For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள் 13: சுதந்திரத்தின் எல்லைகள்

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

சகோதரர்களா பங்காளிகளா நினைவில்லை. இருவருக்கும் சொத்து சண்டை. இரு தரப்பிலும் பல அடிதடி, மோதல், அவமானங்களுக்கு பிறகு வழக்கம்போல லேட்டாக வந்தது தீர்ப்பு. நீதிபதி வாசித்து முடித்தார். ஒருவன் முகத்தில் வெளிச்சம். மற்றவன்

முகத்தில் இருள். முதலாமவன் நீதிபதியை கும்பிட்டுவிட்டு கிளம்பினான். மற்றவன் குனிந்து உட்கார்ந்திருந்தான்.

‘என்னப்பா, மனசு உடைஞ்சு போயிட்டியா?' கடைசி வழக்கு முடிந்ததாலும், பல ஆண்டுகளாக அறிந்திருந்ததாலும் நீதிபதி கேட்டார். நிமிர்ந்து பார்த்தவன் இல்லையென்று தலையாட்டினான். ‘ஜட்ஜய்யா சொன்னா சரியாதான் இருக்கும். அப்பீல் போக மாட்டேன்யா. அவனோட ஆளுகளோட வந்திருப்பான். போகட்டும்னு காத்திருக்கேன். ஒருவழியா கேஸ் முடிஞ்சதுல திருப்திதான்யா..' என்று வருத்தம் தோயாத குரலில் சொன்னான். நீதிபதி புன்னகையுடன் புறப்பட்டார்.

வெளியே அமைதி. எல்லாரும் போயிருப்பார்கள் என்று தோன்றியது. நீண்ட பெருமூச்சுடன் எழுந்தான். டிரைவர் தயாராக நின்றிருந்தார். எஜமான் சாந்தமான முகத்துடன் ஏறி அமர்ந்ததை வியப்பாக பார்த்தார். இவனுக்கு புரிந்தது. 'இனிம சண்ட கிண்ட இல்லாம அவனவன் ஜோலிய பாக்கலாம்ல..' என்று விளக்கம் சொல்லி, போகலாம் என்று சைகை காட்டினான்.

கேட்டுக்கு வெளியே அவர்கள் நின்றிருந்தார்கள்.

சாதகமான தீர்ப்பு பெற்றவனும் அவன் பிள்ளைகளும் அல்லக்கைகளும். போட்றா! என்று யாரோ குரல் கொடுத்ததும் சரவெடியும் மேளமும் ஒன்றாக வெடித்தன. மகிழ்ச்சிக் கடலில் கூத்தாடியது கும்பல். இவன் வெறித்துப் பார்த்தான். கும்பலுக்கு அப்பால் மரத்தடியில் இவன் குடும்பம் தலைகுனிந்து நின்றிருந்தது.

ரத்தம் மொத்தமும் தலைக்குள் பாய்ந்தது. ஓரக்கண்ணால் டிரைவரை பார்த்ததும் அவர் சடாரென இறங்கிக் கொண்டார். மின்னலாக டிரைவர் சீட்டுக்கு மாறியவன் கியரை மாற்றி ஆக்சிலேட்டரை ஆக்ரோஷமாக அழுத்தினான். கும்பலுக்குள் சீறிப் பாய்ந்தது கார்.

media

அலறல்கள் அவன் காதுகளை எட்டவில்லை.

பல ஆண்டுகளுக்கு பிறகு பிரிவுபசார நிகழ்ச்சியில் சம்பவத்தை நினைவு கூர்ந்த நீதிபதி, எல்லா வெற்றிகளும் கொண்டாடத் தகுந்தவை அல்ல என்று முடித்தார்.

காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மூன்றாவது கட்ட ஓட்டு பதிவு 9ம் தேதி நடந்தது. முதல் இரண்டு கட்டங்களிலும் எதிர்பார்ப்புக்கு மேலாக மக்கள் வாக்களித்தனர்.

அது தீவிரவாதிகளுக்கு எதிரான வெற்றி என்றும், பாகிஸ்தானுக்கு விழுந்த மரண அடி என்றும் ஊடகங்கள் வர்ணித்தன.

அந்த நிலையில் ஊரி என்ற இடத்தில் ராணுவ முகாம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏழு ராணுவ அதிகாரிகள், ஜவான்கள் உட்பட 17 பேர் கோரமாக மரணம் அடைந்தார்கள். அப்போது, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவி மெஹபூபா சொன்ன கருத்து தேசிய ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படவில்லை.

