Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலிங்கம் காண்போம் - பகுதி 69 - பரவசமூட்டும் பயணத்தொடர்

Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

சந்து பொந்தெல்லாம் புகுந்து சென்ற தானிழுனி கட்டாக்கின் இன்னொரு முகத்தைக் காண்பித்தது. ஒரு வரலாற்று நகரம் அதன் தொன்மையால் அழுத்தப்பட்டு அப்படியே கிடக்கிறது. வங்காளத் தன்மையுடைய நகரத்துப் பழைமையைக் கட்டாக்கில் பார்க்கிறோம். வரலாறு தோன்றியது முதற்று இயங்கிய நகரங்கள் இன்றைக்கும் அந்தப் பழைய முகத்தை மாற்றிக்கொள்ளாமல் அதே சுருக்கங்களோடு காணப்படுகின்றன. குறுகிய தெருக்களும் அத்தெருக்களின் பழைமைக் களிம்பேறிய கட்டடங்களும் மூத்த குடும்பங்களுமாக அந்நகரத்தின் தோற்றத்தை ஒற்றைச் சொடுக்கில் மாற்றிவிட முடியுமா, என்ன ?

Travel Series about exploring odissa, kalingam- part 69

இடம்பெயர்ந்துகொண்டே இருக்கும் மனிதர்க்கு வேண்டுமானால் ஓரிடத்தின்மீது பற்றில்லாது போகலாம். ஆனால், தலைமுறை தலைமுறையாக ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தோர்க்கு எந்த நிரலையும் கலைத்துப்போடுவதற்கு விருப்பம் தோன்றாது. மூத்தோர் விட்டுச் சென்ற சுவடுகளைக் காத்து வாழ்வதையே விரும்புவர். கட்டாக் நகரத்தின் பழைமைச் செம்மையைப் பார்க்கையில் அப்படித்தான் தோன்றியது.

Travel Series about exploring odissa, kalingam- part 69

நெரிசல் சாலைகள் சிலவற்றைக் கடந்து உள்ளே செல்லும்போது நெரிசலின் அடர்த்தி கூடிக்கொண்டே போனது. படிக்கட்டில் கூட்டம் தொற்றுமளவுக்கு நிற்க இடமில்லாதவாறு பயணிகளை ஏற்றிக்கொண்ட பேருந்துகள் எதிர்ப்படத் தொடங்கின. தெரிந்து போயிற்று, கட்டாக்கின் பேருந்து நிலையத்திற்கு அருகில் வந்துவிட்டோம். மாநிலத்தின் மிகப்பெரிய நகரத்தின் பேருந்து நிலையம் என்பதால் நூற்றுக்கணக்கான பேருந்துகள் நிற்குமளவுக்கு விரிந்து பரவியிருக்கும் என்று கற்பனை செய்திருந்தேன். மடித்து மடித்துத் திரும்பிய தானிழுனியார் முடைநீர்ச் சந்து போன்ற ஒன்றின் வாயில்முன்னம் வண்டியை நிறுத்தினார். அதுதான் பேருந்து நிலையமாம். தானிழுனியார்க்குத் தரவேண்டியதைத் தந்துவிட்டு நிலையத்திற்குள் நுழைந்தோம்.

