• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கலிங்கம் காண்போம் - பகுதி 60 - பரவசமூட்டும் பயணத்தொடர்

By Ka Magideswaran
Google Oneindia Tamil News

-கவிஞர் மகுடேசுவரன்

கட்டாக் செல்லும் சிற்றுந்தில் ஓடிச் சென்று ஏறிக்கொண்டோம். நாம் அமர்வதற்குக் காலதர் ஓரத்தில் இடம் கிடைத்தது. நாமேறிய சில மணித்துளிகளில் வண்டிக்குள் கூட்டம் அடைந்துவிட்டது. புவனேசுவரத்தின் பெருஞ்சாலைகளில் பொதுப்போக்குவரத்துக்கு என்று ஓடிய பேருந்துகளை நான் பார்க்கவில்லை. சிற்றுந்துக்காரர்கள் ஒன்றாய்க் கூடி சாலையோரத்தில் ஒரு நிறுத்தத்தை முடிவு செய்து தத்தம் வண்டிகளை நிறுத்திக்கொள்கிறார்கள். பேருந்தினைப் பிடிக்க வேண்டியவர்கள் அவ்விடத்திற்கு எப்படியாவது வந்து சேர்ந்து ஏறிக்கொள்ள வேண்டும். கூட்டம் சேர்ந்து நெரியத் தொடங்கியதும் வண்டி கிளம்பியது. இனி ஏற்றுவதற்கு எள்முனையளவும் இடமில்லை என்றால் வண்டியைக் கிளப்புகிறார்கள்.

exploring odissa kalingam 60

ஓரத்தின் குண்டு குழியில் ஏறி இறங்கியதில் ஒரு குலுக்கம் இருந்தது. பெருஞ்சாலையைப் பிடித்தவுடன் காற்றாய்ப் பறந்தது சிற்றுந்து. புவனேசுவரத்திலிருந்து கட்டாக்குக்கு ஏறத்தாழ முப்பது கிலோமீட்டர்கள்தாம். மகாநதியானது தன் கழிமுகப்பகுதியில் அகன்ற பேராறாகப் பரவி ஓடுகிறது. அப்படி ஓரிடத்தில் இரண்டாகப் பிரிந்து ஒரு தீவுப் பகுதியைத் தோற்றுவிக்கிறது. அந்தத் தீவுப் பகுதியில் உருவான ஊர்தான் கட்டாக். அதனால் கட்டாக்கை அடைவதற்கு மகாநதியைக் கடக்க வேண்டும்.

exploring odissa kalingam 60

புவனேசுவரத்திற்கும் கட்டாக்கிற்கும் இடைப்பட்ட பகுதி தற்போதுதான் நகர்மயமாகிக்கொண்டு வருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இவ்விரு நகரங்களுக்கும் இடைப்பட்ட பகுதி மகாநதியின் நீரள்ளிக் குடிக்கும் விளைநிலங்களாகவே இருந்திருக்க வேண்டும். வளர்ச்சிப் பெருக்கத்தின் நெருக்கடியால் சாலையின் இருமருங்கிலும் அடுக்ககக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் சில அரைகுறையாய் முடிக்கப்படாமலும் கிடக்கின்றன. தமிழ்நாட்டில் இவ்விரு நகரங்களும் இருந்திருப்பின் இரண்டையும் ஒரே மூட்டையில் வைத்துக் கட்டியதுபோல் வழியெங்கும் கட்டடமாய்க் கட்டி நெருக்கித் தள்ளியிருப்பார்கள். ஒடியா என்பதால் அவ்விரு நகரங்களின் இடைநிலங்கள் இதுகாறும் தப்பித்தன. அந்தத் தப்பிப்பு இப்போது முடிவுக்கு வருகிறது.

காற்றின் தழுவல் உடலுக்கு இதமாக இருந்தது. நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருக்கிறோம். எதிர்ச்சாரையில் அப்படியொன்றும் பெரிய போக்குவரத்து இல்லை. வண்டிகளின் மிதமான ஊர்தல். இடையில் மகாநதியின் கிளையாறு குறுக்கிட்டது. அதுதான் குவாகை ஆறாக இருக்க வேண்டும். அவ்வாற்றைத் தாண்டியதும் தீவுக்குள் நுழைகின்றோம்.

exploring odissa kalingam 60

கட்டாக் என்பதற்குக் கோட்டை என்று பொருளாம். மகாநதியாறு இரண்டாகப் பிரியுமிடத்தில் மிகவும் பாதுகாப்பான பகுதியில் அமைந்திருக்கிறது வாராவதிக் கோட்டை. அந்தக் கோட்டையைச் சுற்றி எழுந்த நகரமாகையால் கோட்டையின் பெயராலேயே வழங்கப்பட்டுவிட்டது. ஆயிரமாண்டுகளாக நிலைத்து நிற்கும் நகரங்களில் கட்டாக்கும் ஒன்று. ஆயிரமாண்டுப் பழைமையை நகரத்திற்குள் செல்லும்போது நன்கு உணரலாம். எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் பன்னெடுங்காலமாக சமய நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருவது இந்நகரத்தின் தனிச்சிறப்பு.

exploring odissa kalingam 60

ஒடிய மாநிலத்தின் பொருளாதாரத் தலைநகரமும் இஃதே. கட்டாக் நகரத்திற்குள் ஐம்பத்திரண்டு சந்தை வளாகங்கள் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய புவனேசுவரம் நன்கு திட்டமிடப்பட்டு ஐரோப்பியக் கட்டமைப்பில் அமைக்கப்பட்ட நகரமென்றால் கட்டாக் நகரம் எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் தானாய் உருவான நகரம். ஒடிய மாநிலத்தின் உயர்நீதி மன்றம் உட்பட, மாநிலத்தின் பற்பல தலைமையகங்களும் இன்னும் இந்நகரத்தில்தான் செயல்படுகின்றன. கல்விக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று எல்லாம் இங்கே அமைந்திருக்கின்றன.

exploring odissa kalingam 60

கட்டாக் நகரத்தில்தான் விடுதலைப் போராட்டப் பெருந்தலைவர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார். இரண்டாம் நிலை நகரமாகத் (Tier II) தரப்படுத்தப்பட்டிருக்கும் கட்டாக்கில் ஏறத்தாழ பதினெட்டு இலட்சம் மக்கள் வாழ்கின்றார்கள். மக்கள் நெருக்கம், போக்குவரத்து நெரிசல், குறுகலான தெருக்கள் என்று நகரம் மூச்சுத் திணறுகிறது. முப்பதாண்டுகளுக்கு முந்தி பழைய சேலம் எப்படி இருந்ததோ அதை நினைவூட்டியது இன்றைய கட்டாக்.

[பகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47 , 48, 49, 50,51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61]

English summary
Travel Series about Odissa, Kalingam, Historic Places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X