For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்றும் ஒரே எஸ்பி.எம்!

By Shankar
Google Oneindia Tamil News

-சுப.வீரபாண்டியன்

ஒரு ஞாயிறு இரவு. புகழ்பெற்ற நிகழ்ச்சி ஒன்று, தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 'அண்ணனா... தம்பியா..?' என்ற பொருளில் அன்றைய விவாதம். திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்துராமன், அண்ணன்களின் தரப்பிலும்; சுப.வீரபாண்டியனாகிய நான், தம்பிகளின் தரப்பிலும் விருந்தினர்கள். எங்கள் இருவரையும் தனித்தனியாக அறிந்திருந்த நண்பர்கள் சிலர், அன்றுதான் நாங்கள் இருவரும் உடன்பிறந்த 'அண்ணன் - தம்பி' என்பதை அறிந்துகொண்டனர்.

'நீங்கள் இருவரும் பல்வேறு சிந்தனைப் போக்குகளிலும், வாழும் முறைகளிலும் வேறுபட்டு இருக்கிறீர்கள். உடை உடுத்துவதில்கூட நீங்கள் எப்போதும் வெள்ளை உடை, உங்கள் தம்பி எப்போதும் கறுப்புச் சட்டை. ஆனால், இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடையவர்கள் எனக் கேள்விப்படுகிறோம். அது எப்படி?' - இதுதான் அண்ணனிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி. அதற்கு அவர் சொன்ன விடை, கவித்துவமானது; மறக்க முடியாதது. 'கண்களில்கூடக் கறுப்பும் வெள்ளையும் கலந்துதானே இருக்கிறது' என்றார்.

SPM 80 - Subavee Specioal article

அவரைவிட நான் 17 ஆண்டுகள் இளையவன். எனவே அண்ணன் - தம்பி உறவாக இருந்தாலும், அப்பா - பிள்ளைபோல் ஒரு தலைமுறை இடைவெளி இருக்கவே செய்தது. பிறகு, அவர் காட்டிய அன்பும் நெருக்கமும் அந்த இடைவெளியைக் குறைத்தன. அவருக்கு முன்னால் பிறந்த ஓர் அண்ணன் ஐந்து வயதிலும், இடையில் ஓர் அக்கா 32 வயதிலும் இறந்துபோய்விட்ட பிறகு, இப்போது நாங்கள் ஐவர் உடன்பிறந்தவர்கள். அவர், எல்லோருக்கும் மூத்தவர்; நான் இளையவன். இடையில் அண்ணன்கள் இருவர்; அக்கா ஒருவர்.

எங்கள் குடும்பத்தில் அனைவரும் இன்று வரை அவர் பேச்சுக்குக் கட்டுப்பட்டே நிற்கிறோம். என்னைத் தவிர அவர்கள் அனைவரும் 70 வயதைத் தொட்டும்; கடந்தும் நிற்பவர்கள். ஆனால், இந்த வயதிலும் பெரியவரைக் கேட்காமல் எந்த இறுதி முடிவையும் எவரும் எடுப்பது இல்லை.

நான் குடும்ப விழா ஒன்றில் சொன்னேன்... 'எங்கள் பெரிய அண்ணன் போடும் கோட்டை நாங்கள் யாரும் தாண்டுவது இல்லை. எப்போதாவது தாண்டுவோம் எனத் தெரிந்தால், அவர் கோடு கிழிப்பது இல்லை'. அவர் இறுதியில் பேசும்போது, 'அப்படி எப்போதாவது தாண்டுகிறவன் இவன்தான்' என்றார்.

அவருக்கும் எனக்கும் இப்போது கருத்துவேறுபாடுகள் இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், சுயமரியாதைக் குடும்பப் பெற்றோருக்குப் பிறந்த காரணத்தால் (காரைக்குடி இராம.சுப்பையா-விசாலாட்சி) அண்ணனும் தொடக்கத்தில் கறுப்புச் சட்டைக்காரராகத்தான் இருந்தார். அவருடைய கொள்கை உறுதியை 64 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய கடிதம் ஒன்று எடுத்துக்காட்டுகிறது. அப்போது நான் பிறக்கக்கூட இல்லை. 30.01.1952 அன்று, பள்ளி மாணவனாக இருந்த அவர், எங்கள் பெற்றோருக்கு எழுதிய கடிதம் அது. என் அம்மா தந்த அந்தக் கடிதத்தை, இன்றும் நான் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.