Travel Series about exploring odissa, kalingam- part 69

தமிழ்நாட்டில் நூற்றுக்கு அருகிலான எண்ணிக்கையில் பேருந்து நிலையங்களைப் பார்த்திருக்கிறேன். ஏறத்தாழ எல்லா மாவட்டத் தலைநகரங்களின் பேருந்து நிலையங்களிலும் இறங்கி ஏறிவிட்டேன் என்று நினைக்கிறேன். சிறுவத்தில் என்னை வியக்க வைத்த பேருந்து நிலையங்களில் ஒன்று ஈரோட்டுப் பேருந்து நிலையம்தான். எண்பதுகளிலேயே நல்ல பரப்பில் எடுத்துக்கட்டப்பட்ட பேருந்து நிலையம் அது. கோவைப் பேருந்து நிலையம்கூட பெரிதுதான். சேலத்தின் பழைய பேருந்து நிலையத்தின் நெரிசல் புதிய பேருந்து நிலையத்தால் நீங்கியது. சென்னையின் கோயம்பேட்டு நிலையமும் பெங்களூரு நிலையங்களும் பேருந்துகளின் பெருங்களம். நான் பார்த்தவற்றில் ஊர்ப்புறத் தன்மையோடு விளங்கிய அமைதியான பேருந்து நிலையம் அரியலூர் நிலையம்தான். தென்னிந்திய மாநிலங்களில் கேரளத்தில்கூட தமிழ்நாட்டுப் பேருந்து நிலையங்களின் அளவுக்கு இல்லை என்று கூறலாம். நம் மாநிலத்தில் பேருந்துகளும் மிகுதி. அதனால் பேருந்து நிலையங்களும் மிகுதி. தமிழ்நாட்டினைப் “போக்குவரத்துப் பொன்னிலம்” என்று புகழ்ந்து கூறவேண்டும்.

Travel Series about exploring odissa, kalingam- part 69

கட்டாக் பேருந்து நிலையத்தைப் பார்த்ததும் என் ஊக்கமனைத்தும் வற்றிவிட்டது. பேருந்து நிலையமெங்கும் குப்பைகளாக இறைந்து கிடந்தன. எச்சில் உமிழ்ந்து உமிழ்ந்து தரையே காய்ப்பேறியிருந்தது. நிலையத்தைச் சுற்றிலும் இருந்த கட்டடங்கள் நிறப்பூச்சு காணாமல் மங்கி நின்றன. நிலையத்தின் விளிம்புச் சுவரை ஒட்டிப் பிரித்தவாறுதான் நடந்து செல்ல வேண்டும். அந்தச் சுவர் நெடுகவும் சிறுநீர் பெய்து ஊற வைத்திருந்தனர். சிறுநீர்க்காரநெடி நம் மூக்கைத் துளைத்தது. நம்முன்னே நடந்து செல்பவன் படக்கென்று நின்று சிறுநீர் கழிக்கத் தொடங்கிவிடுகிறான். தன்னைச் சுற்றிலும் பலரும் நிற்கிறார்கள் என்ற கூச்சமே அவனுக்கு இல்லை. ஆண்களின் இத்தகைய பண்புக்கேடான செயல்களுக்கு அஞ்சியே பெண்கள் விறுவிறுவென்று நடந்து போய்விடுகின்றனர்.

Travel Series about exploring odissa, kalingam- part 69

நிலையத்தின் உள்நின்ற பேருந்துகள் ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டதைப்போல் நின்றன. அந்நிலையிலும் அவை உரசிக்கொள்ளாமல் நின்றதை எண்ணி வியக்கலாம். பேருந்து நிலையத்தின் கடைகளில் பழங்கள், பொட்டணத் தின்பண்டங்கள், பழச்சாறுகள் ஆகியவை கிடைத்தன. தள்ளுவண்டிப் பண்டங்களும் விற்கப்பட்டன. கீற்றுக்கூரை வேய்ந்திருந்த தேநீர்க் கடையொன்றில் தேநீர் பருகினோம். அவ்விடத்தில் நாமும் அப்படித்தானே வாழ்ந்தாக வேண்டும் ! எந்தப் பேருந்து புவனேசுவரம் செல்லும் என்று கடைக்காரரைக் கேட்டதற்கு எதிர்ச்சாரையைக் காட்டினார். புவனேசுவரத்திற்கு ஐந்து மணித்துளிகளுக்கு ஒரு வண்டி கிடைக்கிறது. ஓட்டுநர் உறுமிக்கொண்டிருந்த பேருந்தில் ஏறி இடம்பிடித்து அமர்ந்தோம். நிலையத்தை விட்டு வெளியே வந்த பேருந்து கூட்டம் நெரியும் சாலையில் ஊர்ந்து நகர்ந்தது.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64 , 65 , 66, 67, 68]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+