For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முருகனின் 4ம் படை வீடு சுவாமி மலை

Google Oneindia Tamil News

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவத திருவேரகம் எனப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கிறார்

தல வரலாறு

பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத காரணத்தினால் பிரம்மாவை சிறையில் அடைத்தான் முருகப்பெருமான்.

ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமானே, சிஷ்யனாக அமர்ந்து பிரணவத்தின் பொருளை முருகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் என்கின்றன புராணங்கள். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலைஎன்று பெயர் பெற்றுள்ளது.

கோயில் அமைப்பு

சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.

மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.

மூலவர்

இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

தல விருட்சம்

நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

விழாக்கள்

- இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.

- வைகாசி விசாகப் பெருவிழா கொண்டாடப்படுகிறது.

- ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம் இங்கு நடைபெறுகிறது.

- புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

- மேலும் முருகனுக்குரிய விழாக்களான, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
சிறப்புக்கள்

- அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாகச் சூட்டியுள்ளார்.

- சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது.

- சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

எப்படி செல்வது

தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு இந்த இரு ஊர்களிலிருந்தும் நகரப்பேருந்து வசதி உள்ளது.

English summary
Swamimalai is fourth among the six padai veedu or sacred shrines dedicated to Lord Muruga. The presiding deity here expounded the meaning of the Pranava mantra OM to his own Father Lord Siva Himself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X