• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கலிங்கம் காண்போம் - பகுதி 63 - பரவசமூட்டும் பயணத்தொடர்

By Ka Magideswaran
Google Oneindia Tamil News
  கலிங்கம் காண்போம்-வீடியோ

  -கவிஞர் மகுடேசுவரன்

  வளைந்து வளைந்து சென்ற தானிழுனியார் கட்டாக் நகரத்தின் தெருநெருக்கடிகள் தீர்ந்த பகுதிக்கு வந்துவிட்டார். சென்னையின் கடற்கரைச்சாலை போன்ற ஒரு நேர்ச்சாலையில் பாய்ந்து சென்றார். சாலையின் இருமருங்கிலும் நெடுதுயர்ந்த மரங்கள் வளர்ந்திருந்தன. நமக்கு வலப்புறத்தில் கட்டடங்களற்ற வெற்றுவெளி காணப்பட்டது. மகாநதியின் நீர்மேவு நிலமாக இருக்கக்கூடும். சந்தைச் சந்தடிகளிடமிருந்து தப்பித்து நகரத்தின் ஆற்றங்கரைப் பகுதிக்கு வந்துவிட்டோம் என்பது விளங்கியது. ஆம், மரங்களும் பூங்காக்களும் அடுத்தடுத்து வந்த அந்த நிலப்பரப்புக்கு அப்பால் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் மகாநதியின் நீர்ப்பரப்பு தெரிந்தது. பெயருக்கேற்ப நாட்டிலேயே பேராற்றுப் பெருக்குக்குப் புகழ்பெற்ற நதியின் நெடுங்கரையை வந்தடைந்துவிட்டோம்.

  exploring odissa kalingam - 63

  தானிழுனியார் கேட்ட தொகையைத் தந்ததும் அவர் நீங்கினார். இறங்கிய இடத்தின் இடப்புறம் அரசாங்கத்தின் மிகப்பெரிய வெட்டவெளி நிலம். அங்கேதான் கட்டாக் நகரம் தோன்றுவதற்குக் காரணமான வாராவதிக் கோட்டையும் இருந்தது. முதலில் கோட்டையைச் சென்று பார்த்துவிடவேண்டும் ஆவல் மிகுந்தது. இந்தியப் பெருமண்ணில் அலைந்தால் அதன் புவியியல் நதிகளாலும், வரலாறு கோட்டைகளாலும் நிரம்பியிருக்கின்றன என்ற முடிவுக்கே வருவீர்கள்.

  படத்தில் பாராபதி என்று இருக்கையில் நான் வாராவதி என்று பயன்படுத்துகிறேனே என்று ஐயம் பிறக்கலாம். வங்காளச் செல்வாக்கு மிக்கிருக்கும் ஒடிய மொழியில் நம்முடைய வகரம் அவர்களுக்குப் பகரம் ஆகிவிடும்.

  exploring odissa kalingam - 63

  இறங்கிய பகுதியில் இருந்த தேநீர்க் கடையொன்றில் சுடுஞ்சுவைநீர் அருந்திவிட்டு நடக்கத் தொடங்கினோம். மகாநதியாறு தன் முதற்கிளையாறான கதஜோடி ஆறாகப் பிரியுமிடத்தின் முக்கோணப்பகுதியில் நாம் இருக்கிறோம். துணையாறுகள் சேருமிடத்தில் உள்ள முக்கோணக் கூர்நிலம்போலவே கிளையாறு பிரியுமிடத்தின் முக்கோணக் கூர்நிலமும் அமைந்திருக்கும். ஆனால், துணையாற்றினால் ஏற்படுத்த முடியாத வெள்ளப்பேரிடரை கிளையாற்றுப் பிரிவிடம் ஏற்படுத்திவிடும். அதனால்தான் அங்கே தடுப்புச் சுவரெழுப்பிக் கோட்டைக் கட்டிக் காத்துக்கொள்ள வேண்டிய நிலை.

  வாராவதிக் கோட்டை ஏறத்தாழ எண்ணூற்றாண்டுப் பழைமை மிக்கது. நூற்றிரண்டு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை ஆற்றங்கரையில் அமைந்த தரைக்கோட்டையாகும். கோட்டையைச் சுற்றிலும் அகலமான அகழி இருக்கிறது. நாம் சென்று கண்ட இடத்தில் அகழி இருந்த இடத்தில் நீர்த்தாவரங்கள் அடர்ந்து பெருகியிருந்தன. கரையோரச் சாலையிலிருந்து வராவதிக்கோட்டைச் சுவரை அடைவதற்கே மாங்கு மாங்கு என்று நடக்கும்படியாயிற்று. முற்காலத்தில் ஆற்றங்கரையிலிருந்து கண்டால் கோட்டை தென்படுமாறு இருந்திருக்கும். இப்போது கட்டடங்களும் மரங்களும் கோட்டையை மறைத்து நிற்கின்றன.

  exploring odissa kalingam - 63

  கோட்டைக்குள் அகழ்ந்து ஆய்ந்தபோது முப்பத்திரண்டு பெருந்தூண்களைத் தாங்கிநின்ற அடித்தளத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது கோட்டைக்குள் கட்டப்பட்ட அரண்மனைக்கு உரியதாக இருந்திருக்கலாம். கோட்டையின் நுழைவு வாயில் மிகவும் சிறிது. ஒரு மகிழுந்து வந்தால் எதிர்ச்சாரையார் ஒதுங்கி வெளியே நின்று வழிவிடவேண்டும். கோட்டையைச் சுற்றிலும் சுண்ணாம்புக் கற்களால் ஆன பெருமதில் இருந்திருக்கிறது. இன்று அவற்றின் சிதைவுகளே மீந்திருக்கின்றன.

  நாமிருப்பது மொழியடிப்படையில் ஒடிய மாநிலம் என்றாலும் ஒரு நாடாக அதற்கு வரலாற்றில் ஒரு பெயர் இருந்திருக்கிறது. உத்கலம் என்பது அப்பெயர். உத்கலமும் வங்காளமும் கலை பண்பாடு வாழ்க்கைமுறை ஆகியவற்றில் ஏறத்தாழ ஒத்திருக்கும் இரட்டை நாடுகள். “பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா திராவிட உத்கல வங்கா” ஆகியனவே நாட்டுப்பண்ணில் இடம்பெற்றிருக்கும் இந்தியத் துணைக்கண்டத்தின் நாடுகள். அந்த உத்கல நாட்டின் ஆயிரமாண்டுத் தலைநகரம் கட்டாக். முழுமையான பெயர் வாராவதிக் கட்டாக். அந்த தலைநகரத்தின் தலைமைச் செயலகம் இன்று நான் நின்றுகொண்டிருக்கும் வாராவதிக் கோட்டை. அதன் ந்தத் தலைமைச் செயலகத்தின் தலைவாயிலில் நின்றபடி இன்றைய சூரியனின் வெய்யிலில் காய்கிறேன். அப்பெருநிலத்தின் மாமன்னர்களும் குடிமக்களும் ஆயிரக்கணக்கான முறை சென்று திரும்பிய வாயில். இன்றதன் மதிற்சுவரோரம் மகிழ்ந்து நிற்கையில் பறக்கத் தொடங்கிய சிறுபுள்ளின் மகிழ்ச்சியை நானடைந்தேன்.

  [பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64]

  English summary
  Travel Series about Odissa, Kalingam, Historic Places
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X