப(£) -

2.டியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டொழில் சிங்களர் ஈழ (ம)ண்டலமும் (இ)ரட்ட(பா)டி ஏழரை இலக்கமும் முன்(னீ)ர்ப்ப(ழ)ந்(தீவு) பன்(னீ)ராயிர(மும் திண்டி)றல் வெ(ன்)றித் தண்டாற்-

3.கொண்ட தன்னெழில் வளருழியு ளெல்லாய(£)ண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டெ செழியரை(த்ª)தசுகொள் ஸ்ரீ கொ ராஜ கெஸரி வந்மரான ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்-

4.டு,உயக ஆவது ஜயங் கொண்ட சோள மண்டல(த்)துக் காலியூர்க் கொடத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீ விக்கிரமா பரணச் சதுவெதி மங்கலத் தின் மெலை-

5.ப் பெருவழியில் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் திரு(ந)£மத்தால்க் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான் உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் பணிமகன் சௌ (ம)ண்டலத்து ª(த)ன்க¬(ர) நா(ட்)டு நித்த-

6.வினோ(த) வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து (ஆ)வூருடையான் கண்ணனாரூரன்,இவனெ ஸ்ரீ ராஜ ராஜ கி(ணற்)றில் (த் தொட்டிக்கு நீரிறை(ப்)பதார்க்கு அருமொழி தெவன் மரக்கா(ல)£ல் நிசதம் (நெ)ல் ஜுங (ஆ)

7.கத் திங்கள் ச க்கு நெல் ஜ ங ய(கள)மும் ஸ்ரீ ராஜ ராஜன் தண்ணீரட்டுவார்க்கு நிசத(ம்) நெல் ஜ (உங) ஆக திஙள் ச க்கு நெல்லு ஙய (கள)ம் இப் பந்தலுக்கு குசக் கலம் இ (டு)

8.வ(£)ர்க்கு திங்கள் க க்கு நெல்லு வத ஆக திங்கள் ச க்கு நெல்லு (சகள)மும் ஸ்ரீ ராஜ ராஜன் கிணற்(று)க்கு(ம் ª(த)£ட்டிக்(கு)ம் ª(ச)த்தத்துக்கும் ஆட்டாண்டு தொறு(ம் பு(து)க்குப் புறமாக (¬)வச்ச

9.நெல்லு உ கள வத ஆக ஜ ச ய ச(கள)வத இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸ(பை (யம் இ)¬(ற திர) விய(மு)ம் (கிரய திர) விய (மு)ம் கொண்டு இறை இழிய்ச்சி -

(அளவைக்குறிகளை என்னால் தமிழ் எண்களால் சரியாகக் குறிக்க இயலவில்லை. மேலும் தட்டச்சிட்டவற்றை ஒருங்கு குறிக்கு மாற்றிய பொழுது எழுத்துருக்கள் உடைகின்றன( கால், ஒற்றைக்கொம்பு, இரட்டைக் கொம்பு) அறிஞர் உலகம் மூல நூலைக் கண்டு உறுதிசெய்ய வேண்டுவன்)

(இக்கட்டுரைப் பகுதிகள், படம் ஆகியவற்றை எடுத்தாள விரும்புவோர் இத்தளத்திலிருந்து எடுக்கப் பெற்றது என அற உணர்வுடன் குறித்தல் நன்று. பலரும் இன்னவண்ணம் சுட்டாமல் கள்வர்போலும் கவர்தலால் இக்குறிப்பு.)

நன்றி:

1. 30 கல்வெட்டுக்கள்,வித்துவான் வை.சுந்தரேச வாண்டையார்,பழனியப்பா பிரதர்சு வெளியீடு.

2. திருவாளர்கள் கூழமந்தல் உதயகுமார், உக்கல் மோகனவேல்

நன்றி: http://muelangovan.blogspot.com/

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X