கலிங்கம் காண்போம் - பகுதி 58 - பரவசமூட்டும் பயணத்தொடர்
- கவிஞர் மகுடேசுவரன்
காரவேலன் கல்வெட்டு எழுதப்பட்ட ஹாத்தி கும்பாக் குகையின் நிழற்குளிர்ச்சியில் மனம் சொக்கியது. குகைக்குள் திண்ணைக்கற்கள் இருந்தன. அவற்றிலொன்றில் படுத்துக்கொண்டேன். நாம் வந்திருக்கும் இடத்தின் வரலாற்றுக் காலத்திற்குச் செல்ல முடிந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும் ! நூற்றுக்கணக்கான சமணமுனிகள் தவமியற்றியும் அறம்புகட்டியும் வாழ்ந்த இவ்விடத்தில் நாமும் ஓர் அடியாராகி அருள்வாழ்வைப் பெற்றிருப்போமே. கானகம் செழித்திருந்த இந்நிலத்தில் காட்டு வேடனாய் அவர்களைத் தொழுது வணங்கியிருப்போமே. எண்ணங்கள் அலைபாய்ந்தன.

வெளிக்காற்று குகைக்குள் நுழைந்து திரும்ப வழியின்றித் தவித்தது. குகைக்கு எதிரே இருந்த பெருவாயிலில் குழந்தைகள் ஓடுவதும் விளையாடுவதுமாய் இருந்தன. குரங்குகளுக்குப் போடுவதற்கென்றே அவ்விடத்தில் வாழைப்பழங்களை விற்றார்கள். சுற்றுலா வந்தவர்கள் அப்பழங்களை வாங்கி குரங்குகளுக்கு வீசினார்கள். எல்லாப் பழங்களையும் அவை உண்ணவில்லை. தமக்குப் பிடித்த பழங்களைத் தேர்ந்தெடுத்துத் தின்றன. குழந்தைகள் குரங்குகள் இளந்தாய்மார்கள் என்று அவ்விடமே உயிர்ப்பேறி அன்பில் ததும்பி நின்றது.
குகை நிழலிலும் குளிர்காற்றிலும் என்னை இளைப்பாற்றிக்கொண்டது போதுமானதாக இருந்தது. எழுந்து நடந்தேன். குகையின் நெற்றியில் கல்வெட்டு இருப்பதால் அது உடைந்து சரிந்துவிடக்கூடாது என்பதற்காகத் தூணமைத்து தாங்கல் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தூண்பகுதியானது குகைக்கு நுழைமுற்றம்போல் அமைந்துவிட்டது. குகையை மீண்டும் நன்கு பார்த்துவிட்டு இறங்கத் தொடங்கினேன். இறங்கும் வழியிலும் சில குகைகள் இருக்கின்றன.
அவற்றில் “மஞ்சபுரி சொர்க்கபுரிக் குகைகள்” என்னும் குகைகள் சற்றே பெரியவை. இரண்டு அடுக்குகளால் ஆன குகைகள். கீழுள்ளவை மஞ்சபுரிக் குகைகள் எனப்படும். ஹாத்திக்கும்பாக் குகைக்கு மிகவும் நெருக்கமான காலத்தைச் சேர்ந்தவை இக்குகைகள். கிமு முதலாம் நூற்றாண்டில் குடையப்பட்டன. காரவேலனின் காலத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் குதேபசிரி என்பவரும் குமாரவடுகன் என்பவரும் ஆவர். அவ்விருவரில் ஒருவர் காரவேலனின் உடன்பிறப்பாக இருக்கலாம். இன்னொருவர் காரவேலனின் புதல்வராக இருக்க வேண்டும். காரவேலனின் மறைவிற்குப் பிறகு அரியணை ஏறியவர்கள். மஞ்சபுரிக் குகைகளை அவர்கள்தாம் குடைந்து தந்துள்ளனர். குகையின் நுழைவாயில் நெற்றியில் அரசரின் ஊர்வலக் காட்சிகள் இருக்கின்றன. இரண்டு பிரிப்புகளாலான நான்கு குகைகளைக் கொண்டது மஞ்சபுரி. மேலடுக்கில் இருப்பது சொர்க்கபுரி. அகன்ற முன்நிழல்முற்றப் பகுதியைக் கொண்ட சொர்க்கபுரிக் குகைகளில் இரண்டு நீளமான குடைவுகள். சொர்க்கபுரிக் குகையினைக் காரவேலனின் பட்டத்தரசி குடைந்து தந்ததைக் கூறும் மூன்றுவரிக் கல்வெட்டும் காணப்பட்டது. அரசியார் இறைப் பற்றோடு துறவிகளைப் போற்றி வணங்கியவர் என்று தெரிகிறது. காரவேலன் மரபினர் அப்பகுதியைப் பன்னெடுங்காலம் ஆட்சி செய்திருக்கின்றனர்.
அடுத்திருந்த பதலபுரிக் கும்பாவில் இரண்டு குகைக்குடைவுகள் உள்ளன. அவ்விரண்டின் முகப்பும் பைஞ்சுதைகொண்டு பூசப்பட்டதுபோல் சொரசொரப்பின்றி வழுவழுப்பாக இருந்தது. வேறு கல்தச்சுப் பணிகள் எவையுமில்லை. நாம் பார்த்த குகைகள் எவற்றிலும் கதவுகள் இல்லை. முற்காலத்தில் மரப்பொருத்தங்கள் இருந்திருக்க வேண்டும். அவை இற்றழிந்ததுபோக இன்று நமக்குக் கல்மீதங்கள் கிடைத்திருக்கின்றன என்று கொள்ள வேண்டும்.
ஏறத்தாழ எல்லாக் குகைகளையும் பார்த்தாயிற்று. கந்தகிரியில் உள்ளவையும் இவ்வகைக் குகைகளே. அவை உதயகிரியில் உள்ளவைபோன்று கல்வடிப்புகளில் கலையூட்டியவையல்ல. அதனால் அவற்றை ஒரே பார்வையில் பார்த்துக் கடந்தோம். இப்பொழுது உச்சிப்பொழுது ஆகியிருந்தது. உதயகிரிக்குச் சுற்றுலா மக்கட்கூட்டமும் வரத்தொடங்கியிருந்தது. நாம் வெளியேறலானோம்.
வெளியே வந்து பேருந்து நிறுத்தத்தில் ஒரு தேநீர் பருகியபடியே மலையில் பெருந்தோற்றத்தைப் பார்த்தேன். தன்னிடம் கூறுவதற்கு ஆயிரம் கதைகள் உள்ளனவே, அவற்றைச் செவிமடுக்காமல் வெளியேறி நிற்கிறாயே என்பதைப்போல் நின்றது அம்மலை. மலைத்தாயே… எம் மன்னர்களின் பெயர்தாங்கிய பெருந்தாய்ச்சியே… எம் தொல்குடி வாழ்க்கையின் கல்வழிச் சான்றே… இன்னும் வருவேனம்மா… உன் மடியில் என் சிறுவாழ்வின் பெரும்பொழுதுகளைக் கழிப்பேனம்மா… என்று கூறி நின்றேன். உதயகிரி கந்தகிரிக் குன்றங்களிலிருந்து கிளம்ப வேண்டிய நேரம் இஃது.
[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59]