அவர் சொன்னது இது:

'தீவிரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு ஊடகங்கள்தான் காரணம் என்று நான் சொல்கிறேன். உமர் அப்துல்லா ஆட்சியில் மக்கள் ரொம்ப கஷ்டம் அனுபவித்து விட்டார்கள். அதிலிருந்து விடுபட்டு நல்ல ஆட்சியை கொண்டுவர விரும்புகிறார்கள். அதனால் ஆர்வமாக ஓட்டு போடுகிறார்கள்.

ஆனால், தேர்தலைப் புறக்கணிக்க தீவிரவாதிகள் விடுத்த மிரட்டலை துச்சமாக மதித்து, மக்கள் ஓட்டுச் சாவடிக்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். இது தீவிரவாதிகளுக்கும் அவர்களை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கும் மக்கள் கொடுத்த தோல்வி என்று ஊடகங்கள் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றன. இத்தனை சதவீதம் அத்தனை சதவீதம் என்று சொல்லி பெருமையில் குதிக்கின்றன. இதனால் தீவிரவாதிகளுக்கும் அவர்களை தூண்டிவிடுபவர்களுக்கும் ஆத்திரம் தலைக்கேறி தாக்குதல் நடத்த தூண்டுகிறது'.

மெஹபூபா சொல்வதில் மிகையில்லை. உளவியல் அடிப்படையில் பார்த்தால் அவர் சொல்வதன் உண்மை எல்லாருக்கும் புலப்படும். காஷ்மீர் பிரச்னை தீர்வுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் காஷ்மீருக்கு வெளியே வாழும் ஒரு பெரும் கூட்டம் அக்கறை கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவமும் அதில் அடங்கும். இந்திய ராணுவத்தின் அடக்குமுறையால் காஷ்மீரில் தினம் தினம் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், பாகிஸ்தானோடு சேர விரும்பும் அவர்களை இந்தியா வலுக்கட்டாயமாக தடுத்து வருகிறது என்றும் மேலைநாடுகளில் பெரும் செலவில் பிரசாரம் செய்கின்றனர். அங்குள்ள மக்களும் நம்புகிறார்கள்.

Voting

இப்படிப்பட்ட சூழலில், கொட்டும் பனியையும் பயங்கரவாதிகள் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் காஷ்மீர் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஓட்டு போடும் காட்சிகள் உலக நாடுகளை ஆச்சரியப் படுத்துகின்றன. பாகிஸ்தான் நடத்தும் பிரசாரம் பொய் என்பது அம்பலம் ஆகிறது. தீவிரவாதிகள் சாயமும் வெளுக்கிறது. இதனால் ஆத்திரத்தில் கொதிக்கும் அவர்களுக்கு ஊடகங்களின் விமர்சனம் இன்னும் எரிச்சல் ஊட்டுகிறது. ‘எங்கள் தோல்வியை நீங்கள் கொண்டாடுகிறீர்களாக்கும்?' என்று தாக்குதல் நடத்துகிறார்கள். எப்போதும்போல அப்பாவிகள் அதிகம் பலியாகின்றனர்.

‘அப்பாவி மக்களை இப்படி பலிகடா ஆக்குகிறீர்களே' என்று மெஹபூபா கேட்கிறார். நமது மதிப்புக்குரிய சுப்பிரமணிய சாமி அதற்கு பதில் சொல்கிறார் இப்படி: ‘ஆமாம், அப்படித்தான் கொண்டாடுவோம். இது எங்கள் நாடு. இப்போது நடப்பது இந்து அரசாட்சி. ஊடகங்கள் பொய் சொல்லவில்லை. பொறாமையில் வேகாதே என்று பாகிஸ்தானுக்குதான் மெஹபூபா புத்தி சொல்ல வேண்டும்'.