அப்போது எல்லாம் பள்ளிப்பருவத்திலேயே திருமணம் செய்துவைத்துவிடுகிற வழக்கம் உண்டு. அதன் அடிப்படையில், 17 வயதுகூட நிரம்பாத அவருக்குத் திருமணப் பேச்சு நடைபெறுவதை மறுத்து, அவர் எழுதிய கடிதம் அது. மிகுந்த பொறுப்புஉணர்ச்சியோடும் வருத்தத்தோடும் இப்போது திருமணம் வேண்டாம் என்பதற்கான எல்லா காரணங்களையும் எழுதிவிட்டு, இறுதியில், 'மேலும் நீங்கள் கட்டாயப்படுத்தினால், பெற்ற மனதைப் புண்படச்செய்யவோ, ஆயாவின் அன்பு மனதை அழவைக்கவோ, உற்றார்- உறவினரின் உள்ளங்களை உருகவைக்கவோ விரும்பவில்லை. ஒப்புக்கொள்கிறேன்' என்கிறார்.

வேறுவழி இன்றி திருமணம் ஏற்பாடு செய்யப்படுமானால், சில நிபந்தனைகளை மட்டும் அவர் வலியுறுத்துகிறார்... 'பெண்ணைப் பற்றிய பேச்சை என்னிடத்தில் பேச வேண்டாம். உங்கள் உள்ளத்துக்குப் பிடித்திருந்தால், அதுவே போதும். நம் கொள்கைக்கு ஏற்ற பெண்ணாகவே இருக்கட்டும். மேலும், கனகம் திருமணத்தைப் போல் அரைகுறை சீர்திருத்தமும் சடங்குகளும் வேண்டாம். பூரண சீர்திருத்தமாகவே இருக்கட்டும். இங்கு மாணவர்கள், 'சீர்திருத்தக்காரன் முத்துராமன் எப்படித் திருமணம் செய்துகொள்ளப்போகிறான் பார்ப்போம்' எனக் கச்சை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.'

இப்படி இருந்த என் பெரிய அண்ணன் முத்துராமனை, திரையுலகம் பிறகு கொஞ்சம் மாற்றித்தான்விட்டது. கறுப்புச் சட்டை வெள்ளைச் சட்டையானது. அவருடைய கடிதம்வைத்த கோரிக்கையை, எங்கள் பெற்றோர் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்போல் இருக்கிறது. அதன் பின் அவருடைய திருமணம் தள்ளிவைக்கப்பட்டு, 1957-ல்தான் நடைபெற்றது.

1997-ம் ஆண்டு எங்கள் அப்பா இறந்துபோனபோது, அவர் காட்டிய ஜனநாயகம் குறிப்பிடத்தக்கது. அவருடைய இறுதிச் சடங்குகள் குறித்து உறவினர்கள் எல்லோரும் பேசத் தொடங்கியபோது, அனைவரையும் பார்த்து அண்ணன் சொன்னார்... 'அப்பா சுயமரியாதைக்காரராகவே கடைசி வரை வாழ்ந்தவர். எனவே, அவருடைய இறுதி நிகழ்வுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் எல்லோரும் முடிவுசெய்வதைவிட, அதே கொள்கையில் இன்றும் இருக்கிற பாண்டியன் முடிவுசெய்வதுதான் சரி. அவன் எப்படிச் சொல்கிறானோ, அப்படிச் செய்யலாம்...' என்றார்.

நான் உள்பட யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. எந்தச் சடங்கும் இல்லாமல் அப்பாவின் உடல் எரியூட்டப்பட்டது. 'கொள்ளிச் சட்டி எடுத்துக்கொள்ளலாமா?' என அவர் கேட்டபோதுகூட, 'வேண்டாம். அது நெருப்பு உருவாக்குவதற்கு நேரமான காலத்து மரபு. அங்கே போய்ப் பார்த்துக்கொள்ளலாம்' என்றேன். அதற்கும் உடன்பட்டார். பெண்கள் பொதுவாக சுடுகாட்டுக்கு வருவது இல்லை என்பார்கள். அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் பெண்களும் கலந்துகொண்டனர். வழக்குரைஞர் அருள்மொழி அங்கு வந்து இரங்கல் உரை ஆற்றினார்.

அவருடைய படங்கள் சிலவற்றை, நான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். அப்போதும் அவர் கோபப்பட்டது இல்லை. 'ராணுவவீரன்' படத்தின் முன்காட்சியைப் பார்த்துவிட்டு, 'புரட்சியாளர்களை இந்தப் படம் இழிவுபடுத்துகிறது' என வாதம் செய்துகொண்டிருந்தேன். அப்போது அங்கு நின்று இருந்த நடிகை சுமலதா, உதவி இயக்குநரிடம், 'யார் இவர், இயக்குநரோடு போய் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறாரே?' எனக் கேட்டிருக்கிறார். 'இயக்குநரின் தம்பிதான் அவர்' என்ற பதிலை நம்ப முடியாமல் அவர் கேட்டுக்கொண்டாராம்.