இதே மரியாதைக்குரிய சாமி, சில ஆண்டுகள் முன்பு இலங்கை நிலவரம் குறித்து என்ன சொன்னார், தெரியுமா? ‘விடுதலைப்புலி பயங்கரவாதிகள் கோழைத்தனமாக பெண்களையும் சிறுவர்களையும் ஏவி இலங்கை ராணுவம் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அதை இங்குள்ள சில தமிழ் அமைப்புகளும் ஊடகங்களும் புலிகளின் மகத்தான வெற்றி என்றும், ராணுவத்தின் பின்னடைவு என்றும் கொண்டாடுகின்றன. இதனால் பெரும்பான்மை சிங்களர்களும் பவுத்த பிக்குகளும் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்து ராணுவத்தை சீண்டுகின்றனர். ராணுவம் பதிலடி கொடுக்கும்போது அப்பாவி மக்களை கேடயமாக்கி புலிகள் தப்பிவிடுகின்றனர். இறுதி பாதிப்பு அப்பாவி தமிழர்களுக்கு. ஆகவே தமிழக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை' என்று சொன்னார்.

சாமி அடிக்கடி தன்னிலை மாற்றிக் கொள்பவர் என்றாலும், உளவியல் ரீதியாக இதுவும் மெஹபூபா கருத்துக்கு இணையானதுதான்.

முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை உயர்த்த சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்ததை அடுத்து மதுரையில் மக்கள் முதல்வருக்கு பாராட்டு விழா நடந்தது. வீரவாள் பரிசளித்து பலர் துதிபாடி மகிழ்வித்தார்கள். கேரள பத்திரிகைகளும் டீவி சேனல்களும் விரிவாக கவர் செய்தன. வாசகர்கள் கொந்தளித்து கடிதம் எழுதினார்களாம்.

jaya

ஒரு மலையாள நாளிதழின் ஆசிரியர் சொன்னார்:

‘அணை ரொம்ப பழசு என்பதால் உடைந்து விடுமோ என்ற பயம் ஜனங்களுக்கு இருக்கிறது. அது உண்மையான பயம். ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகு அநேக மலையாளிகள் அதை ஏற்றுக் கொண்டார்கள். என்றாலும் ஜெயலலிதா கேரள மக்களை போரில் ஜெயித்தது போல விழா நடத்தி அவரை பாராட்டியது அவர்கள் மனதைப் புண்படுத்தி விட்டது. நாமென்ன பகை நாடுகளா? குட்டி தலைவர்கள் கொண்டாடினால் பரவாயில்லை. அவர் ஒரு அறிக்கை விட்டு, இதில் வெற்றி தோல்வியெல்லாம் கிடையாது.

தீர்ப்பு சாதகமாக வந்தாலும் கேரள மக்களின் பாதுகாப்பை தமிழகம் உறுதி செய்யும் என்று மட்டும் சொல்லியிருந்தால் இந்த விவகாரத்தால் ஏற்பட்ட கசப்பெல்லாம் கரைந்திருக்கும்'.

சரியா தவறா என்பதைக் காட்டிலும் இழந்தவன் மனதில் ஏற்படும் வலி நிஜமானது. அந்த காயத்தைக் கிளறி விடுவதால் என்ன லாபம்?

‘பல தலைமுறையா செஞ்சுகிட்டு வரோம்ங்க. அத ஏதோ புதுசு மாதிரி நீங்க போட்டோ செய்தில்லாம் போட்டதால, எங்க ஆளுகளே திட்றாங்க. இதெல்லாம் விட்ருனு வாலிப பசங்க மிரட்றாங்க' என்று ஒரு முஸ்லிம் பெரியவர் வந்து முறையிட்டார்.

கோயில் சப்பரங்களை அலங்கரிக்கும் வேலையை அவர் குடும்பத்தினர் செய்து வந்தனர். அழகுணர்ச்சி மிகுந்த உழைப்பாளிகள்.

அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு ஆசிரியர் ஆர்கே சொன்னார். ‘கண்ல பட்டது, காதுல விழுந்தது எல்லாத்தையும் செய்தியா மக்களுக்கு சொல்லணும்னு அவசியம் இல்லப்பா. பல கோணங்கள்ல யோசிச்சு தீர்மானிக்கணும். குறிப்பா அதுல சம்பந்தப்பட்டவங்க கோணத்துல'.

எடிட்டிங் கலையின் பாலபாடம். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றி வருகிறேன். தெரிந்ததில் பாதியை செய்தியாக்கி இருந்தால் அதிகம்.

எல்லாராலும் ஏன் இயலவில்லை என்று யோசிக்கிறேன்!

-தொடரும்

English summary
The 13th episode of Kathir's Thaazha Parakkum Kakkaigal discusses about the ethics of Journalism and how to portray the burning issues in media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X