SPM 80 - Subavee Specioal article

1992-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக நான் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். ஒருநாள், சிறைக் கண்காணிப்பாளர் என்னை அவர் அறைக்கு அழைத்தார். உள்ளே நுழைந்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி. அங்கே அண்ணன் அமர்ந்திருந்தார். அருகில் நடிகை குஷ்பு. 'பாண்டியன்' திரைப்படத்தில் ஒரு காட்சியை எடுப்பதற்காக அங்கு அவர்கள் வந்துள்ளனர். அப்போது அவருடைய தம்பிதான் நான் எனத் தெரிந்து வைத்திருந்த கண்காணிப்பாளர், என்னை அங்கு வரவழைத்து இருவருக்கும் ஓர் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார். குஷ்புவுக்கு, 'இயக்குநரின் தம்பி ஏன் சிறையில் இருக்கிறார்?' என ஒரே குழப்பம்.

அதே 'பாண்டியன்' படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில்தான், 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அண்ணி திடீரென இறந்துபோனார். அண்ணன் அப்படிக் குலுங்கிக் குலுங்கி அழுததை, அன்றுதான் நாங்கள் முதன்முதலில் பார்த்தோம்.

'மனைவி இறந்தால், வாழ்வில் பாதி போய்விடும் என்பார்கள். எனக்கோ முழுவதும் போய்விட்டது' என்றார். ஆனால், அந்தத் துயரத்தையும் தாண்டி அடுத்த சில நாட்களிலேயே அவர் 'பாண்டியன்' படப்பிடிப்புக்குப் புறப்பட்டுவிட்டார். ஏவி.எம். சரவணன் சார்கூட, 'வேண்டாம் முத்துராமன் சார், படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்துவிடலாம்'

என்றார். ஆனால், அண்ணன் கேட்கவில்லை. 'என் சொந்தத் துயரத்துக்காக, பலருடைய வாழ்வில் நட்டம் ஏற்படுத்தக் கூடாது' எனக் கூறிவிட்டார்.

அண்ணன், புலால் உணவை விரும்பி உண்பார். ஒருநாள், திடீரென புலால் உண்பதை நிறுத்திவிட்டார். எங்களில் யாருக்கும் காரணம் புரியவில்லை. பல முறை கேட்ட பின், நடந்ததைக் கூறினார். வள்ளலார் பற்றி தொலைக்காட்சிப் படம் ஒன்று எடுப்பதற்காக வடலூர் சென்றிருக்கிறார். அங்கே, 'கொலை, புலை தவிர்த்தோர் மட்டும் உள்ளே வருக' என்ற அறிவிப்புப் பலகை அவர் நெஞ்சை உறுத்தியுள்ளது. வள்ளலார் குறித்து நிறைய நூல்களைப் படித்து, அவரை அறிந்துகொண்ட பின் ஏற்பட்ட தாக்கம், உடனடியாக ஒரு முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது. 'இந்த நிமிடத்தில் இருந்து புலால் உண்பது இல்லை' என்ற முடிவோடு உள்ளே கால்வைத்த அவர், இன்று வரை புலால் உண்பது இல்லை.

1960-களின் இறுதியில் வடபழநி, கே.ஏ.டி நகரில் குடியிருந்தபோது, வேட்டி சட்டையுடன் ஓட்டை மிதிவண்டி ஒன்றில்தான், அலுவலகம் போய் வருவார். நான் அப்போது பார்த்த அண்ணனுக்கும், 80-களில் ரஜினி, கமல் இருவரையும் ஒரே நேரத்தில் வெவ்வேறு படங்களில் இயக்கிக்கொண்டிருந்த... புகழின் உச்சத்தில் இருந்த அண்ணனுக்கும், 80 வயதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஓடிக்கொண்டே இருக்கும் இன்றைய அண்ணனுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. அவர் எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கிறார். இந்த அதிசயத்தை அவரால் எப்படி நிகழ்த்த முடிகிறதோ தெரியவில்லை!

வரும் ஏப்ரல் 7-ம் தேதி, அண்ணனுக்கு 80 வயது நிறைகிறது. சின்னதாகவேனும் ஒரு விழா எடுக்க எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் ஆசை. ஆனால், அண்ணன் ஏற்கவில்லை. எங்கள் அண்ணி இறந்துபோய் 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றில் இருந்து இன்று வரை, தனக்கென எந்த விழாவும் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். 'கமலா இல்லாமல் எனக்கு எந்த விழாவும் இல்லை' என்கிறார்.

'என் பிறந்த நாள் கணக்குப்படி எனக்கு வயது 80; ஊக்கம் நிறைந்த என் உடலுக்கு வயது 50; உள்ளத்தின் வயதோ வெறும் 20-தான்' என்பார் அண்ணன்.

இருபதே வயதில் அவர் எந்நாளும் வாழ்க...வாழ்க!

-நன்றி: விகடன்

English summary
Subavee's special article published in Vikatan about his elder brother, the legendary SP Muthuraman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X